Home /News /business /

பழமா அல்லது காய்கறியா? தக்காளி குறித்த சுவாரஸ்ய தகவல்கள்..

பழமா அல்லது காய்கறியா? தக்காளி குறித்த சுவாரஸ்ய தகவல்கள்..


றெக்கை கட்டி பறக்கும் தக்காளி விலை

றெக்கை கட்டி பறக்கும் தக்காளி விலை

Tomato Facts | தக்காளி விலை இப்போது றெக்கை கட்டி பறக்கும் நேரம். தக்காளியைப் பற்றி அறியாத பல தகவல்களை நாம் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

  தக்காளியின் விலை சந்தையில் திடீரென கிலோ 100 ரூபாய்க்கும் மேலாக உயர்வதும், சில நேரங்களில் 5 ரூபாய்க்கு கொடுத்தால் கூட வாங்க ஆள் இல்லாமல் இருப்பதும் நாம் பார்த்ததுதான். இப்போது தக்காளி விலை றெக்கை கட்டி பறக்கும் நேரம்.  தக்காளியைப் பற்றி அறியாத பல தகவல்களை நாம் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

  தக்காளி விலை எவ்வளவு உயர்ந்தாலும், வீட்டு சமையலில் முக்கிய இடம் வகிக்கும் தவிர்க்க முடியாத காய்கறிகளில் முதன்மையான இடம் அதற்குத்தான். சத்துக்கள் நிறைந்த தக்காளியை பயன்படுத்தாமல் செய்யும் குழம்பு நம் ஊரில் மிகவும் குறைவுதான். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தக்காளிக்கு சொந்த ஊர் இந்தியா அல்ல என்பது தெரியுமா? கி.மு.700-லிருந்தே தக்காளி இருப்பதற்கான சான்றுகள் உள்ளன.

  மெக்சிகோ நாட்டின் பூர்வீக மக்களின் உணவு பயன்பாட்டில் இருந்து, ஸ்பானீஷ்காரர்கள் மூலம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டத்திற்கு தக்காளி பரவியது. அதைதொடர்ந்து, ஐரோப்பியர்களால் தான் பல்வேறு நாடுகளுக்கும் தக்காளி அறிமுகம் செய்யப்பட்டது.

  ஆங்கிலத்தில் இதற்கு வழங்கும் பெயரான டொமேட்டோ என்பது, நஃகுவாட்டில் மொழிச்சொல்லான டொமாட்ல் என்பதில் இருந்து வந்தது. குண்டான பழம் என்பது இதன் பொருளாகும். தக்காளியின் குடும்பமான நைட் ஷேட் குடும்பத்தை சேர்ந்த பழங்கள் பெரும்பாலும், விஷத்தன்மை கொண்டிருந்ததால், தக்காளியும் ஆரம்பத்தில் விஷமாகவே கருதப்பட்டது. மேற்கத்திய மந்திரவாதிகள் ஓநாய்களை வரவழைக்க தக்காளியை பயன்படுத்தியதால், அதற்கு WOLF PEACH என்ற மற்றொரு பெயர் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

  ALSO READ | தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் சிலைகள் சிதிலம்... கும்பாபிஷேகம் நடத்திட பக்தர்கள் கோரிக்கை

  16ம் நூற்றாண்டில் முதன் முறையாக போர்ச்சுகல் ஆராய்ச்சியாளர்களால் தக்காளி இந்தியாவிற்கு கொண்டு வரப்பாட்டாலும், 18 நூற்றாண்டில் தான் ஆங்கிலேயர்களுக்காக இந்தியாவில் தக்காளி பயிரிடப்பட்டது. அது முதல் இந்திய உணவு பண்பாட்டில் தக்காளி கொஞ்சம் கொஞ்சமாக இடம்பிடித்து இன்று நாட்டின் சமையலறையை கட்டி ஆள்கிறது. சர்வதேச அளவில் தக்காளி உற்பத்தியில் சீனா, அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடம் வகிக்கிறது.

  ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யக்கூடிய தக்காளி பயிருக்கு வெப்பம் மிக முக்கியம். அவற்றின் நிறமும் வெப்பநிலையை பொருத்தே மாறுபடுகிறது. சிவப்பு நிறத்தில் உருண்டு காணப்படும் தக்காளி பெரும்பாலும் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. அதேநேரம், மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, ஊதா வண்ணங்களில் மட்டுமல்ல கருப்பு நிறத்திலும் கூட தக்காளி உண்டு. இதில், செர்ரி, திராட்சை, பிளாக் கிரிம், பிராண்டி வைன், செரோக்கி பர்பிள், ரோமா,பீஃப்ஸ்டீக், மினி தக்காளி, கலப்பினமே இல்லாத குலதெய்வம் தக்காளி போன்ற பல்வேறு வகைகளும் உள்ளன.

  ALSO READ |  மற்ற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்க்க முயற்சி: ஆளுநர் ஆர்.என்.ரவி

  இதேபோன்று ஆரஞ்சு, பருத்த திராட்சை, குடைமிளகாய், கோவைப்பழம், முலாம் பழம் மற்றும் முந்திரி பழம் போன்ற பல்வேறு வடிவங்களை கொண்ட தக்காளிகளும் விளைவிக்கப்படுகின்றன. தக்காளி என்பது பழமா அல்லது காய்கறியா என்பதில் பல ஆண்டுகள் குழப்பம் நீடித்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த அமெரிக்க உச்சநீதிமன்றம், தக்காளியை காய்கறியாக 1893ம் ஆண்டு அங்கீகரித்தது. 10 ஆயிரத்திற்கும் அதிகமான வகைகளில் விளைவிக்கப்படும் நிலையில், தக்காளியானது ரசம், சட்னி, சாஸ், கெட்ச்-அப் என நமது அன்றாட உணவில் நீக்கமற கலந்துள்ளது. அதை உணர்த்த தக்காளியை கொண்டு திரைப்படங்களில் பல்வேறு நகைச்சுவை காட்சிகள் இன்று வரை இடம்பெறுகின்றன.

  அதேசமயம், தக்காளியின் விலை நிலையாக இருப்பது இல்லை என்பதே, விவசாயிகளின் பெரும் துயரமாக உள்ளது. சில நேரங்களில் வாடிக்கையாளர்கள் வாங்க முடியாத அளவிற்கு தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து இருக்கும். அடுத்த சில நாட்களில், விலை வீழ்ச்சியால் சாலையோரங்களில் தக்காளி வீணாக கொட்டப்படுவதையும், அறுவடை செய்யாமல் செடிகளிலேயே அழுக விடுவதையும் பல இடங்களில் காணமுடியும்.

  மூளை மற்றும் இதய செயல்பாட்டிற்கு நன்மை பயக்கும் அழற்சி எதிர்ப்பு குணாதிசயங்களை கொண்ட தக்காளி, விலையேற்றத்தால் அடிக்கடி இதயத்திற்கு அதிர்ச்சியை கொடுப்பதும் தொடர்கதையாக உள்ளது.
  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Tomato

  அடுத்த செய்தி