• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • மியூச்சுவல் ஃபண்ட்ஸ் என்றால் என்ன? இதில் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் என்றால் என்ன? இதில் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!

காட்சி படம்

காட்சி படம்

Benefits of Investing in Mutual Fund : மியூச்சுவல் ஃபண்ட்ஸ் பற்றி அறிய இதை படியுங்கள்..

  • Share this:
    மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்து நாம் அடிக்கடி விளம்பரங்களில் பார்த்து வருகிறோம். Mutual Funds என்பதை தமிழில் பரஸ்பர நிதி என்று குறிப்பிடுகிறோம். கடந்த பல ஆண்டுகளாகவே தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் தங்களது பணத்தை ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து வருகிறார்கள். எந்த ஷேர்களை எப்போது வாங்குவது என்பதில் இருந்து அதை எப்போது விற்பது என்பது வரை அவர்களே முடிவு செய்கிறார்கள். அவர்கள் எடுக்கும் முடிவால் வரும் லாப, நஷ்டங்களுக்கு அவர்களே பொறுப்பாக இருக்கிறார்கள். 

    ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு இதிலிருந்து வித்தியாசமானது. இந்த கான்செப்ட் வெளிநாடு துவங்கி தற்போது நம் நாட்டில் பிரபலமாக இருக்கிறது. பெருமளவிலான முதலீட்டாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் நிதியை ஒன்று திரட்டி தான் மியூச்சுவல் ஃபண்ட் உருவாக்கப்படுகிறது. இந்த மொத்த நிதியும் நிபுணத்துவம் வாய்ந்த தொழில்முறை ஃபண்ட் மேனேஜர்களால் நிர்வகிக்கப்படும்.இது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம். 

    கிட்டத்தட்ட ஊர்கூடி தேர் இழுப்பது போன்ற கதை தான் இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் என்பது. ஷேர் மார்க்கெட் பற்றிய அடிப்படை அதிகம் தெரியாதவர்கள், ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து அதனை கண்காணித்து உரிய நேரத்தில் விற்க தெரியாதவர்கள் அல்லது இதில் கிடைக்கும் லாப வாய்ப்பை தவறவிட விரும்பாதவர்கள், குறிப்பிட்ட நிறுவனத்தின் ஷேரை வாங்கி விட்டு அதன் பிறகு குறிப்பிட்ட கம்பெனியின் நிலவரம் பற்றி அறிந்து கொள்ள முடியாமல் நஷ்டமடைய விரும்பாதவர்கள் என பல்வேறு தரப்பினருக்கு மியூச்சுவல் ஃபண்ட் உதவுகிறது. 

    அதே போல நாட்டில் மிகப்பெரிய நிறுவனங்களின் ஒரு ஷேர் ஆயிரக்கணக்கான ரூபாயாக இருக்கும். சாமானியர்களால் அதனை வாங்க முடியுமா.? இல்லை ஒரு தனிமனிதன் பலரிடம் காசு கலெக்ட் செய்து ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து லாபத்தை தருகிறேன் என்று சொன்னால் பலரும் நம்ப மாட்டார்கள். இங்கு தான் பரஸ்பர நிதி முதலீடு தேவைப்படுகிறது. ஷேர் மார்க்கெட்டில் தங்கள் பணத்தை முதலீடு செய்ய நினைப்பவர்கள் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடம் சென்று, நீங்களே நல்ல ஷேர்களில் முதலீடு செய்து அதில் வரும் லாபத்தை எங்களுக்கு பிரித்து கொடுங்கள் என்பதே மியூச்சுவல் ஃபண்ட் ஆகும். 

    இது போல பலரிடம் பெறும் பணமானது குறிப்பிட்ட  மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தால், ஷேர் மார்கெட்டில் நல்ல அனுபவம் வாய்ந்த மற்றும் சூட்சமங்கள் தெரிந்த நிபுணர்களை வைத்து (ஃபண்ட் மேனேஜர்) முதலீடு செய்யப்படும். ஆண்டு முடிவில் அதில் வரும் லாப மற்றும் நஷ்ட கணக்குகளை பார்த்து முதலீடு செய்தவர்களுக்கு அவரவர் முதலீட்டு பணத்திற்கேற்ப பணம் பிரித்து கொடுக்கப்படும். சுருக்கமாக சொன்னால் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் அதன் ஃபண்ட் மேனேஜர் மீது நம்பிக்கை வைத்து, பலர் தங்களது பணத்தை குறிப்பிட்ட துறையின் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வது ஆகும். 

    also read : மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பங்குகள் - இரண்டுக்கும் இடையிலான வேறுபாடுகள் என்ன?

    இங்கு எந்த ஷேர்களை வாங்க வேண்டும், வாங்க கூடாது, எவ்வளவு வாங்க வேண்டும், எப்போது விற்க வேண்டும் போன்ற பல முக்கிய முடிவுகள் ஃபண்ட் மேனேஜர் எடுக்கும் முடிவாக இருக்கும். முதலீட்டாளர்களின் முழு சுமையையும் தாங்கும் ஃபண்ட் மேனேஜர் மூலம் லாபமடையும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அவருக்கு ஊதியம் மற்றும் போனஸ்களையும் வழங்கும். இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் குறைந்தபட்ச தொகையாக நீங்கள் ரூ.500-ஐ கூட முதலீடு செய்யலாம். அதே போல ஒரே தவணையில் செய்யப்படும் முதலீடு அந்தளவுக்கு லாபம் கொடுக்காது என்கிறார்கள் நிபுணர்கள்.

    மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள் :

    ஷேர்கள் மட்டுமல்லாமல் கடன் பத்திரங்கள், தங்கம், ரியல் எஸ்டேட் போன்றவற்றிலும் மேற்கண்ட முறையில் முறையில் முதலீடு செய்ய வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகின்றன மியூச்சுவல் ஃபண்ட்ஸ். 

    தொழில்முறை மேலாண்மை: 

    தங்கள் பணத்தை இதில் முதலீடு செய்வது என்பதை தெரிந்து கொள்ள முடியாமல் தவிப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கின்றன மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள். ஏனென்றால் ஒரு முதலீட்டாளர் செய்ய வேண்டிய பல வேலைகளை (பகுப்பாய்வு, கண்காணிப்பு, பரிவர்த்தனை) நிறுவனம் பணியமர்த்தி இருக்கும் ஃபண்ட் மேனேஜர் நியாயமான கட்டணத்தில் செய்து தருவதால் பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு டென்ஷன் இல்லை. ஒரு ஃபண்ட் மேனேஜர் தொடர்ந்து முதலீடுகளை கண்காணித்து அதன் இலக்குகளை பூர்த்தி செய்ய அதற்கேற்ப போர்ட்ஃபோலியோவை அட்ஜஸ்ட் செய்கிறார். இந்த தொழில்முறை மேலாண்மை மியூச்சுவல் ஃபண்ட்ஸ் தரும் மிக முக்கி நன்மைகளில் ஒன்றாகும். 

    வரி நன்மைகள்: 

    மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடுகளை ஊக்குவிக்க பல வரி சலுகைகள் மத்திய அரசால் வழங்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக Equity-Linked Saving Schemes-களில் முதலீடு செய்வது வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்குக்கு தகுதி பெறுகிறது. இதன்படி ஒருவர் இந்த திட்டத்தில்  ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். மேலும் அவர்கள் வரிக்கு உட்பட்ட வருமானத்தில் சுமார் ரூ.46,800 வரை வரி சேமிப்பை பெறலாம்.

    also read : மியூச்சுவல் ஃபண்டில் தொடக்கத்தில் எவ்வளவு முதலீடு செய்யலாம்? முழு விவரம்!

     எளிது: 

    நிதி நெருக்கடியில் இருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர் ஒருவர், தனது நிதி தேவைகளைப் பூர்த்தி செய்ய தான் போட்டிருக்கும்  மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எளிதாக விற்கலாம். உங்கள் ஷேர் விற்கப்பட்ட உடனே விரைவில் பணம் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் டெபாசிட் செய்யப்படும். தவிர பரஸ்பர நிதிகள் உடனடி மீட்பு வசதி கொண்ட நிதி என்றும் அழைக்கப்படுகின்றன. இதில் பணம் அதே நாளில் உங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றப்படும். 

    அதிக வருமானம்: 

    இந்த முதலீட்டின் கீழ் ஒருவர் பல துறைகள் மற்றும் தொழில்களில் முதலீடு செய்யும் வாய்ப்புகள் கொட்டி கிடைப்பதால், காலப்போக்கில் அதிக வருவாயை வழங்குவதற்கான நிறைய வாய்ப்புகள் மியூச்சுவல் ஃபண்ட்களில் இருக்கிறது. 

     முக்கியமாக மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மூலம் முதலீடு செய்ய  ஷேர் மார்க்கெட் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றார் கட்டாயமோ, அவசியமோ இல்லை. நாம் முன்னர் கூறியபடி ஃபண்ட் மேனேஜர் அனைத்தையும் பார்த்து கொள்வார். 

    வாங்கவும், விற்கவும் வசதியானது மற்றும் தொல்லை தராத நிம்மதியான அனுபவத்தை மியூச்சுவல் ஃபண்ட்ஸ் வழங்குகின்றன. 

     ஒழுங்குபடுத்தப்பட்டது: 

    நாட்டில் இருக்கும் அனைத்து மியூச்சுவல் ஃபண்ட்களுமே, Securities and Exchange Board of India அமைப்பு மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் SEBI வகுத்துள்ள பல்வேறு விதிகளுக்கு மியூச்சுவல் ஃபண்ட் ஹவுஸ்கள் கட்டுப்பட வேண்டும். இந்த ஒழுங்குமுறை முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்கிறது. தவிர அனைத்து மியூச்சுவல் ஃபண்ட்ஸ்களும் ஒவ்வொரு மாதமும் தங்கள் போர்ட்ஃபோலியோஸ்களை (portfolios ) வெளியிடுவதை SEBI கட்டாயமாக்கி இருக்கிறது. 

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: