கூட்டுறவு அமைப்பு:
ஒரு தனி நபர் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி அதை நடத்தி வந்தால் அது 'தனி நபர் நிறுவனம்' என்போம். 2 அல்லது 3 பேர் சேர்ந்து அமைத்தால் அதுவும் 'நிறுவனம்' தான். அந்த 2,3 பேர் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் என்று அழைக்கப்படுவர். ஆனால் நூற்றுக்கணக்கானோர் இணைந்து ஒரு நிறுவனத்தைத் தொடங்கினால் அதன் பெயர் 'கூட்டுறவு அமைப்பு' எனப்படும். மக்கள் கூட்டாக சேர்ந்து தங்களது நலனுக்காகவோ அல்லது பொது மக்கள் நலனுக்காகவோ ஒரு நிறுவனத்தைத் தொடங்கினால் அது 'கூட்டுறவு சங்க நிறுவனம்' ஆகும்.
கூட்டுறவுக் கடைகள்:
நம் அன்றாட வாழ்க்கையில் கூட்டுறவுக் கடைகளைப் பார்த்திருப்போம். அதுவும் எல்லா கடைகளை போலதான் வெளியில் தெரியும். ஆனால், அதன் உள்ளே கவனித்தால் கூட்டுறவு கடைக்கான தனித்துவம் தெரியும். சாதாரண கடைகளில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் சம்பளத்திற்கு பணி அமர்த்தப்பட்டிருப்பார்கள் . ஆனால் கூட்டுறவுக் கடைகளில் அதன் உறுப்பினர்களே வேலை செய்வார்கள். காரணம் அது மக்கள் தானாக இணைந்து தொடங்கியதால் அவர்களது உடல் உழைப்பும் அதில் முதலீடாக போடப்படும்.
சலுகைகள்
கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு அவர்களது கடைகளில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் சலுகை வழங்கப்படும். ஒரு சில கடைகளில் சமூக நோக்கில் எல்லா மக்களுக்கும் இச்சலுகை வழங்கப்படும். தங்களது லாபத்தைக் குறிக்கோளாகக் கொள்ளாமல் எல்லாருக்கும் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்ற சமூக எண்ணத்தில் இது வழங்கப்படுகிறது.
முதலாளி:
ஒரு நிறுவனத்தில் பெரும் பங்குகளை கையில் வைத்திருப்பவர் அந்த நிறுவனத்தின் முதலாளி ஆவார். அந்த நிறுவனத்தின் முக்கிய முடிவுகளையும், லாபத்தை என்ன செய்வது என்பதையும் அவர்தான் முடிவு செய்வார். ஆனால் கூட்டுறவு அமைப்பில் இந்த பேச்சுக்கே இடம் இல்லை. இதில் உறுப்பினர்கள் எல்லோரும் சம பங்கை முதலீடாக போட்டிருப்பார்கள். அதனால் எல்லாரும் முதலாளிகள் தான். இதில் வரும் லாபத்தை எல்லாரும் சமமாக பங்கு பிரித்துக் கொள்வர். லாபத்தை மீண்டும் முதலீட்டுப் பணத்தோடு இணைப்பது குறித்தும் சேர்ந்தே முடிவு செய்வர்.
மேலாண்மை:
எல்லா நிறுவனங்களைப் போல இதிலும் 'போர்ட் ஆப் டிரெக்டர்ஸ்' அமைப்புகள் எல்லாம் உண்டு. கூட்டுறவு அமைப்பில் உள்ள மக்கள் சுழற்சி முறையில் தங்களில் சிலரைத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் இணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்குவார்கள். குறிப்பிட்ட காலத்திற்கு அவர்கள் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை இவர்கள்தான் கவனிப்பார்கள். பின் வேறு சிலர் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலாண்மை கவனிக்கும் நபர்களுக்கு என்று எந்த கூடுதல் சலுகைகளும் கிடையாது. எல்லாருக்கும் இருக்கும் சலுகை மட்டும் தான் இவர்களுக்கும்.
வகைகள்
விவசாயக் கூட்டுறவுகள்
விவசாயம் தெரிந்த நிலமற்றவர்கள், நிலம் கொண்ட விவசாயிகள், விவசாய வியாபாரிகள் எல்லாம் இணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கி சேர்ந்து விவசாயம் செய்வர். அதைச் சரியான சந்தையில் விற்கவும் வழி செய்வர். இதனால் எல்லோருக்கும் குறைந்தபட்ச லாபம் கிடைக்கும்.
சிறு தொழில் கூட்டமைப்பு:
சிறு தொழில் முனைவோர்கள் இணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கி தங்கள் பொருட்களை விற்க மார்கெட்டிங் செய்ய வழி செய்வர். தனித்தனியாக இருந்து விற்பதை விட இதில் விற்பனை அளவும், லாபமும் அதிகம் காணப்படும்.
நிதி நிறுவங்கள்:
கூட்டுறவு வங்கிகளை கிராமப்புறங்களில் அதிகம் பார்த்திருப்போம். பணம் இருக்கும் நபர்கள் பொது மக்கள் நலனுக்காக தங்களிடம் உள்ள பணத்தை சுழற்சிக்கு விடுவது போல் இந்த நிதி நிருவங்கள் மூலம் தேவைப்படுபவர்களுக்கு வழங்குவர்.
துறைகள்:
விவசாயம், சிறுதொழில், தொழில் முனைவோர், கல்வி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனம், மளிகை, மருத்துவம், நிதி சேவைகள், மின்சார இயக்கங்கள் என்று எல்லா துறைகளிலும் கூட்டுறவு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
மேலான உலகத்தை உருவாக்கும் கூட்டுறவுகள்: சர்வதேச கூட்டுறவு தினம்
நன்மைகள்:
ஒரு தொழில் தொடங்க பெரிய முதலீடும், ஆட்களும் தேவைப்படும். ஆனால் அவ்வளவு வசதி பலரிடம் இருக்காது. ஆனால் இதே மாதிரி எண்ணம் கொண்ட பலர் ஒன்று சேரும் போது, சிறு துளி - பெருவெள்ளமாக மாறி தொழில் உருவாக சாதக நிலையை ஏற்படுத்தும்.
மக்கள் இணைந்து தொடங்குவதால் அவங்களின் பங்களிப்பும் அதிகம் இருக்கும். அதனால் அந்த நிறுவனம் அவ்வளவு எளிதாக சரிந்து விடாது.
கூட்டுறவுகள் சுய பொறுப்பு, ஜனநாயகம், சமத்துவம், சுய உதவி மற்றும் ஒற்றுமை போன்ற பல மதிப்புகளை தங்கள் குறிக்கோள்களாகக் கொண்டு இயங்குகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.