2023-24 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். தற்போதைய மத்திய அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால், மத்திய தர மக்களுக்கு பட்ஜெட்டில் வருமான வரித் தொடர்பான சலுகைகள் நிச்சயம் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதை மெய்ப்பிக்கும் விதமாக பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உயர்த்தியுள்ளார்.
நடுத்தர, மத்திய தர வர்க்கத்தினருக்கான இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கியம் அம்சங்கள் இதோ:
1. வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்வு - இதுவரை ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை பெறுவோர் வரி செலுத்த வேண்டியதில்லை என்று இருந்தது. இந்த உச்ச வரம்பு புதிய பட்ஜெட்டில் ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2. வருமான வரி செலுத்துவதற்கான அடுக்கில் (ஸ்லாப்) புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி ரூ.3 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை. ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 5% வரி விதிக்கப்படும். ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வருமானத்திற்கு 10%, ரூ.9 முதல் ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15%, ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையில் 20% வரி செலுத்த வேண்டும். ரூ.15 லட்சத்திற்கு மேலான வருமானத்திற்கு 30% வரி செலுத்த வேண்டும்.
3. உச்சபட்ச உப வரிகள் குறைப்பு - தனிநபர் வருமானத்திற்கு உப வரிகள் உள்ளிட்ட கூடுதல் வரிகளுடன் சேர்த்து உச்சபட்ச வரியாக 42.74% வரி வசூலிக்கப்படுகிறது. உலகிலேயே இது அதிகம் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே, சர்சார்ஜ் எனப்படும் உப வரி விகிதத்தை 37% இல் இருந்து 25% குறைத்து புதிய பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இதன் மூலம் அதிகபட்ச தனிநபர் வருமான வரி குறைகிறது.
இதையும் படிங்க: பட்ஜெட் எதிரொலி: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!
4. லீவ் என்கேஷ்மென்ட் - அரசுப் பணியில் இல்லாத மாத சம்பளதாரர்கள் ஓய்வு பெறும்போது லீவ் என்கேஷ்மென்ட் தொகை பெறுவதில் வரி சலுகைக்கான உச்சவரம்பு ரூ.3 லட்சமாக இருந்து வந்தது. இது 2002இல் கடைசியாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த உச்ச வரம்பு தொகையை ரூ.25 லட்சமாக நடப்பு பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.