ஏப்ரல் 01, 2022 நிலவரப்படி சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான தனிநபர்கள் வருமான வரி தேவையை (outstanding income tax demand) நிலுவையில் வைத்துள்ளனர். இது ரூ.8.40 லட்சம் கோடிக்கும் மேல் உள்ளதாக மாநிலங்களவையில், மத்திய நிதி அமைச்சகம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதோடு மட்டுமின்றி இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் அதாவது LIC-யிடம் சுமார் ரூ.21,000 கோடிக்கு மேல் உரிமை கோரப்படாத (unclaimed) நிதி குவிந்து கிடப்பதாகவும் நிதி அமைச்சகம் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி மாநிலங்களவையில் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ பதில் அறிக்கையில், கடந்த 2019-20 நிதியாண்டில் கார்ப்பரேட் வரியைத் தவிர மற்ற வருமானத்தின் மீதான வரி ரூ.4.80 லட்சம் கோடியிலிருந்து, 2020-21 நிதியாண்டில் ரூ.4.70 லட்சம் கோடியாக குறைந்தது.
இருப்பினும், இது 2018-19 நிதியாண்டில் கிடைத்த ரூ.4.61 லட்சம் கோடியை விட அதிகமாகும். தனிநபர் தொடர்பான வருமான வரி நிலுவை தேவையை பொறுத்தவரை, நிலுவையில் உள்ள தனிநபர்களின் எண்ணிக்கை, 1.31 கோடிக்கு மேல் மற்றும் சுமார் ரூ.8.40 லட்சம் கோடிக்கு மேலான தொகை நிலுவையில் உள்ளது. அறிக்கைக்காக ரூ100-க்கும் அதிகமான மொத்த தேவை கொண்ட PAN-கள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு உள்ளதாக நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
மேலும் வருமான வரிச் சட்டம் 1961-ன் விதிகளின் படி, நிலுவையில் உள்ள வரி பாக்கிகளை விரைவாக வசூலிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் (Central Board of Direct taxes) வருடாந்திர மத்திய செயல் திட்ட ஆவணத்தின் ஒரு பகுதியாக வரிகளின் நிலுவைத் தொகையை மீட்டெடுப்பதற்கான புதிய உத்திகள் மற்றும் இலக்குகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நிலுவையில் உள்ள தேவையை மீட்டெடுப்பதற்கான அதிகாரிகளின் மதிப்பீடுகள் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. தனிப்பட்ட பரிவர்த்தனை அறிக்கை மற்றும் பிற ஏஜென்சிகளால் பராமரிக்கப்படும் தரவுத்தளங்கள் மூலம் மீட்டெடுப்பதற்கான சொத்துக்கள் அடையாளம் காணப்படும் என்றார்.
Also Read : வாரிசுதாரரை நியமிக்காவிட்டால் வங்கி டெபாஸிட் திரும்ப பெறுவதில் சிக்கல்
இதனிடையே மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த நிதியமைச்சகத்தை சேர்ந்த அமைச்சர் பகவத் காரத், எல்ஐசி அதன் வெப்சைட்டில் உரிமை கோரப்படாத தொகைகள் (unclaimed amounts) பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது. பாலிசிதாரர்கள் /சட்ட வாரிசுகள் தங்கள் பாலிசி எண்ணுக்கு உரிய unclaimed amounts-களை சரிபார்க்கலாம் என்றார்.
Also Read : உங்களிடம் கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் உள்ளதா? அப்ப இந்த தகவல் உங்களுக்கு தான்!
டிசம்பர் 31, 2021 நிலவரப்படி, தனிநபர் மற்றும் குரூப் பிசினஸ் பாலிசிகளின் கீழ் ரூ.21,336.28 கோடி நிலுவையில் உள்ள உரிமை கோரப்படாத தொகை இருப்பதாக எல்ஐசி தெரிவித்துள்ளது என்றும் குறிப்பிட்டார். செப்டம்பர் 20, 2021 வரை 10 ஆண்டுகளுக்கும் மேல் உரிமை கோரப்படாமல் இருந்த ரூ.1,255.66 கோடி நிதி மூத்த குடிமக்கள் நல நிதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.