ஹோம் /நியூஸ் /வணிகம் /

வீட்டை விற்பனை செய்யும் முன்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.!

வீட்டை விற்பனை செய்யும் முன்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.!

வீடு விற்பனை

வீடு விற்பனை

House Selling Tips | எந்தக் காரணத்திற்காக நீங்கள் வீட்டை விற்பனை செய்தாலும், பல நாட்களுக்கு வீடு குறித்த சிந்தனை நம் மனதை விட்டு அகலாது. ஆகவே வீடு விற்பனை செய்யும் முன்பாக சில விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாம் வாழ்நாள் எல்லாம் கஷ்டப்பட்டு உழைத்து, சேமித்து வாங்கிய வீட்டை விற்பனை செய்வது நிச்சயமாக மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருக்காது. சில சமயம், உங்கள் பூர்வீக சொத்துக்களை நீங்கள் விற்பனை செய்ய முயற்சிக்கலாம். சொந்தமாக வாங்கியிருந்தாலும் அல்லது பூர்வீக சொத்து என்றாலும், வீடு ஒரு அசையா சொத்து தான். ஆனால், அதற்கும் நமக்கும் இடையே ஒரு உயிர் பந்தம் இருக்கத்தான் செய்யும்.

வேறொரு புதிய முதலீடு செய்வதற்காக அல்லது வேறு ஊரில், நாடுகளில் குடியேறுவதற்காக அல்லது கடன் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக என எந்தக் காரணத்திற்காக நீங்கள் வீட்டை விற்பனை செய்தாலும், பல நாட்களுக்கு வீடு குறித்த சிந்தனை நம் மனதை விட்டு அகலாது. ஆகவே வீடு விற்பனை செய்யும் முன்பாக சில விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வீட்டின் மூலம் வருமானம் வருகிறதா?

ஒரே அடியாக வீட்டை விற்பனை செய்வதைக் காட்டிலும், வீடு வாடகைக்கு விடப்பட்டிருந்தால் அதன் மூலமாக என்ன வருமானம் வந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் கணக்கீடு செய்து கொள்ள வேண்டும். இதில், பராமரிப்பு செலவு, வரி போன்றவற்றை கழித்து நிகர வருமானத்தை கணக்கீடு செய்ய வேண்டும்.

ஒருவேளை இதுவரையில் வாடகைதாரர்களை குடி வைக்கவில்லை என்றாலும், இனி எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை கணக்கீடு செய்து கொள்ள வேண்டும். அதேபோல, வெளியூர்களுக்கு அல்லது வெளிநாடுகளுக்கு தற்காலிகமாக செல்பவர் என்றால், பின்னாளில் நாம் தங்குவதற்கு இந்த வீடு தேவைப்படுமா என்பதை சிந்தித்துக் கொள்ள வேண்டும்.

பணத்தேவை இருக்கிறதா

உங்கள் பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி மூலமாக வந்த பூர்வீக சொத்து என்றாலும், அந்த வீட்டை தக்க வைத்துக் கொள்ள முன்னுரிமை கொடுங்கள். உண்மையிலேயே அந்த வீட்டை விற்றுதான் நமது பணத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக் கூடிய சூழல் இருக்கிறதா என்பதை பரிசீலனை செய்து கொள்ளுங்கள்.

நம் பூர்வீக உணர்வுகளை பணத்தால் ஒருபோதும் ஈடு செய்ய இயலாது. ஆகவே, நமக்கு முதன்மை தேவை உணர்வுகளா அல்லது பணமா என்பதை யோசனை செய்து கொள்ள வேண்டும்.

Also Read : ஏற்கெனவே கட்டிய வீட்டை வாங்கப் போறீங்களா? ஏமாறாமல் இருக்க இதையெல்லாம் செக் பண்ணுங்க!

சொத்தின் வயது என்ன

வீட்டின் ஆயுட்காலம் குறைந்து வருகிறது என்ற காரணத்தால், புது வீடு கட்டிக் கொள்ளும் எண்ணத்திலும் கூட சிலர் வீட்டை விற்பனை செய்ய முன்வரலாம். அத்தகைய சூழலில், வீடு கட்டி முடித்து எத்தனை ஆண்டுகள் ஆகியுள்ளன, தற்போது வீட்டின் ஸ்திரத்தன்மை எந்த அளவுக்கு பலமாக இருக்கிறது? இது இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நீடித்து நிற்கும் என்பதை எல்லாம் நாம் கணக்கீடு செய்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக, நீங்கள் எவ்வளவு செலவு செய்தாலும் இனி வீடு சேதமடைவதை தடுக்க முடியாது என்று தெரிந்தால், அதை தயங்காமல் விற்பனை செய்து கொள்ளலாம்.

எவ்வளவு கால அவகாசத்திற்குள் விற்பனை செய்ய வேண்டும்

வீட்டை விற்பது என்று முடிவு செய்து விட்டால், இன்னும் எவ்வளவு நாட்களுக்குள் அதை விற்பனை செய்ய வேண்டும் என்பதை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக, அண்மைக் காலத்தில் நம் பகுதியில் நம்முடைய வீட்டைப் போலவே ஏதேனும் வீடு விற்பனை செய்யப்பட்டிருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு, அதற்கு ஈடாக மதிப்பீடு செய்ய வேண்டும்.

Also Read : சொத்து பத்திரங்கள் தொலைந்து போனால் உடனே செய்யவேண்டிய 5 விஷயங்கள்!

பணத்தை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்

எந்தவித காரணமும் இலக்கும் இல்லாமல் வீட்டை விற்பனை செய்யக் கூடாது. எதற்காக வீட்டை விற்பனை செய்யப் போகிறோம், அந்தப் பணத்தை வைத்து என்ன செய்யப் போகிறோம் என்ற தெளிவான திட்டமிடல் உங்களுக்கு இருக்க வேண்டும். வீட்டை விற்று, அந்தப் பணத்தை சந்தையில் அல்லது வேறு ஏதேனும் ஒரு வகையில் முதலீடு செய்கிறீர்கள் என்றால், அதன் மூலமாக எந்த அளவுக்கு லாபம் கிடைக்கும் என்பதை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

சந்தை மதிப்பு கணக்கீடு

சந்தை விலையில் இருந்து குறைவான விலைக்கு நம் வீட்டை விற்பனை செய்து விடக் கூடாது. ஆகவே, நம் வீட்டிற்கு இப்போதைய சந்தை மதிப்பு என்ன என்பதை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். ரியல் எஸ்டேட் தரகர்கள் சொல்வதை முழுவதுமாக நம்பி விடாமல், களத்தில் என்ன உண்மை நிலவரம் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

Also Read : வீட்டுக்கடன் வாங்கும் போது நிலையான வட்டி விகிதத்தைத் தவிர்க்க வேண்டுமா? - பொருளாதார நிபுணர்கள் சொல்வது என்ன?

ஆவணங்களை சரிபார்த்தல்

சொத்து தொடர்பான ஆவணங்களை நாம் சரிபார்க்க வேண்டும். குறிப்பாக பூர்வீக சொத்தாக இருப்பின், அது யார் பெயரில் உள்ளது, அதை விற்பனை செய்ய ஏதேனும் தடங்கல் உள்ளதா என்பதை நாம் ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளை எட்ட வேண்டும். தேவையான ஆவணங்கள் எல்லாவற்றையும் சரி செய்த பிறகே, விற்பனை குறித்த பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும்.

Published by:Selvi M
First published:

Tags: Houses Built project