உலக அளவில் தற்போது மாற்று கரன்சியாக பலரும் கிரிப்டோ கரன்சியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். டிஜிட்டல் கரன்சி எனக் கூறப்பட்டாலும் பாதுகாப்பில் பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது கிரிப்டோ கரன்சி. உலகில் உள்ள குறிப்பிட்ட பெரிய வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பங்கு வர்த்தகர்கள் கிரிப்டோ கரன்சி பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறார்கள். இந்தியாவிலும் கிரி்ப்டோ கரன்சியின் பயன்பாடு கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் கிரிப்டோ கரன்சிக்கு எதிரான மனநிலையில் இருக்கும் பலரும் கிரிப்டோ கரன்சி பயன்பாட்டை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.
இதே போல் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்-ம் கிரிப்டோ கரன்சிக்கு எதிரான மனநிலையில்தான் இருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேசிய சக்திகாந்த தாஸ், தனியார் கிரிப்டோ வர்த்தகத்தை நாம் ஊக்குவித்தால் அது நம் பொருளாதாரத்தை மிகப்பெரிய சிக்கலுக்கு அழைத்துச் செல்லும் என எச்சரித்திருந்தார். அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது கிரிப்டோ கரன்சியை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொருளாதார விவகாரங்களுக்கான கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சக்திகாந்த தாஸ், “நம் நாட்டில் அதிகரித்து வரும் கிரிப்டோ கரன்சிக்கான தேவை நமது பொருளாதாரத்தில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி விடும் என எச்சரித்துள்ளார். கிரிப்டோ கரன்சி முழுமையாக தடை செய்யப்பட்டு சந்தையில் அதற்கான மதிப்பை சரியச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள அவர், எந்த அளவிற்கு ஒரு பொருளின் தேவை அதிகரிக்கிறதோ அந்த அளவிற்கு அதன் மதிப்பும் மாறும் என்பதை சுட்டிக் காட்டிய தாஸ், கிரிப்டோ கரன்சி முழுமையாக தடை செய்யப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
கிரிப்டோ கரன்சி என்பது ஒரு சூதாட்டத்தைப் போன்றது என்றும், இது முற்றிலும் ஊக அடிப்படையிலான கரன்சி என்றும் கருத்துக் கூறியுள்ள சக்திகாந்த தாஸ், இந்தியாவில் கிரிப்டோ கரன்சியின் வளர்ச்சி கவலையளிப்பதாக உள்ளது என்றும் கூறியுள்ளார். மத்திய மற்றும் பல மாநில நிதிநிலை அறிக்கை இன்னும் சில நாட்களில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்கு முன்னதாக கிரிப்டோ கரன்சி தொடர்பான உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் சக்திகாந்த தாஸ் வலியுறுத்தியுள்ளார்.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்படுவதை வரவேற்கும் பலரும், கிரிப்டோ கரன்சியின் பரிவர்த்தனைகள் ஏற்கவில்லை. ஆனால் சிலர் இந்த கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை மிகவும் பாதுகாப்பானது என்றும், நம்பகமானது என்றும் கூறி வருகின்றனர். சில அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கிரிப்டோ கரன்சியை சட்டப்பூர்வமாக்கும் முயற்சிகள் கூட தற்போது மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்தியாளார் : ரொசாரியோ ராய்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cryptocurrency, RBI