• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • பணத்தை சேமிப்பதை விட முதலீடு செய்வது எப்படி சிறப்பானது - முக்கிய வேறுபாடுகள் என்ன?

பணத்தை சேமிப்பதை விட முதலீடு செய்வது எப்படி சிறப்பானது - முக்கிய வேறுபாடுகள் என்ன?

சேமிப்புகள்

சேமிப்புகள்

முதலீடு செய்வதற்கான முதல் படி சேமிப்பு தான் என்றாலும், சேமிப்பு மற்றும் முதலீடு என்று வரும் போது இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை கண்டிப்பாக ஒருவர் தெரிந்து கொள்வதும், புரிந்து கொள்வதும் அவசியம்.

  • Share this:
    நம் வாழ்வில் ஒரு நல்ல பொருளாதார அடித்தளத்தை உருவாக்குவதற்கான முக்கியமான இரு வழிகளாக சேமிப்புகள் (savings) மற்றும் முதலீடுகள் (investments) ஆகிய இரண்டும் உள்ளன. எனவே எதிர்காலத்தில் சிறந்த நிதி ஆதரமிக்க வாழ்க்கையை பெறுவது குறித்த நம் பேச்சுக்களின் போது சேமிப்புகள் மற்றும் முதலீடுகள் பற்றிய விஷயங்கள் தான் அதிகம் இடம்பெறும். ஆனால் இந்த இரண்டு விஷயங்களும்,செயல்பாடுகளும் ஒன்றல்ல வேறு வேறு என்பதை ஆழமாக உணராமலே ஒன்றுக்கொன்று மாற்றாக இந்த இரு வார்த்தைகளையும் நம்மில் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகிறோம்.

    பெரும்பாலானோர் தங்களது வங்கியின் சேவிங்ஸ் அக்கவுண்ட்டில் நிறைய பணத்தை சேர்த்து வைத்திருப்பதே போதும், தாங்கள் முதலீடு செய்து விட்டதாக நினைத்து கொள்கிறார்கள். முதலீடு செய்வதற்கான முதல் படி சேமிப்பு தான் என்றாலும், சேமிப்பு மற்றும் முதலீடு என்று வரும் போது இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை கண்டிப்பாக ஒருவர் தெரிந்து கொள்வதும், புரிந்து கொள்வதும் அவசியம். முக்கியமாக முதலீடு செய்வதை சேமிப்பது என்ற வார்த்தையை கொண்டு எப்போதுமே குழப்பி கொள்ள கூடாது. ஒருவர் தனது பொருளாதார நிலையை பன்மடங்கு உயர்த்தும் முயற்சிகளானது முதலீடு என்பது சேமிப்புக்கு சமமானதல்ல என்பதை அறிந்து கொள்ளும் போது தான் தொடங்குகிறது. எனவே சேமிப்பு மற்றும் முதலீடு இரண்டிற்குமான முக்கிய வேறுபாடுகள் மற்றும் இரண்டில் எது உண்மையில் சிறந்த பலனை கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்..

    அர்த்தம்..

    * சேமிப்பு என்பது உங்கள் மாத வருமானத்தில் வாடகை, உணவு, எரிபொருள் செலவுகள் மற்ற பிற குடும்ப செலவுகள் உள்ளிட்ட வழக்கமான மாதாந்திர செலவுகள் போக உங்கள் வங்கி கணக்கில் மீதமுள்ள பணம் ஆகும். மாதாமாதம் செலவுகள் போக எஞ்சும் பணம் மட்டுமே சேமிப்பில் சேரும்.

    * அதுவே மறுபுறம் முதலீடு என்பது முதலீடு செய்யப்படும் பணத்தின் மீது வருவாயைப் பெறுவதற்காக பரஸ்பர நிதிகள், தங்கம் மற்றும் பிறவற்றில் பயன்படுத்தப்படும் சேமிப்பின் ஒரு பகுதி ஆகும். ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவற்றின் மீது முதலீடு செய்யப்படும் பணத்தின் வருமான வட்டி வடிவில் பெறப்படுகிறது. பரஸ்பர நிதிகள் அதாவது மியூச்சுவல் ஃபண்ட்ஸ் போன்ற முறைகளில், முதலீடு செய்யப்படும் தொகைகளின் மதிப்பு அதிகரிப்பதன் மூலம் உங்கள் வருமானம் மற்றும் சேமிப்பு அதிகரிக்கிறது.

    குறிக்கோள்:

    * சேமிப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இருவருமே பணத்தைச் சேமிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்தே செயல்படுகிறார்கள். முன்னர் குறிப்பிட்டது போல ஒவ்வொரு மாதமும் வருமானத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைப்பதன் மூலம், எதிர்பாராத நிகழ்வுகளுக்கோ அல்லது அவசர காலங்களுக்கோ பணத்தை பயன்படுத்தி கொள்வதை சேமிப்புகள் குறிக்கோளாக கொண்டுள்ளன. ஆனால் தொடர்ந்து பணத்தை சேமித்து கொண்டே செல்வதால் மட்டும் செல்வம் உயர்ந்து விடாது. பல மாதங்கள் சேமித்து வைக்கும் பணம் ஒரே செலவில் சட்டென்று கரைந்து விடும்.

    * அதுவே முதலீடு என்பது கார் அல்லது வீடு வாங்க திட்டமிடுவது, பிள்ளைகளின் உயர்கல்விக்குத் திட்டமிடுவது போன்ற பல குறுகிய மற்றும் நீண்ட கால நிதி இலக்குகளை அடைய உதவுகிறது. நிதிப் பத்திரங்கள், பரஸ்பர நிதி போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்யும் முயற்சிகள் உயர் குறிக்கோள்களை அடைய பெரிதும் உதவுகின்றன.

    காலம்..

    * நிதி தேவைகளுக்காக முதலீடு செய்யும் காலத்திலிருந்து சேமிப்பிற்கான காலம் கணிசமாக மாறுபடும். ஏதேனும் அவசரநிலை காலங்களில் பணத்தேவையை பூர்த்தி செய்து கொள்வதவதற்கான விருப்பத்துடன் நீங்கள் விரும்பும் வரை உங்கள் சேமிப்புத் தொகை உங்கள் வங்கியின் சேமிப்புக் கணக்கில் இருக்கும்.

    * வீடு மற்றும் வாகனங்கள் வாங்குவது, ஓய்வுக்கு பிந்தைய காலத்தை திட்டமிடுவது உள்ளிட்ட பெரிய நிதி இலக்குகளுக்கான முதலீட்டு காலங்கள் மற்றும் திட்டங்கள் 15 ஆண்டுகள் வரை இருக்கின்றன.

    அபாயங்கள்..

    * சேமிப்பிற்கான அபாயத்தை பொறுத்தவரை பிரபல வங்கியின் வாடிக்கையாளராக உங்கள் சேமிப்பை வைத்திருக்கும் பட்சத்தில், நிலையான விகிதத்தில் வட்டி வருமானம் பெற்று கொள்ள முடியும். அதே போல சேமிப்பின் மீதான வட்டி வருமானம் கிடைக்காமல் போவதற்கான சந்தர்ப்பம் மிகவும் குறைவு.

    * ஷேர்கள் அல்லது மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வது என்பது முற்றிலும் வேறுபட்டது. உங்கள் முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை என்றாலும், எப்போதும் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மற்றும் சந்தையுடன் இணைக்கப்பட்ட பிற பத்திரங்களில் முதலீடு செய்வது சிறந்த பலனை தரும்.

    முதலீடு ஏன் அவசியம் மற்றும் சேமிப்பை விட எப்படி சிறந்தது என்பதற்கான காரணங்களை மேலே பார்த்தோம். புரியும்படி சொல்வதென்றால் கிரிக்கெட்டை எடுத்து கொள்ளுங்கள். 50 ஓவர் மேட்சின் 10-வது ஓவரில் , ஒரு அணி விக்கெட்டுகளை வரிசையாக இழந்து 6-வது பேட்ஸ்மேன் இறங்கி விட்டார் என்றால் மீதமுள்ள 40 ஓவர்களையும் விக்கெட்டை இழக்காமல் விளையாடி ரன்களையும் சேர்க்க கவனம் செலுத்த வேண்டும் இல்லையா?

    இதே போல தான் ரன்களை எடுப்பதற்கு எப்படி விக்கெட் தேவையோ அது போல பெரும் தொகைநிதி இலக்கை பேர் விரும்பும் ஒருவர், பணவீக்கத்தை எதிர் கொண்டு குறிப்பிட்ட சில முதலீட்டு அபாயங்களை தைரியமாக சந்திக்க வேண்டும். மேற்சொன்ன கிரிக்கெட் உதாரணத்தை வைத்து மற்றுமொரு முக்கிய விஷயம் சொல்வது என்றால், அவுட்டும் ஆக கூடாது அதே சமயம் ரன்களையும் சீராக குவிக்க வேண்டும். அதாவது முதலீட்டு விஷயத்தில் ஒருவர் கணக்கிடப்பட்ட அபாயங்களை (தெளிவான ஷாட்) எடுக்கும் அதே நேரத்தில், தேவையற்ற அபாயங்களை எதிர்கொள்ள நினைப்பது இக்கட்டான நேரத்தில் மோசமான ஷாட் அடிப்பதற்கு சமம்.

    அவசரகால தேவைகளை அல்லது எதிர்ப்பாரா பொருளாதார சிக்கலை தீர்க்க சேமிப்பு எந்த அளவிற்கு அவசியமோ, நீண்டகால இலக்குகளை அடைவதற்கு சரியான மற்றும் உரிய முதலீடு என்பது முக்கியமானது மற்றும் அவசியமானது. பண மேலாண்மைக்கான முதல் படியாக சேமிப்பு பார்க்கப்படும் அதே நேரத்தில், உரிய தொகை போக மீதமுள்ள உங்கள் சேமிப்பு பணத்தை கொண்டு மேலும் பணம் ஈட்டும் உத்தியான முதலீடு என்பது புத்திசாலித்தனமாக பார்க்கப்படுகிறது.

    முதலீடு செய்ய தயாராகி விட்டீர்கள் என்றால் உங்கள் நிதி நோக்கங்களுக்கு ஏற்ப இருக்கும் முதலீட்டு விருப்பங்கள் குறித்து நன்கு ஆராய்ந்து, அதிலிருக்கும் அபாயங்களை கணக்கிட்டு அதன் பிறகு அதற்கேற்ற தொகையை முதலீட்டில் செலுத்துங்கள். அதேபோல நீங்கள் பணத்தை முதலீடு செய்ய விரும்பினால், குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு உங்கள் நிதியை முதலீட்டில் வைக்க திட்டமிடுங்கள்ம். ஏனெனில் குறுகிய கால முதலீடுகள் மிகவும் நிலையற்றவை. மேலும் குறிப்பாக ஓரிரு வருடங்களுக்கு உங்களுக்கு தேவைப்படாத நிதியை மட்டுமே முதலீடு செய்கிறீர்கள் என்பதை உறுதி செய்வதும் நல்லது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: