இந்தியாவில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அத்தியாவசிய பொருட்களும், அடிப்படை உணவுப் பொருட்களின் விலையும் கடந்த ஓராண்டில் பலமுறை அதிகரித்துள்ளது. குறிப்பாக, தக்காளியின் விலை இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு டெல்லியில் கிலோ 15 ரூபாய் என்று விற்பனையான தக்காளி, தற்போது கிலோ 39 ரூபாய் என்று விற்கப்படுகிறது. அதே போல, மும்பையில் கிலோ 28 ரூபாய் என்று விற்பனையான தக்காளி, தற்போது கிலோ 77 ரூபாய் என்று விற்பப்படுகிறது. தமிழகத்திலும் தொடர்ந்து விலை அதிகரித்து கிலோ 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. இதற்கு முக்கிய காரணமாக, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து தக்காளியின் விளைச்சல் மிகவும் குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
தக்காளிக்கு அடுத்ததாக, சமையலில் அடிக்கடி இடம்பெறும் காய்கறி, மற்றும் பலரும் விரும்பும் ஒரு காய்கறி தான் உருளைக்கிழங்கு. பலவிதமாக உருளைக்கிழங்கை பயன்படுத்தி எளிதாக சமைக்கலாம். ஆனால் இதன் விலையும் ஒன்றரை மடங்கு உயர்ந்துள்ளது. பெரு நகரங்களில் கடந்த ஆண்டு ஒரு கிலோ ₹22 இன்று விற்கப்பட்ட உருளைக்கிழங்கின் அடிப்படை விலை தற்போது கிலோ ₹27 க்கு விற்கப்படுகிறது. வேறு இடங்களில் கிலோ ₹16 முதல் ₹18 வரை விற்கப்பட்டு வந்த உருளைக்கிழங்கு ₹27 இன்று உயர்ந்துள்ளது.
ஆனால், தற்போது வெங்காயத்தின் விலையில் பெரிய மாற்றமில்லை. பொதுவாக வெங்காயத்தின் விலை தான் நான்கு மடங்கு முதல் ஐந்து மடங்கு வரை அதிகரித்து வெங்காயம் வெட்டாமலேயே அனைவரையும் கண் கலங்க வைக்கும். மற்ற காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ள அளவுக்கு வெங்காயம் விலை ஏறவில்லை என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. சராசரியாக வெங்காயத்தின் அடிப்படை விலை கிலோவுக்கு 3 – 4 ரூபாய்தான் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காய்கறிகளின் விலைப் பற்றிய தகவல் நுகர்வோர் அமைச்சகம் வெளியிட்ட தரவில் பட்டியலிடப்பட்டிருந்தது.
குளோபல் ஃபைனான்சியல் சர்விஸ் நிறுவனத்தின் முன்னணி பொருளாதார நிபுணரான மாதவி அரோரா இதைப் பற்றி கூறுகையில் “உணவு சார்ந்த பணவீக்கம் (ஆண்டு அடிப்படையில் 8.4 சதவீதமும், மாதாந்திர அடிப்படையில் 1.6 சதவிகிதமும்) இந்த ஏப்ரல் மாதத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது. சில்லறை வணிகம் இதனால் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இதன்மூலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை அதிக அளவு விலை ஏற்றம் காணப்பட்டது.
பழங்களைப் பொறுத்தவரை அந்தந்த பருவ காலங்களுக்கு ஏற்ப விலை ஏறுவது இறங்குவது என்று இருந்தாலும் தானியங்களும், சமையல் எண்ணையும் தொடர்ந்து விலை அதிகரிக்கப்பட்டன. அது மட்டுமின்றி இந்தோனேசியாவில் அறிவிக்கப்பட்டிருந்த எண்ணெய் ஏற்றுமதி தடையும் இதற்கு ஒரு காரணமாக அமைந்திருந்தது” என்று கூறினார்.
Also Read : வித்தியாசமான வேலைகளைச் செய்து மாதம் ரூ. 2 லட்சம் சம்பாதிக்கும் லண்டன் பெண்... எப்படித் தெரியுமா?
தானியங்கள் சர்க்கரை மற்றும் காய்கறிகள் ஆகியவை விலை குறைவாக இருந்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில காய்கறிகளின் விலை, அது மட்டுமின்றி எளிதில் காலாவதியாகக்கூடிய அல்லது கெட்டுப்போகக்கூடிய உணவுகளின் விலைகளும் அதிகரித்து வருகின்றன, இனியும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அதிக வெப்பத்தால் மற்றும் போக்குவரத்து செலவுகள், எரிபொருள் விலை ஆகியவை அதிகரிப்பாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டது என்று கூறினார்.
Also Read : PM Cares | கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித் தொகை!
சில்லறை வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் வரம்பையும் விட அதிகமாக உள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தால், ரிசர்வ் வங்கி தனது நிதி கொள்கைகளை திருத்தி, விலையேற்றத்தை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளது. விரைவில், RBI நிதி கொள்கை குழுவினர் சந்திப்பு நடக்க இருக்கிறது என்பது குறிப்படத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.