Budget 2021 | பெட்ரோல், டீசல் மீது புதிய வரி விதிப்பு: விலை மேலும் உயருமா?

Budget 2021 | பெட்ரோல், டீசல் மீது புதிய வரி விதிப்பு: விலை மேலும் உயருமா?

பெட்ரோல், டீசல்

நாளை (பிப்ரவரி 2) முதல் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ. 2.50, டீசல் விலையில் லிட்டருக்கு 4 ரூபாய் விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி விதிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

  • Share this:
பெட்ரோல், டீசல் மீது மத்திய பட்ஜெட்டில் விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி (AIDC) என்ற புதிய வரி அமல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார், இதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயருமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை சமீப நாட்களில்  புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. ஏற்கனவே சில நகரங்களில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 90 ரூபாயை கடந்து விட்டது. இதனிடையே இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல், மது உள்ளிட்டவை மீது விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி என்ற புதிய வரி அமல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

நாளை (பிப்ரவரி 2) முதல் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ. 2.50, டீசல் விலையில் லிட்டருக்கு 4 ரூபாய் விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி விதிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இருப்பினும் இந்த வரி உயர்வின் மூலம் பெட்ரோல், டீசல் விலையில் ஏற்றம் இருக்காது எனவும் அவர் கூறினார்.

பெட்ரோல், டீசல்


பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் அடிப்படை கலால் வரி (BED), சிறப்பு கூடுதல் கலால் வரி (SAED)விகிதங்கள் ஆகியவை குறைக்கப்படுவதால் விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி அமல்படுத்துவதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை உயராது என்பதால் நுகர்வோருக்கு இது பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.



மத்திய அரசின் இந்த புதிய வரி குறித்த அறிவிப்பு ஏற்கனவே பெட்ரோல், டீசலின் விலை உயர்வால் சுமையை சந்தித்துள்ள வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும், நிர்மலா சீதாராமனின் விளக்கத்தால் சற்று நிம்மதிப் பெருமூச்சை தந்துள்ளது.

பெட்ரோல், டீசல் மட்டுமல்லாது வேறு சிலவற்றின் மீதும் வேளாண் வரி விதிக்கப்படுவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபானங்கள் மீது 100% வேளாண் வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தங்கம் மற்றும் வெள்ளி பார் கட்டிகள் மீது 2.5%, கச்சா பாமாயில் மீது 17.5%, கச்சா சோயா பீன்ஸ், சன்பிளவர் எண்ணெய் மீது 20%, ஆப்பிள் மீது 35%, பட்டாணி மீது 40% விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி விதிக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: