• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் இந்திய பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்படும்!

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் இந்திய பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்படும்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

கச்சா எண்ணெய் விலை உயரும் போது அந்நிய செலாவணி அதிகளவில் செலவாகும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஈரான் மீதான பொருளாதாரத் தடையை முழுமையாக அமெரிக்கா அமலுக்குக் கொண்டு வந்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் இந்திய பொருளாதாரம் எவ்வாரெல்லாம் பாதிப்படையும் என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

    அமெரிக்கா, ஈரான், வெனிசுலா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இதனால் இந்தியா அதிகளவில் இறக்குமதி செய்யும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த 6 மாதங்கள் இல்லாத அளவாக 33 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.

    சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயரும் போது காய்கறி முதல் சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய பொருட்களின் விலையும் உயரும். இதனால் வீட்டின் மாத பட்ஜெட் அதிகமாகும், பணவீக்கம் அதிகரிக்கும். பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்.

    தற்போது உள்ளது போன்று கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தால் 100 டாலருக்கும் அதிகமாகவும் செல்ல வாய்ப்புள்ளது. ஆனால் இது டாலரின் வலிமையைப் பொறுத்தது என்று ஆக்ஸ்ஃபோர்டு பொருளாதாரப் பிரிவு வல்லுநர்கள் கூறுகின்றனர்.

    ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையால், சர்வதேச அளவில் நாள் ஒன்றுக்கு 8 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிப்படைந்துள்ளது. எனவே ஈரானிலிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வந்த இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உள்ளது.

    வேறு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கத் திட்டமிட்டு வருவதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளது சற்று ஆறுதல் அளித்தாலும், விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்று துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.

    கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் போது சவுதி அரேபியா, ரஷ்யா, நார்வே, நைஜீரியா போன்ற நாடுகள் அதிக பயனடைவார்கள். மறுபக்கம் இந்தியா, துருக்கி, உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் மிகப் பெரிய அளவில் பாதிப்படைவார்கள் என்று நோமூரா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகிறது.

    கச்சா எண்ணெய் விலை உயரும் போது அந்நியச் செலாவணி அதிகளவில் செலவாகும். அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரியும். இதனால் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குப் பணம் அனுப்பும் என்ஆர்ஐகள் அதிக பயனடைவார்கள். ஆனால் சொந்த நாட்டில் உள்ள மக்கள் அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

    மக்களவைத் தேர்தலால் பெட்ரோல், டீசல் விலை இன்னும் உயர்த்தப்படாமல் உள்ளது. தேர்தல் முடிவில் பெட்ரோல், டீசல் விலை 10 ரூபாய் வரை உயரும் என்று எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றனர்.

    எனவே இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் தேர்தல் முடியும் வரை பாதிப்பில்லை. ஆனால் தேர்தலுக்குப் பிறகு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பெட்ரோல், டீசல் விலை ஏறும் போது மிகப் பெரிய அளவில் விமர்சிக்கப்படுவார்கள் என்று கூறலாம்.

    மேலும் பார்க்க:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilarasu J
    First published: