ஹோம் /நியூஸ் /வணிகம் /

பட்ஜெட் 2021 : புதிய வரிகளால் எந்த பொருட்களின் விலை உயரும்? குறையும்?

பட்ஜெட் 2021 : புதிய வரிகளால் எந்த பொருட்களின் விலை உயரும்? குறையும்?

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

பெட்ரோலுக்கு லிட்டருக்கு இரண்டரை ரூபாயும், டீசலுக்கு லிட்டருக்கு 4 ரூபாயும் வேளாண் செஸ் வரி விதிக்கபட உள்ளது.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  மத்திய பட்ஜெட்டில் புதிதாக வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக செஸ் வரி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால், பெட்ரோல், டீசல் விலை நள்ளிரவு முதல் உயர்கிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்டவை மீதான சுங்கவரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

  நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வேளாண்துறையை மேம்படுத்துவதற்காக வேளாண் உட்கட்டமைப்பு வர்ச்சிக்கான செஸ் வரி அறிமுகப்படுத்தப்படுவதாகவும், பிப்ரவரி 2-ம் தேதி முதல் இந்த வரி நடைமுறை அமலுக்கு வருவதாகவும் தெரிவித்தார்.

  • இதன்மூலம் பெட்ரோலுக்கு லிட்டருக்கு இரண்டரை ரூபாயும், டீசலுக்கு லிட்டருக்கு 4 ரூபாயும் வேளாண் செஸ் வரி விதிக்கபட உள்ளது.
  • தங்கம், வெள்ளி மற்றும் தங்க கட்டிகள் மீது இரண்டரை விழுக்காடு வேளாண் செஸ் வரி விதிக்கப்படுகிறது. மதுபானங்கள் மீது 100 விழுக்காடும், கச்சா பாம் ஆயில் மீது 17.5 விழுக்காடும் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.
  • சோயாபீன், சன்ஃப்ளவர் ஆயில் மீது 20 விழுக்காடு, ஆப்பிளுக்கு 35 விழுக்காடு, யூரியா உள்ளிட்ட குறிப்பிட்ட உரங்களுக்கு 5 விழுக்காடு, பட்டாணிக்கு 40 விழுக்காடு வேளாண் செஸ் வரி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரி நள்ளிரவு முதல் அமலாகிறது.
  • உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • ஆட்டோமொபைல் துறையில் சில உதிரி பாகங்கள் மீதான சுங்க வரி, 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. பருத்தி ஆடைகள் மீது 10 சதவிகிதமும், பட்டு ஆடைகள் மீது 15 சதவிகிதமும் சுங்கவரி உயர்த்தப்பட்டு உள்ளது.
  • இறக்குமதி செய்யப்படும் சோலார் இன்வெர்ட்டர்களுக்கு 5 லிருந்து 20 விழுக்காடும், சோலார் விளக்குகளுக்கு 5 லிருந்து 15 விழுக்காடும் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • குறிப்பிட்ட செல்போன் உதிரிபாகங்கள், பவர் பேங்-களுக்கு கூடுதலாக இரண்டரை விழுக்காடு சுங்கவரி விதிக்கப்படுகிறது.
  • ஏசி, ரெப்ரிஜிரேட்டர்களுக்கான கம்ப்ரஸர்களுக்கு சுங்கவரி 12.5 விழுக்காட்டில் இருந்து 15 விழுக்காடாக உயர்கிறது. அனைத்துவித நைலான் பொருட்களுக்கு 5 விழுக்காடு வரி விதிக்கப்படும். சுரங்கம் துளையிடும் கருவிகளுக்கு 7 விழுக்காடு சுங்க வரி விதிக்கப்படும்.
  • உள்நாட்டில் சிறு, குறு நிறுவனங்களை மேம்படுத்தும் விதமாக தோல் பொருட்கள், வடிவமைக்கப்பட்ட நவரத்தின கற்கள் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • நாப்தா மற்றும் காப்பர் துகள் மீதான வரி இரண்டரை விழுக்காடாக குறைக்கப்படுகிறது. நகை உற்பத்தியாளர்கள் கோரிக்கையை ஏற்று தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 12.5 விழுக்காட்டில் இருந்து 7.5 சதவிகிதம் ஆக குறைக்கப்பட்டுள்ளது.

  2022ம் ஆண்டு மார்ச் வரை ஸ்டீல்ஸ் இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வரி விதிப்பு நடைமுறைகள் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Budget 2021, Nirmala Sitharaman