2020ல் இன்டர்நெட் சேவை முடக்கம் காரணமாக இந்தியாவுக்கு 2.8பில்லியன் டாலர்கள் இழப்பு!

2020ல் இன்டர்நெட் சேவை முடக்கம் காரணமாக இந்தியாவுக்கு 2.8பில்லியன் டாலர்கள் இழப்பு!

இணையதளம்

இன்டர்நெட் முடக்கம் எந்த வகையில் பொருளாதாரத்தை பாதிக்கிறது என்பதை அறிந்துக்கொள்ள இதை படியுங்கள்..

  • Share this:
இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் 70% வேலை இன்டர்நெட் சேவை மூலமாகவே நடைபெறுகின்றன. இந்த நிலையில் இன்டர்நெட் சேவைகள் முடக்கப்படுவதால் பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அந்த வகையில் கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் 8,927 மணிநேர இன்டர்நெட் வசதி முடக்கப்பட்டதாக ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளது. மேலும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா தனது குடிமக்களின் இணைய அணுகலை அதிக நேரம் நிறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார இழப்புகளும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

சமீபத்தில் டாப் 10 வி.பி.என் வெளியிட்டுள்ள குளோபல் காஸ்ட் ஆப் இன்டர்நெட் ஷட்டவுன்ஸ் என்ற அறிக்கையில் இந்தியாவில் மட்டும் ஏற்பட்ட சேவை இழப்புகள், பட்டியலில் இடம்பிடித்த மீதமுள்ள 20 நாடுகளின் ஒருங்கிணைந்த செலவை விட இரண்டு மடங்கு அதிகம் என்று குறிப்பிட்டுள்ளது. அதேபோல இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு இன்டர்நெட் முடக்கத்தால் ஏற்பட்ட இழப்பை காட்டிலும் இருமடங்கு அதிகரித்துள்ளது. மொத்தமாக 21 நாடுகளில் ஏற்பட்ட இன்டர்நெட் சேவை முடக்கம் காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் குறித்த தகவலை இந்த பட்டியல் வெளியிட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் உண்மையான பொருளாதார தாக்கம் அதிகமாக இருக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, 21 நாடுகளில் இந்தியாவில் மட்டும் முடக்கப்பட்ட இன்டர்நெட் சேவை நேரம் மற்ற நாடுகளை விட 75 மடங்கு அதிகம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள கிராமங்கள் மற்றும் தனி நகரங்கள், மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட இன்டர்நெட் சேவை நேரங்களை பற்றி குறிப்பிடப்படவில்லை. பெரும் பகுதியில் ஏற்பட்ட இண்டர்நெட் முடக்கத்தை மட்டுமே கருத்தில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிலும், ஆகஸ்ட் 2019 முதல் மார்ச் 2020 வரை கஷ்மீரில் ஏற்பட்ட இன்டர்நெட் கட்டுப்பாடு குறித்து தனிப்பட்ட முறையில் டாப்10விபிஎன் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றும் கூட காஷ்மீரின் பல பகுதிகளில் 2ஜி சேவை மட்டுமே இயங்குகிறது. இதனை "ஜனநாயகத்தின் மிக நீண்ட இணைய முடக்கம்" என டாப்10விபிஎன் அமைப்பு அழைக்கிறது. இந்தக் கட்டுப்பாட்டின் காரணமாக ஜம்மு கஷ்மீர் பகுதியில் இருக்கும் 11.70 மில்லியன் டெலிகாம் வாடிக்கையாளர்களுக்கு மத்தியிலான தகவல் பரிமாற்றம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் மருந்து விநியோகம், வர்த்தகம், நிதியியல் பணப் பரிமாற்றம், பள்ளி மற்றும் கல்வித்துறை, அப்பகுதி மக்களின் வாழ்க்கை முறை  போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தரவுகளின்படி, 2020ம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி நிலவரப்படி, ஜம்மு காஷ்மீர் பகுதியில் மட்டும் 11.70 மில்லியன் வயர்லெஸ் சந்தாதாரர்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 2020 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இன்டர்நெட் முடக்கம் காரணமாக உலகளவில் பொருளாதார பாதிப்பு 4.01 பில்லியன் டாலராக உயர்ந்தது. இது கடந்த 2019ம் ஆண்டை ஒப்பிடும் போது பொருளாதார வளர்ச்சி 50% குறைந்துள்ளது.

அறிக்கையின்படி, 2020ல் சுமார் 93 முறை உலக நாடுகளில் பெருமளவிலான இண்டர்நெட் ஷட்டவுன் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவைத் தவிரப் பெலாரஸ், மியான்மர், ஏமன், எத்தியோப்பியா, அஜர்பைஜான், துருக்கி, சிரியா, ஈரான், தான்சானியா, வெனிசுலா மற்றும் சோமாலியா ஆகிய பகுதிகளில் இண்ட்நெட் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது. இண்டர்நெட் முடக்கத்திற்குப் பெயர்போன சீனா, வட கொரியா ஆகிய நாடுகள் குறித்த தகவல்கள் டாப்10விபிஎன் பட்டியலில் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இணைய பணிநிறுத்தங்களின் பொருளாதார செலவைக் கணக்கிட, நிறுவனம் ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷன் முறையைப் பயன்படுத்தும் நெட் பிளாக்ஸ் மற்றும் இன்டர்நெட் சொசைட்டியின் “காஸ்ட் ஆப் ஷட்டவுன் டூல்” ஐப் உபயோகித்தது. பிராந்தியத்தின் பொருளாதார உற்பத்தியை அதன் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதமாக தீர்மானிப்பதன் மூலம் பிராந்திய முடக்கத்தின் செலவுகள் கணக்கிடப்பட்டுள்ளன.

 

இன்டர்நெட் ஷட்டவுன் பொருளாதாரத்தை ஏன் பாதிக்கின்றன?

வணிகங்கள் இன்டர்நெட் வசதியை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் அன்றாட செயல்பாடுகளில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதால், இணைய சேவைகள் ஒரு நாள் சீர்குலைந்தால் கூட அவர்களின் பணிகள் முழுவதும் நிறுத்தப்படுகின்றன. நிறுவனங்களுக்கிடையேயான தகவல்தொடர்பு சேனல்கள் மற்றும் சாத்தியமான வாடிக்கையாளர்களுடனான தடை, கட்டண நுழைவாயில் சேவைகளை நிறுத்துதல் மற்றும் விநியோக சேவைகளில் ஒரு இடைவெளி போன்றவை பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கின்றன. குடிமக்களின் இணைய அணுகலைக் கட்டுப்படுத்துவதன் மூலம், யூடியூப் மற்றும் ஸ்பாடிஃபை  பயன்படுத்தும் கலைஞர்களை அல்லது தங்கள் வணிகங்களை நடத்துவதற்கு வெப் பிரவுசரை ஊக்குவிக்கும் தொழில்முனைவோரை அரசாங்கம் காயப்படுத்துகிறது.
Published by:Tamilmalar Natarajan
First published: