வீட்டில் பெண் குழந்தைகளின் கல்வி, திருமணம் என எதிர்காலத் தேவைகளுக்காக பணத்தை சேமிக்க வேண்டும் என்று நினைப்பது பெற்றோர்களின் இயல்பு. குழந்தைகளின் எதிர்காலத்தைப் பிரகாசமாக்க நினைக்கும் பெற்றோர்களுக்காகவே அவர்களது பெயரில் தபால் நிலையங்களில் பிரத்தியேகமான வங்கிக் கணக்கு தொடங்க முடியும். இதில் முக்கியமான ஒன்று தான் சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வ மகள் சேமிப்புத்திட்டம்.
சுகன்யா சம்ரிதி யோஜனா:
பெண் குழந்தைகளின் நலன்களுக்காகவே மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சேமிப்புத் திட்டம். பிறந்த குழந்தை முதல் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் யாராக இருந்தாலும் தபால் நிலையங்களில் கணக்கு துவங்கலாம். செலுத்தும் தொகைக்கு பிரிவு 80 சி யின் படி வரி விலக்கு அளிக்கப்படுவதால் அனைத்துப் பெற்றோர்களுக்கும் ஏதுவானத் திட்டமாக உள்ளது.
பெற்றோர்கள் தங்களது இரண்டு குழந்தைகளுக்கு இரண்டு கணக்குகளைத் தொடங்கலாம். ஒருவேளை இரட்டைக்குழந்தைகள் பிறந்த பின்னதாக, 3 வது குழந்தைகள் பிறக்கும் பட்சத்தில் அவர்களுக்கு கணக்குகளைத் தொடங்கலாம்.
சேமிப்புக் கணக்குத் தொடங்க என்ன செய்ய வேண்டும்?
பெண் குழந்தைகளின் நலன்களுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்திற்கான கணக்கைத் தொடங்க வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பிறப்பு சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒருவேளை உங்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லாத நிலையில், ஆதார் அடையாள அட்டை, பான் கார்டு, புகைப்படம் போன்றவற்றை சமர்ப்பித்து நீங்கள் கணக்குத் தொடங்கலாம். ரூபாய் 250 செலுத்தி சேமிப்புக் கணக்கை நீங்கள் தொடங்கலாம். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச வைப்புத்தொகையானது ரூபாய் 250 முதல் அதிகபட்சமாக ரூபாய் 1.5 லட்சம் வரை செலுத்தலாம்.
இவ்வாறு நீங்கள் சேமிக்கும் செலுத்தக்கூடிய சேமிப்புக் கணக்கிற்கு முதிர்வு என்பது கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து 21 ஆண்டுகளில் நிறைவு பெறும். ஆனால் நீங்கள் கணக்குத் தொடங்கியதிலிருந்து 15 ஆண்டுகள் வரை மட்டும் தான் சேமிப்புத் தொகையைச் செலுத்த முடியும்.
Also Read : 500 ஊழியர்கள் வேலையை விட்டு நீக்கிய ஷேர்சாட் நிறுவனம்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்
நீங்கள் செலுத்தும் தொகையை காசோலை, வரைவோலை மற்றும் நேரடியாக பணத்தை டெபாசிட் செய்யலாம். உங்களால் நேரடியாக தபால் நிலையங்களுக்குச் செல்ல முடியவில்லை என்றால், ஆன்லைன் வாயிலாகவும் பரிவர்த்தனை செய்ய முடியும். தொடர்ந்து நீங்கள் மாதந்தோறும் பணத்தை செலுத்தி வரவும். ஒருவேளை பணத்தை சரியாக கட்டத் தவறும் பட்சத்தில் டெபாசிட்டுடன் ஆண்டுக்கு ரூபாய் 50 அபராதம் செலுத்தினால் தான் கணக்கைப் புதுப்பிக்க முடியும்.
செல்வ மகள் சேமிப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.6 சதவீதமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கணக்கிடப்பட்டு வட்டி விகதங்களில் மாற்றம் ஏற்பட்டுவருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.