• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • சிகரம் தொடும் பெட்ரோல், டீசல் விலை: பாதிக்கப்படும் நடுத்தர மக்கள்!

சிகரம் தொடும் பெட்ரோல், டீசல் விலை: பாதிக்கப்படும் நடுத்தர மக்கள்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

  • News18
  • Last Updated :
  • Share this:
பெட்ரோல், டீசல் விலை உயர்வால், நடுத்தர மக்களின் வாழ்க்கையை புரட்டிப்போடும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

கடந்த  2017-ம் ஆண்டு மே மாதம் முதல் பெட்ரோல், டீசலின் விலைகளை சர்வதேச சந்தை விலை நிலவரங்களுக்கேற்ப தினசரி மாற்றியமைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. தங்கம், வெள்ளி விலை நிலவரங்களைப் போல் அன்றன்றைக்கான சர்வதேச விலை அன்றன்றைக்கே உள்ளூர் சில்லறை மையங்களில் அமல்படுத்தப்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான பலன்கள் கிடைக்கும் என்றும் இதனால் எதிர்ப்பார்க்கப்பட்டது.

கடந்த வருடம் மே மாதம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.75 வீதம் விற்கப்பட்டு வந்தது. ஆரம்ப நாட்களில் பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்தது. பின்னர் சிறுக, சிறுக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சில நாட்களாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதை அடுத்து நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்த நெருக்கடியான சூழலில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி செப்டம்பர் 10-ம் தேதி நாடு முழுவதும் பாரத் பந்த் என்ற முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. இந்த போராட்டத்திற்கு திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும், வணிகர் சங்கம், மீனவர் சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டன.

அதனை தொடர்ந்து, “ பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது. ஒரு ரூபாய் குறைத்தால் கூட ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் உற்பத்தி வரியை குறைப்பதால், நிதி பற்றாக்குறை அதிகரிக்கும். நடப்பு கணக்கு பற்றாக்குறையிலும் தாக்கம் ஏற்படும். இதனால், வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி கிடைக்காமல் போய்விடும். இவையெல்லாம், வரி குறைப்பால் ஏற்படும் பாதகங்கள்.  பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதும் சரியான தீர்வு அல்ல ” என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் உயர்ந்துகொண்டே வருவதால், பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அவதியுற வைத்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணமும் பல இடங்களில் உயர்த்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகி யுவராஜ் தெரிவிக்கையில், பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவந்தால் மட்டுமே விலையில் ஏற்றம் குறையும். தொடர்ந்து டீசல் விலை அதிகரித்து வருவதால் சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகளின் வாடகை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் மற்ற மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது. கர்நாடகாவில் மாநில அரசு பெட்ரோல் விலையை குறைக்க முன்வந்தது போல தமிழகத்திலும் மாநில அரசு வாட் வரியை குறைக்க முன்வர வேண்டும் என்றும் அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதே போல பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே இருந்தால் நடுத்தர மக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும், இதன் விளைவை அரசு நாடாளுமன்ற தேர்தலில் சந்திக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று பெட்ரோலின் விலையில் லிட்டருக்கு 11 கசுகள் அதிகரித்து ரூ.85.69 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.78.10 என்று நேற்றைய விலையில் விற்கப்படுகிறது.

-வினோதினி ஆண்டிசாமி, உதவி ஆசிரியர், நியூஸ்18.காம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: