பொருளாதார வளர்ச்சி விகிதம்: தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக தேசிய சராசரியைவிட உயர்வில் தமிழகம்

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் தேசிய சராசரியை விஞ்சியுள்ளது.

பொருளாதார வளர்ச்சி விகிதம்: தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக தேசிய சராசரியைவிட உயர்வில் தமிழகம்
தலைமைச் செயலகம் (கோப்புப்படம்)
  • Share this:
தேசிய அளவிலான 2019-20 நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் தேசிய சராசரி வளர்ச்சி விகிதத்தை தமிழகம் தொடர்ந்து மூன்றாண்டு ஆண்டாக விஞ்சியிருப்பது தெரியவந்துள்ளது.

கடைசியாக, 2016-17 நிதியாண்டில் மட்டுமே தேசிய சராசரி பொருளாதார வளர்ச்சி தமிழகத்தை விட அதிகமாக இருந்தது. அப்போது தேசிய வளர்ச்சி விகிதம் 8.3 சதவீதமாகவும் தமிழகத்தில் அது 7.15 சதவீதம் ஆகவும் இருந்தது. மொத்த உற்பத்தி மதிப்பு தமிழகத்தில் 10.36 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

எனினும் , 2017-18 நிதியாண்டில் தமிழகம், பொருளாதார வளர்ச்சியில் தேசிய சராசரியை விஞ்சியது. அப்போது தேசிய வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாகவும், தமிழகத்தில் 8.59 சதவீதமாகவும் இருந்தது. தமிழகத்தில் உற்பத்தி மதிப்பு 11.25 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.


இப்போக்கு இரண்டாவது ஆண்டாக, 2018-19-லும் தொடர்ந்தது. அப்போது தேசிய வளர்ச்சி விகிதம் 6.1 ஆகவும், தமிழக சராசரி பொருளாதார வளர்ச்சி 7.95 சதவீதமாகவும் மாநில உற்பத்தி மதிப்பு 12.15 லட்சம் கோடி ரூபாயாகவும் அதிகரித்தது.

இந்நிலையில் 3வது ஆண்டாக 2019-20 நிதியாண்டில் தேசிய சராசரி பொருளாதார வளர்ச்சி விகிதத்தை தமிழகம் விஞ்சியுள்ளது. 2019-20-ல் தேசிய சராசரி வளர்ச்சி விகிதம் 4.2 ஆகவும், தமிழக வளர்ச்சி அதை விட இருமடங்காக அதிகரித்து 8.03 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மொத்த வளர்ச்சி விகிதத்தில் மகராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தேசிய அளவில் தமிழ்நாடு இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது. தனி நபர் வருவாயை பொருத்தவரை தமிழகத்தில் சராசரியாக ஒருவர் ஆண்டுக்கு 1.53 லட்சம் ரூபாய் ஈட்டுவதாகவும், அகில இந்திய அளவில் தமிழகம் 6ம் இடத்தில் இருப்பதாகவும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.முந்தைய நிதியாண்டான 2018-19ல், 1.42 லட்சம் ரூபாயுடன் 12ம் இடத்தில் இருந்த தமிழகம் இம்முறை 6 இடங்கள் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு துறைகள் சிறப்பாக செயல்பட்டதால் மாநில மொத்த உற்பத்தி மதிப்பு அதிகரித்ததாகவும் குறிப்பாக, உற்பத்தி மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட துறைகள் இரட்டை இலக்க வளர்ச்சி கண்டதே முக்கிய காரணம் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முதலீடுகளை ஈர்ப்பதிலும், பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில் முனைப்பு காட்டியதுமே தேசிய சராசரியை மூன்றாவது முறையாக தமிழகம் மிஞ்ச காரணம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுக சமூக ஊடகப் பிரிவு பொறுப்பாளர் பழனிவேல்தியாகராஜன், இது கொரோனா பரவலுக்கு முந்தைய நிலவரம் மட்டுமே என விமர்சித்துள்ளார்.
First published: August 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading