கடந்த சில நாட்களாகவே எஸ்பிஐ, ஐசிஐசிஐ, ஐடிபிசி உள்ளிட்ட பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் விதமாக ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்ந்தி வருகின்றன. இதனால் வங்கிகளில் ஃபிக்சட் டெபாசிட் கணக்குகளை ஆரம்பிக்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மூன்றாவது முறையாக உயர்த்தியது. இதனால் வங்கிகள் அனைத்தும் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக ஃபிக்சட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தை அதிகரிக்கத் தொடங்கின.
எஸ்பிஐ 5.65 சதவீதமும், ஹெச்டிஎஃப்சி 6.10 சதவீதமும், ஆக்சிஸ் 6.05 சதவீதமும், ஐசிஐசிஐ மற்றும் பஞ்சாப் நேஷனல் பேங்க் 6.10 சதவீதமும் ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டியை அதிகரித்துள்ளன. ஆனால் வங்கிகளை விட அதிக வட்டி தரக்கூடிய ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள் தபால் நிலையங்களில் உள்ளது பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்கு (PPF) மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா ஆகிய 3 தபால் நிலைய ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களும் வங்கிகளை விட அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS):
2004ம் ஆண்டு மூத்த குடிமக்களுக்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட சேமிப்பு திட்டமான இது, வங்கிகளைக் காட்டிலும் முதியவர்களுக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதாவது, மூத்த குடிமக்களுக்கான இந்த சேமிப்புத் திட்டம் காலாண்டு அடிப்படையில் ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டியை வழங்குகிறது. சமீபத்தில் உயர்த்தப்பட்ட பல வங்கிகளின் ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள் எதையுமே இதனுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு அதிக வட்டி கிடைப்பதால், மூத்த குடிமக்களின் முதன்மையான தேர்வாக உள்ளது. தபால் நிலைய சேமிப்பு திட்டமான இதில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 55 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற சிவில் ஊழியர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் ஆகியோர் இணையலாம்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யும் மூத்த குடிமக்களுக்கு, வருமான வரிச் சட்டம், 1961, பிரிவு 80C-யின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகையும் வழங்கப்படுகிறது.மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் ஃபிக்சட் டெபாசிட் கணக்கை தொடங்க குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயும், அதிகபட்ச சேமிப்புத் தொகையாக ரூ.15 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதியவர்களுக்கான சேமிப்பு திட்டம் என்பதால் வைப்புத்தொகைக்கான முதிர்வு காலம் 5 ஆண்டுகளாக இருந்தாலும், இடையில் பணத்தை திரும்ப பெறும் வசதி உள்ளது. ஆனால் முதிர்வு காலத்திற்கு முன்பே பணத்தை எடுக்க வேண்டும் என்றால் அபாரதம் செலுத்த வேண்டும்.
Also Read : பிக்சட் டெபாசிட் திட்டத்தை விட இதில் வட்டி அதிகம்.. நோட் பண்ணிக்கோங்க!
பப்ளிக் ப்ராவிடன்ட் பண்ட் (PPF):
பொது வருங்கால வைப்பு நிதி கணக்கானது, அதிக வட்டி விகிதம், கடன் பெறும் வசதி, வரிச் சலுகை ஆகிய பல நன்மைகளைக் கொண்டுள்ளது. மொத்தம் 15 ஆண்டுகள் முதிர்வு காலத்தைக் கொண்ட இந்த திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு 3 அசத்தலான ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. முதலீட்டாளர்கள் விரும்பினால், PPF திட்டத்தில் இருந்து 5ம் ஆண்டு விலகிக்கொள்ளலாம், முதலீட்டாளர் 4ம் ஆண்டிற்கு பிறகு தனது முதலீட்டு தொகையில் இருந்து கடன் பெறும் வசதியும், 7ம் ஆண்டில் இருந்து முதலீட்டு தொகையிலிருந்து குறிப்பிட்ட அளவிலான நிதியை திரும்ப பெறும் வசதியும் உள்ளது.
எஸ்பி, ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி, ஆக்சிஸ் என எந்தவொரு வங்கியும் வழங்க முடியாத அளவிற்கு, பொது வருங்கால வைப்பு நிதிதிட்டத்தில் முதலீடு செய்யும் நபருக்கு 7.1 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. பொது மக்களுக்கான இந்த ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படுவது போலவே வருமான வரிச் சட்டம், 1961, பிரிவு 80C-யின் கீழ் வரிச் சலுகையும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிக பட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
Also Read : இன்சூரன்ஸ் எடுக்கும் போது இந்த 5 தவறுகளை மறந்தும் செய்ய வேண்டாம்!
சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY):
சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்பது பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க விரும்பும் பெற்றோர்களுக்கான பிரத்யேக சேமிப்பு திட்டமாகும். இத்திட்டம் 21 ஆண்டு முதிர்வு காலத்தை கொண்டதாக இருந்தாலும், பெண் குழந்தை 18 வயதை நிறைவு செய்யும் போது கல்வி, திருமணம் போன்ற செலவுகளுக்காக 50 சதவீத சேமிப்பை முன்கூட்டியே பெறலாம். மேலும் மருத்துவம் போன்ற எதிர்பாராத செலவுகளுக்காக 5 ஆண்டுகளிலேயே மொத்த சேமிப்பையும் திரும்ப பெறக்கூடிய வசதியும் உள்ளது. இந்த சேமிப்புத் திட்டம் காலாண்டு அடிப்படையில் ஆண்டுக்கு 7.6 சதவீத வட்டியை வழங்குகிறது.
பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக வடிவமைக்கப்பட்ட திட்டம் என்பதால், இதற்கு வருமான வரிச் சட்டம், 1961, பிரிவு 80C-யின் கீழ் வரிச் சலுகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை தொடக்க 10 வயதுள்ள பெண் குழந்தையின் பெயரில் 25 ரூபாய் முதல் 1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fixed Deposit, Govt Scheme, Post Office, Savings