கொரோனா காலக்கட்டத்தில் மக்களிடையே ஆன்லைன் பரிவர்த்தனை அதிகரிக்கத் தொடங்கியது. ஆன்லைனில் பணம் செலுத்தும் முறை நம் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கிய அதே சமயத்தில் சில்லறை நிதி பரிவர்த்தனைகளில் மோசடி புகார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டிஜிட்டல் தளம் பற்றி பெரிதாக அறியாமல் புதிதாக நுழைபவர்களை ஏமாற்றுவதற்குப் புதுமையான முறைகளைப் பயன்படுத்துகின்றனர். சமீப காலமாக விஷிங் (vishing) எனப்படும் புதிய ஆன்லைன் மோசடி அதிகரித்து வருகிறது. இதுகுறித்து ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வங்கி வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.
விஷிங் என்பது சமீபகாலமாக அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடி ஆகும். இதில் மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தனிப்பட்ட ரகசிய தகவல்களைத் திருடுவதற்கு செல்போனை பயன்படுத்துகின்றனர். யூஸர் ஐடி, லாகின் மற்றும் பரிவர்த்தனை கடவுச்சொற்கள், ஒன் டைம் பாஸ்வேர்டு, பாஸ்வேர்டுகள் (OTPகள்), URNகள் (தனிப்பட்ட பதிவு எண்கள்), கார்டு பின்கள், CVVகள், அல்லது பிறந்த தேதி அல்லது தாயின் இயற்பெயர் போன்ற தனிப்பட்ட தகவல்களை பெற மோசடி கும்பல்கள் இந்த முறையை பயன்படுத்துகின்றனர்.
Also Read : வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படாது - மத்திய அரசு தகவல்!
மோசடி செய்பவர்கள் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு தனிப்பட்ட மற்றும் நிதி தகவல்களை சொல்லி தங்களை வங்கியில் இருந்து பேசுவதைப் போல் காட்டிக்கொள்வார்கள். அதன் பின்னர் உங்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்து அக்கவுண்டில் உள்ள பணத்தை எடுக்க முயல்வார்கள். மோசடி செய்பவர்கள், வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால் (VoIP) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான அழைப்புகளைச் செய்யலாம் மற்றும் உங்கள் வங்கி போன்ற நம்பகமான மூலத்திலிருந்து அழைப்பு வந்ததாக ஏமாற்ற இந்த டெக்னிக்கை பயன்படுத்துகின்றனர்.
விஷிங் மோசடியை கண்டறிவது எவ்வாறு?
விஷிங் மோசடியின் போது, அழைப்பாளர் பொதுவாக IRS, Medicare அல்லது சமூக பாதுகாப்பு நிர்வாகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறி போன் செய்வார்கள். இந்த ஃபெடரல் ஏஜென்சிகள் எதுவும் மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் அல்லது சோஷியல் மீடியா சேனல்கள் மூலம் உங்களுடன் தொடர்பு கொள்ளாது என்பதையும், தனிப்பட்ட அல்லது நிதித் தகவலைக் கோராது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
- மோசடி செய்பவர்கள் தகவல்களை பெற வேண்டும் என்ற அவசரத்தில் உங்களை வேகப்படுத்துவார்கள்.
- கைது வாரண்ட்கள் மற்றும் உங்கள் கணக்கில் உள்ள சிக்கல்களை பயன்படுத்தி, உங்களை அச்சுறுத்தி, பதட்டப்பட வைத்து தகவல்களை பெற முயல்வார்கள்.
- மோசடி செய்பவர்களிடம் இருந்து போன் கால் வந்தால், அமைதியாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டு உங்கள் சொந்த தகவல்களை பகிரக்கூடாது.
- அழைப்பாளர் உங்கள் தனிப்பட்ட தகவல்களை கேட்கிறார் என்றாலே உஷாராகிவிடுங்கள்.
- உங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி, சமூகப் பாதுகாப்பு எண், வங்கிக் கணக்குத் தகவல் மற்றும் பிற அடையாளம் காணும் விவரங்களை உறுதிப்படுத்தும்படி உங்களிடம் கேட்பார்கள்.
- மோசடி கும்பலின் மற்றொரு டெக்னிக், தாங்கள் நம்பகமானவர்கள் தான் என்பதை நீங்கள் நம்ப வேண்டும் என்பதற்காக சில அடிப்படை தகவல்களை உங்களிடம் தெரிவிக்கலாம். அது அவர்களிடம் இல்லாத மீதமுள்ள தகவலைப் பெறுவதற்காக செய்யும் தந்திரம் என மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) “BE(A)WARE – Be Aware and Beware!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள புத்தகத்தில், மோசடி பரிவர்த்தனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சில குறிப்புகளை வெளியிட்டுள்ளது.
- மோசடி செய்பவர்கள் செல்போன் அழைப்புகள் / சமூக ஊடகங்கள் மூலம் வங்கியாளர்கள்/நிறுவன நிர்வாகிகள்/காப்பீட்டு முகவர்கள்/அரசு அதிகாரிகள் போன்ற தோற்றத்தில் வாடிக்கையாளர்களை அழைக்கிறார்கள் அல்லது அணுகுகிறார்கள். நம்பிக்கையைப் பெற, வஞ்சகர்கள் வாடிக்கையாளரின் பெயர் அல்லது பிறந்த தேதி போன்ற சில வாடிக்கையாளர் விவரங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
- வங்கி அதிகாரிகள் / நிதி நிறுவனங்கள் / ரிசர்வ் வங்கி / எந்தவொரு உண்மையான நிறுவனமும் பயனர் பெயர் / கடவுச்சொல் / அட்டை விவரங்கள் / CVV / OTP போன்ற ரகசியத் தகவல்களைப் பகிருமாறு வாடிக்கையாளர்களைக் கேட்பதில்லை.
- இந்த ரகசிய விவரங்களை யாருடனும், உங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் கூட பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.