Budget 2021 | பட்ஜெட் 2021 : சாமானியரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா மத்திய அரசு? 

Budget 2021 | பட்ஜெட் 2021 : சாமானியரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா மத்திய அரசு? 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

காப்பீட்டு திட்டத்தில் கூடுதல் சலுகைகளையும் அளிக்க வேண்டும் என விரும்புகின்றனர். குடும்ப காப்பீடு, தனிநபர் காப்பீட்டில் சலுக்கை அளிக்கும்பட்சத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உதவியாக இருக்கும்.

  • Share this:
2021-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்யவுள்ளநிலையில், சாமானியரின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படுமா? என மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 2021-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்கிறார்.

முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த பட்ஜெட் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில், கடந்த ஓராண்டில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் இருந்து மீண்டு வருவதற்கு ஏற்ப மத்தியபட்ஜெட்டில் பல்வேறு சலுகைகளை அறிவிக்க வேண்டும் என சாமானிய மக்கள் எதிர்பார்க்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன? என்பதை தெரிந்துகொள்வோம்

வருவாய்வரி விலக்கு : 

5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு வரி செலுத்த தேவையில்லை என கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தாலும், வரி அல்லாத வருவாய்க்கான அடிப்படை விலக்கு 2.5 லட்சமாக தொடர்கிறது. இது நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்துக்கு நெருக்கடியாக இருப்பதால், அடிப்படை விலக்கை 2.5 லட்சம் ரூபாயில் இருந்து 3.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதனால், மக்களின் செலவழிப்பு வருமானம் பெருகுவதுடன்,  நாட்டில் செலவுத்திறனை ஊக்குவித்து பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் உதவியாக இருக்கும்.

80C- உச்சவரம்பு : 

80C பிரிவின் கீழ் PPF, வங்கியில் ஐந்தாண்டுகளுக்கான பிக்சட் டெபாசிட், வருங்கால வைப்பு நிதி, செலுத்தப்பட்ட ஆயுள் காப்பீட்டு பிரீமியம் உள்ளிட்ட சேமிப்பு கணக்குளில் செய்யப்படும் முதலீடுகளுக்கு தற்போது 1.5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தமுறை கடந்த 2014 -15 ஆம் நிதியாண்டு முதல் தொடர்வதால், இதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிகபட்சமாக, 2.5 லட்சம் வரையில் வரி விலக்கு அளிக்க வேண்டும் என முதலீட்டாளர்கள் விரும்புகின்றனர். மேலும், இந்த சலுகை அளிக்கப்பட்டால் நீண்டகால முதலீட்டு திட்டங்கள் மீது மக்களுக்கு அதிக ஆர்வம் ஏற்படும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

விடுப்பு பயண சலுகை : 

கடந்த பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு இரண்டு வசதிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிமுகப்படுத்தினார். முதலாவதாக, அரசு ஊழியர்கள் ரூ.10,000 வரை வட்டி இல்லாத கடன் வழங்கப்படும் என்று கூறினார். இரண்டாவதாக, விடுப்பு எடுத்து பயணம் செல்வதற்கான தொகை, அதாவது, அரசு ஊழியர்களின் விடுப்பு பயண சலுகை அல்லது எல்.டி.சி, ஆகியவை பயணம் செல்லாமலேயே அவர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தார். அவ்வாறு பெறும் தொகையை 12% ஜி.எஸ்.டி மேலான பொருட்களை வாங்குவதில் செலவிட வேண்டும் என நிபந்தனையும் விதிக்கப்பட்டது. இந்த சலுகையை 2021 -22 ஆம் ஆண்டு நிதியாண்டிலும் தொடர வேண்டும் என விருப்பம் பலருக்கும் உள்ளது.

வீட்டின் சொத்துவரி இழப்பு 

கடந்த பட்ஜெட்டில் வருமானவரி குறைப்பு மற்றும் விலக்கு கிடைக்காத தனிநபர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு சூப்பரான ஒரு திட்டத்தை அறிமுகம் செய்தது. வீட்டு வாடகையினால் ஏற்படும் இழப்பை மற்ற வருமானத்தை கொண்டு ஈடுசெய்ய அனுமதியளித்தது. இது வரி செலுத்தாத தரப்பினரையும் ஈர்க்கும் வகையில் அமைந்தது. மேலும், கொரோனா காலத்தில் வீட்டு வாடகை மூலம் வருவாய் ஈட்டுவது மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இந்நிலையில், வீட்டு வாடகை மூலம் வருவாய் ஈட்டுவதில் ஏற்பட்டு இழப்பை சரிசெய்யும் விதமாக,  அதற்கான வரிச்சலுகையை 3 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சுகாதார காப்பீடு : 

கொரோனா வைரஸ் பாதிப்பால் பெரும்பாலான மக்களின் சேமிப்பு மருத்துவச் செலவுகளில் முடங்கியது. இதனால், காப்பீடு திட்டங்களில் மூத்த குடிமக்கள் அல்லாதவர்களுக்கான செலவுத்தொகையின் அடிப்படை வரம்பு 25,000 இருந்து 50,000 உயர்த்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், காப்பீட்டு திட்டத்தில் கூடுதல் சலுகைகளையும் அளிக்க வேண்டும் என விரும்புகின்றனர். குடும்ப காப்பீடு, தனிநபர் காப்பீட்டில் சலுக்கை அளிக்கும்பட்சத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உதவியாக இருக்கும்.

ஓய்வூதிய திட்டங்கள் : 

தேசிய ஓய்வூதிய திட்டம் பல நன்மைகளை வழங்கும் ஒரு நல்ல ஓய்வூதிய சேமிப்பு திட்டமாக இருந்தாலும், அது இன்னும் பலருக்கு விருப்பமான தேர்வாக இல்லை. பிரிவு 80 CCD (1B) -ன் கீழ் கிடைக்கும் உச்சவரம்பு வரிவிலக்கு ஆண்டுக்கு 50,000 ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என விரும்புகின்றனர். புதிய பட்ஜெட்டில் இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டால், பலரும் திட்டத்தில் இணைவதை ஊக்குவிக்கும். தனியார்துறை ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தில் வரி இல்லாமல், முதலாளியின் பங்கு 14 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என பணிக்கு செல்வோர் எதிர்பார்க்கின்றனர்.

நீண்டகால முதலீடு : 

தற்போது, பட்டியலிடப்பட்ட பத்திரங்களை ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்வதன் மூலம், கிடைக்கும் நீண்டகால மூலதன ஆதாயங்களுக்கு ஒரே விதமாக 10 விழுக்காடு வரி விதிக்கப்படுகிறது. நீண்டகால முதலீட்டாளர்களின் பணவீக்கத்தை கருத்தில் கொள்ளாமல் , விதிக்கப்படும் வரியால் அவர்கள் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இதனால், நீண்டகால முதலீடுகளினால் பெறும் பலனுக்கும் விதிக்கபடும் வரி விகிதம் 5 விழுக்காட்டுக்கு கீழ் குறைக்க வேண்டும் என முதலீட்டாளர்கள் விரும்புகின்றனர்
Published by:Gunavathy
First published: