ஹோம் /நியூஸ் /வணிகம் /

யார் இந்த ஏஞ்சல் இன்வெர்ஸ்டார்கள்?

யார் இந்த ஏஞ்சல் இன்வெர்ஸ்டார்கள்?

ஏஞ்சல் இன்வெஸ்டர்

ஏஞ்சல் இன்வெஸ்டர்

Angel investors: ஐடியா மட்டும் இருக்கும் எனக்கு என் ஐடியாவையும் என்னையும் நம்பி அந்தத்தொழிலில் முதலீடு போட சரி என்று சொல்பவர்கள் எனக்கு தேவதைகள் தானே?

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

சாதாரணமாக எல்லாரும் செய்தித்தாள் படிப்போம். முதல் பக்கத்  தலைப்புச்  செய்தியில் இருந்து கடைசி பக்க விளையாட்டு செய்தி, சினிமா செய்தி  என்று எல்லாவற்றையும் படிக்கும் நம்மில் பலர் நடுவில் உள்ள ஒரு பக்கத்தை மட்டும் கிணற்றைத் தாண்டுவது போல் தாண்டி விட்டு வருவோம். அது தான் வணிக பக்கம். விலை உயர்வு, சம்பள பிரச்சனை, பட்ஜெட் தவிர்த்து மற்ற எல்லாமே ஹலமத்தி ஹபிபோ பாடல் ஜிப்பிரிஷ் வார்த்தைகளைப் போல் தான் இருக்கும். என்னவென்றே தெரியவில்லை . புரியவில்லை என்று கடந்து விடுவோம். வணிகம், பொருளாதாரம் படித்தவர்களுக்கு மட்டுமே புரியும் போல் தெரிகிறது என்று சொல்லிவிட்டு மூடிவிடுவோம். காரணம் நாம் பள்ளியில் படிக்கும் பொது சமூக அறிவியல் பாடத்தில் புவியியலுக்குப் பின்னால் வால் போல் இரண்டு பாடங்கள் மட்டும் பேருக்கு இருக்கும். அதை விட்டுவிட்டு படித்தாலும் தேர்ச்சி பெற்று விடலாம் என்று எல்லோருக்கும் தெரியும். அதனால் அது பக்கம் யாரும் தலையை கூட வைத்ததில்லை. 

ஆனால் இனி அப்படி இருக்க வேண்டாம். வணிகம் , வர்த்தகம், பொருளாதாரம் ஒன்றும் அவ்வளவு கஷ்டம் இல்லை. அதன் ஒவ்வொரு அங்கங்களாக புரிந்துகொள்வோம். இனி வணிகப் பக்கத்தையும் புரட்டிப் புரிந்து கொள்வோம். அந்த பக்கத்தில் புரியாத அருஞ்சொற்களுக்கு எல்லாம் இனி அர்த்தம் தெரிந்து கொள்வோம்.

கடந்த 5 ஆண்டுகளில் அதிகம் புழக்கத்தில் வழங்கப்படும் சொல் ஏஞ்சல் இன்வெஸ்டர். அவர்கள் யார் என்று இக்கட்டுரையில் பார்ப்போம்.

இப்போது என்னிடம் ஒரு தொழில் ஐடியா இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். வீட்டுக் குப்பைகளை சேகரித்து எரிவாயு எடுக்கும் திட்டம் வைத்திருக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம். என்னிடம் ஐடியா மட்டும் தான் உள்ளது. காசு இல்லை. இதை வைத்து வங்கியில் கடன் பெறலாம். ஆனால் நான் தொழில் தொடங்கி அதில் வருமானம் வரும் வரை கடன் வட்டியை எப்படி செலுத்துவேன். அது சிரமம். கடன் கிடைத்ததும் மற்ற எல்லா வேலைகளும் உடனுக்குடன் முடியும் என்று சொல்ல முடியாது. அதற்குள் வட்டி கடனை தாண்டி போய்விடும். அப்போது எனக்கு கடனாக இல்லாமல் ஏதேனும் ஒரு வகையில் பணம் வேண்டும். 

அப்படி வருபவர்கள் தான் ஏஞ்சல் முதலீட்டாளர்கள். ஐடியா மட்டும் இருக்கும் எனக்கு என் ஐடியாவையும் என்னையும் நம்பி அந்தத்தொழிலில் முதலீடு போட சரி என்று சொல்பவர்கள் எனக்கு தேவதைகள் தானே?

ஏஞ்சல் முதலீட்டாளர்கள் யார்?

ஒருவரிடம் பணம் இருக்கிறது. அதை வைத்து லாபம் பார்க்க நினைக்கிறார். ஆனால் புதிதாக தொழில் தொடங்க யோசனைகள், ஐடியாக்கள் எதுவும் இல்லை. ஏற்கனவே இருக்கும் கம்பெனிகளில் முதலீடு செய்ய விருப்பம் இல்லை. வளரும் ஏதாவது ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவ நினைக்கிறார். அல்லது யாரேனும் ஐடியா வைத்திருந்தால் அவர்களுக்கு முதலீடு போட்டு அதில் வரும் லாபத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று நினைப்பார். அவர் தான் நம் ஏஞ்சல் இன்வெஸ்டர்.

இதுவரை யாரும் செய்யாத ஆனால் செய்தால் வெற்றி பெற வாய்ப்புள்ள சில ஐடியாக்களும் வணிக உலகில் உலாவிக் கொண்டிருக்கும். ஆனால் இதுவரை யாரின் வெற்றி தோல்வியையும் அந்த ஐடியா பார்த்திருக்காது. அதன் வெற்றி தோல்வி பற்றி கணிக்க முடியாத அந்த நிலையில் அந்த ஐடியா ஆபத்து நிறைந்ததாக பார்க்கப்படும். இந்த மாதிரி சூழலில் ஏஞ்சல் இன்வெஸ்டர்கள் தங்கள் கையிருப்பில் 10 முதல் 20 சதவிகித பணத்தை அந்த மாதியான ஆபத்து நிறைந்த தொழில்முனைவோர் மீது முதலீடு செய்வர். மற்ற பணத்தை வளரும், அல்லது வளரும் சாத்தியக்கூறு நிரம்பிய ஸ்டார்ட் அப்களுக்கு வழங்குவார்.

இதையும் படிங்க...7 மாதம் இல்லாத அளவு அதிகரித்த சமையல் எண்ணெய் இறக்குமதி.. காரணம் என்ன?

இப்போது நாம் ஆரம்பிக்கும் தொழிலுக்கு 5 கோடி தருகிறார் என்று வைத்துக்கொள்வோம். இப்போது அவரது 5 கோடி ஏஞ்சல்  பண்ட் அல்லது ஏஞ்சல் இன்வெஸ்ட்மென்ட் என்று அழைக்கப்படும். இது அந்த கம்பனிக்கு அவரது முதலீடு. எனது முதலீடு என் ஐடியா. இவை இரண்டையும் சேர்த்து ஒரு கம்பெனியை உருவாக்கி, அதை கம்பனி சட்டத்தின் கீழ் பதிய வேண்டும். கம்பெனிக்கு தனி 1 வங்கி கணக்கை உருவாக்கி அதில் இந்த முதலீட்டுத் தொகையை போட்டுத் தொழில் தொடங்க வேண்டும். இது அந்தத் தொழிலுக்கு ஸீட் பண்ட் (seed fund )அல்லது தொழில் விதை நிதி எனப்படும்.

மேலும் 5 கோடி கொடுத்த அவருக்கு அந்த கம்பெனியின் குறிப்பிட்ட அளவு பங்குகள், ஐடியா போட்ட எனக்கு குறிப்பிட்ட பங்குகள், கம்பெனிக்கு என்று பொதுவாக ஒரு அளவு பங்கு என்று பிரித்து வைத்துக் கொள்ளுதல் அந்த தொழிலின் வளர்ச்சிக்கு உதவும்.

ஏஞ்சல் இன்வெஸ்டர்கள் பணம் இருக்கும் யார் வேண்டுமானாலும் ஆகலாம். பணம் இருந்தால் போதும். ஐடியா இருக்கும் நபர்களுக்கு உதவும் பொது நீங்களும் அந்த தொழிலின் பங்குதாரர் ஆகிவிடுவீர்கள்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Business, Investment