ஒரு நபர் வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் வழியாக கடன் வாங்க வேண்டுமென்றால் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றாலோ, குறிப்பிட்ட அளவுக்கு வருமானம் இருக்க வேண்டும். வருமானத்துக்கான சான்று இருக்க வேண்டும். சம்பளம் வாங்குபவர்களைப் பொறுத்தவரை கடன் அல்லது கிரெடிட் கார்டு வாங்க அவர்களின் வருமானச் சான்றுக்கு பிரச்சனை இல்லை.
ஆனால், வருமான வரி சலுகை வரம்புக்கு குறைவாக சம்பளம் வாங்குபவர்களும், வணிகம் செய்பவர்கள், வியாபாரிகள், கடை வைத்திருப்பவர்கள், புரோஃபஷனல் சேவைகள் வழங்குபவர்களுக்கு வருமானத்துக்கான சான்று தேவை. எனவே, வங்கிக் கடன் சார்ந்த எந்தவிதமான சேவைகளுக்கும், வருமான வரி அறிக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும். மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) கீழ் இயங்கும் இந்திய வருமான வரித் துறையின் சட்டப்படி, வருமான வரிக் கணக்கை (Income tax return) தாக்கல் செய்வது கட்டாயமாகும். அவ்வப்போது கணக்கு தாக்கல் செய்வதில் பலவிதமான நிபந்தனைகள் சேர்க்கப்படுகிறது.
ஆண்டுக்கு 2.5 லட்ச ரூபாய்க்கு வருமானம் பெறுபவர்கள் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்று தொடங்கி, யாரெல்லாம் ITR தாக்கல் செய்ய வேண்டும் என்ற பெரிய பட்டியலே உள்ளது. ஆனால், அதில் விலக்கு பெறுபவர்கள் கூட, பின்வரும் நன்மைகளுக்காக ITR தாக்கல் செய்வது அவசியமாகிறது.
Also Read : வீட்டுக் கடன் வட்டிவிகிதம்: எந்த வங்கியில் ரொம்ப கம்மி?
அதன் படி, வருமான வரி வரம்புக்கு குறைவாக வருமானம் பெறுபவர்கள் வரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றாலும், உரிய பில்கள், ரசீதுகள், செலவுகள் அறிக்கை ஆகியவற்றை வைத்து ஐடிஆர் தாக்கல் செய்தால், பல விதமான நன்மைகளைப் பெற முடியும். அதில் ஒன்று தான், வங்கிக் கடன் பெறுவது.
கடன் வாங்குவது முதல் வெளிநாட்டு விசா பிராசஸ் வரை – ITR முக்கியம்
வீட்டுக் கடன், தொழில் விரிவாக்கக் கடன், தனிநபர் கடன் மற்றும் கிரெடிட் கார்டு உள்ளிட்ட பல விதமான கடன்களைப் பெற உங்கள் நிதி நிலைமை பற்றிய அறிக்கையை வங்கிகளுக்கு வழங்க வேண்டும். அதற்கு நீங்கள் ஆண்டுதோறும் வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். அது தான் உங்களுடைய வருமானச் சான்றாக உதவும்.
உங்களுக்கு வரி செலுத்தும் அளவுக்கு வருமானம் இல்லையென்றாலும், வரி விலக்குகள் மூலம் வரி செலுத்த வேண்டாம் என்றாலும், வரி ரீஃபண்ட் தொகையைப் பெற, TDS பிடித்தம் செய்த தொகையை பெற, வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரி அறிக்கையில் உங்களுக்கு எவ்வளவு தொகை ரீஃபண்ட் செய்ய வேண்டும் என்ற அறிக்கை விவரங்கள் காணப்படும். அதன் அடிப்படையில், பிடித்தம் செய்யப்பட்ட வரித் தொகை உங்களுக்கு மீண்டும் செலுத்தப்படும்.
வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டுமென்றால், நீங்கள் வரி செலுத்தும் நபராக, அதற்கு உட்பட்வராக இருக்க வேண்டும். அதாவது, உங்களின் ITR தான் உங்களுடைய வருமானச் சான்றாக எடுத்துக் கொள்ளப்படும். சில நேரங்களில் உங்களுடைய இருப்பிடச் சான்றாகவும் உங்கள் வருமான வரி அறிக்கையை பயன்படுத்தலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Home Loan, Income tax