ரிசர்வ் வங்கியானது வீட்டுக்கடனுக்கான ரெப்போ வட்டி விகிதங்களை குறைத்ததால் வீட்டுக் கடனுக்கான வட்டிகளையும் வங்கிகள் குறைத்துள்ளன. அதேபோல், தற்போது கல்விக் கடன்களையும் குறைந்த வட்டியில் கொடுக்க வங்கிகள் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். வங்கி மோசடி மற்றும் வாரா கடன் பிரச்சனை காரணமாக வங்கிகள் பெரும் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். இதனால், நம்பிக்கையான துறைகளில் கடன் ஊக்குவிப்பை அதிகப்படுத்த ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
அதனடிப்படையில், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் வீட்டுக்கடன் பிரிவு, கடன் தொகையை பெறுவதில் பாதுகாப்பானதாக இருப்பதால் வீட்டுக்கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைத்து, வாடிக்கையாளர்களை ஈர்க்கத் தொடங்கியிருக்கின்றன. கல்விக் கடனைப் பொறுத்தவரையில், இந்தியாவில் வசிக்கும் சராசரி குடும்பம் ஒன்று தங்களது வருவாயில் மூன்றில் ஒரு பகுதியை உயர்கல்விக்கு செலவிட்டு வருகின்றனர்.
நடுத்தர குடும்பங்களின் அந்த சுமையைக் குறைக்க வங்கிகள் குறைந்த வட்டியில் கல்விக்கடனை வழங்கி வருகின்றன. ஒவ்வொரு வங்கியும், கடனுக்கு ஏற்ற அளவில் வட்டி விகிதங்களை நிர்ணயித்துள்ளன. தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், கல்விக் கடன் வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. 2016 -17 ஆம் ஆண்டில் 2.98 லட்சம் மாணவர்கள் கல்விக்கடன் பெற்றிருந்த நிலையில், 2019 -20 ஆம் ஆண்டுகளில் 3.09 லட்சமாக உயர்ந்தது. கல்விக் கடன் வழங்குவதில் பொதுத்துறை வங்கிகள் முன்னணியில் உள்ளன.
சுமார் 70 விழுக்காடு கடனை பொதுத்துறை வங்கிகளும், எஞ்சிய தொகையை தனியார் நிதி நிறுவனங்களும், வங்கிகளும் கொடுத்துள்ளன. வட்டியை பொறுத்த வரையில் குறைவான தொகையை பொதுத்துறை வங்கிகள் வசூலிக்கின்றன. 20 லட்சம் ரூபாய் வரையிலான கல்விக் கடனுக்கு 6.8 விழுக்காடு வட்டியை வசூலிக்கின்றன. 7 ஆண்டுகள் மாதத்தவணை செலுத்த காலவகாசம் கொடுக்கப்படுகிறது. கடைசி 2 மாதங்களில் மட்டும் கல்விக்கடனுக்கான வட்டி விழுக்காட்டில் 5 புள்ளிகளை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா குறைத்துள்ளது.
Also read... Gold Rate: சவரனுக்கு ரூ. 144 குறைந்தது தங்கத்தின் விலை... மாலை நிலவரம் என்ன?
7 ஆண்டு தவணை காலத்தில் 20 லட்சம் ரூபாய் கல்விக்கடனுக்கு குறைந்த வட்டி விகிதங்களை வழங்கும் வங்கிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 11 ஆம் தேதி வரை வங்கிகளின் இணையதளங்களில் கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வட்டி விகிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
வங்கிகள் - வட்டி விகிதம் -மாத தவணைதொகை
1. யூனியன் பேங்க் ஆப் இந்தியா - 6.80 - ரூ. 29,990
2. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா - 6.85 - ரூ.30,039
3. பேங்க் ஆப் இந்தியா - 6.85 - ரூ.30,039
4. பேங்க் ஆப் பரோடா - 6.85 - ரூ.30,039
5. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா - 6.85 - ரூ.30,039
6. பஞ்சாப் நேஷனல் பேங்க் - 6.90 - ரூ.30,088
7.ஐ.டி.பி.ஐ பேங்க் - 6.90 - ரூ.30,088
8. கனரா பேங்க் - 6.90 - ரூ.30,088
9. பேங்க் ஆப் மகாராஷ்டிரா - 7.05 - ரூ. 30,234
10. இந்தியன் பேங்க் - 7.15 - ரூ. 30,332
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.