மத்திய அரசின் 2023-24 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையின்போது, தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், கிராமப்புற பகுதிகளில் உள்ள 8.71 கோடி பெண்கள், 81 லட்சம் சுய உதவிக் குழுக்களில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், " இந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் அடுத்த கட்டமாக பெரிய உற்பத்தியாளர் கூட்டமைப்பாக (அல்லது) நிறுவனமாக வலுப்படுத்தப்படுவார்கள். ஒவ்வொரு கூட்டமைப்பும் பல ஆயிரம் உற்பத்தியாளர்களை கொண்டதாக இருக்கும். இந்த கூட்டமைப்புகள், பொருளாதாரங்களுக்கு தேவையான மூலப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு ஆதரவு வழங்கப்படும். மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த பொருளை நுகர்வோரிடம் கொண்டு செல்லும் வகையில், மதிப்பு கூட்டல், வடிவமைப்பு, சந்தைப்படுத்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும்" என்றும் தெரிவித்தார்.
நாட்டில் இன்று செயல்படும் புத்தாக்க நிறுவனங்கள் வர்த்தக அளவை அதிகரித்துக் கொண்டு யுனிகார்ன் நிலையை எட்டுவது போல், இன்றைய சுய உதவிக் குழுக்கள் தங்கள் வர்த்தக அளவை விரிவுபடுத்தி அதிக நுகர்வோரை சென்றடைவார்கள் என்றும் தெரிவித்தார்.
மகளிர் சுய உதவிக் குழு அமைப்பு:
இந்தியாவில், கடந்த 50 ஆண்டுகளாக, ஏழை பெண்கள் அடங்கிய சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 1992ம் ஆண்டு, "சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு' (SHG Bank Linkage Project:SHG-BLP) என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. கடந்த 30 ஆண்டுகளில் இந்த திட்டத்தின் கீழ், 67 லட்ச சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1 லட்சத்து 51 ஆயிரம் கோடி (1,51,051.3 Crore) வங்கிகள் மூலம் சுயஉதவிக்குழு உறுப்பினா்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 1.19 கோடி சுய உதவிக் குழுக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் 47 ஆயிரம் கோடியை (47,240.5 crore) வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளனர். மேலும், கடன் உதவி பெற்றவர்களில், 96% மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்கள் கடன்களை உரிய நேரத்தில் திருப்பி செலுத்தியுள்ளதாக மத்திய அரசு தரவுகள் தெரிவிக்கிறது.
இதையும் வாசிக்க: ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன்... நகர்ப்புற சுய உதவிக் குழுக்கள் பயன்பெறுவது எப்படி?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: FINANCE MINISTER NIRMALA SITHARAMAN, Union Budget 2023, Women