முகப்பு /செய்தி /வணிகம் / சோப்பு முதல் ஷாம்பூ வரை தொடர்ந்து உயரும் பொருட்களின் விலை.. என்ன காரணம்?

சோப்பு முதல் ஷாம்பூ வரை தொடர்ந்து உயரும் பொருட்களின் விலை.. என்ன காரணம்?

மாதிரி படம்

மாதிரி படம்

”ஏப்ரல் மாதம் பதிவாகி உள்ள பணவீக்கம் இந்த ஆண்டின் உச்சமாக இருக்கும். இந்த ஆண்டில் பணவீக்கம் 6 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்க முடியாது ”

ஏப்ரல் மாதத்தில் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நுகர்வோர் விலை குறியீடு (Consumer price index - CPI) வளர்ச்சி எண்கள் 7.79 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது தொடர்ந்து நான்காவது மாதமாக இந்திய ரிசர்வ் வங்கியின் பணவீக்க இலக்கை (inflation target ) விட அதிகமாக இருப்பதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறி உள்ளது.

இதனை தொடர்ந்து பணவீக்கம் நாட்டின் மிக முக்கிய தலைப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது. தற்போது அதிகரித்து வரும் சில்லறை பணவீக்கம் (Retail inflation) அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள பொருட்களின் MRP ரேட்டில் பிரதிபலிக்க தொடங்கியுள்ளது. FMCG (Fast-moving consumer goods) தயாரிப்புகளான சோப்பு, ஷாம்பு மற்றும் பிஸ்கட்கள், டிவி மற்றும் ஏசி உள்ளிட்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் உணவக கட்டணங்கள் உள்ளிட்டவை சமீபத்திய வாரங்களில் தொடர்ச்சியான விலை உயர்வை கண்டுள்ளன.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி! உணர்த்தும் அபாயம் என்ன?

சமீபத்தில் இந்தோனேஷியா பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இதனை தொடர்ந்து இந்தியாவில் சமையல் எண்ணெய் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களின் விலைகளில் ஏற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறி இருந்தனர். ஏனென்றால் சோப்புகள், ஷாம்புக்கள், நூடுல்ஸ் மற்றும் பிஸ்கட்கள் முதல் சாக்லேட்கள் வரை பல பொருட்களை தயாரிக்க பல தொழில்களுக்கு ஒரு மூலப்பொருளாக பாமாயில் தான் பயன்படுத்தப்படுகிறது.

இந்தோனேஷியாவின் தடை இந்தியாவில் பாமாயில் விநியோகத்திற்கு சிக்கல் ஏற்படுத்தி உள்ளது. பாமாயிலின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை அதை சார்ந்த பொருட்களின் உள்ளீட்டு விலையை ( input cost) உயர்த்தி உள்ளது. இதனால் பல பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

என்னது! இந்தியர்கள் அந்த விஷயத்திற்காக தான் அதிக இன்சூரன்ஸ் எடுக்கிறார்களா?

இதனிடையே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (HUL) தனது தயாரிப்புகளின் விலையை சுமார் 15 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. HUL-ன் சன்சில்க் ஷாம்புக்களின் விலை ரூ.8- ரூ.10 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. 100 மில்லி கிளினிக் பிளஸ் ஷாம்புவின் விலை 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பியர்ஸ் 125 கிராம் சோப்பின் விலை 2.4% மற்றும் மல்டிபேக் விலை 3.7% உயர்த்தப்பட்டுள்ளது. லக்ஸ் சோப்பின் சில மல்டிபேக் வேரியன்ட்ஸ்களின் விலை 9% அதிகரித்துள்ளது. Glow & Lovely விலை 6 - 8 % வரை உயர்த்தப்பட்டுள்ளது. தவிர பாண்ட்ஸ் டால்கம் பவுடர் விலையும் 5-7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் HUL ஏப்ரல் மாதத்தில் அதன் க்ளென்சிங் மற்றும் டிட்டர்ஜென்ட் தயாரிப்புகளின் விலையை 3-20 சதவீதம் வரை உயர்த்தியது. ப்ளூம்பெர்க் அறிக்கையின் படி, சர்ஃப் எக்செல் விலை ஜனவரியில் 20 % வரை உயர்ந்துள்ளது. ஹிந்துஸ்தான் யூனிலீவரின் தலைமை நிதி அதிகாரி ரித்தேஷ் திவாரியை மேற்கோள் காட்டி, வணிகத்தில் கிட்டத்தட்ட 30% மேஜிக் பிரைஸ் பாயின்ட்ஸ்களில் விற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த மே 12-ம் தேதி ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவில் 77.63-ஆக சரிந்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிரடியாக குறைந்ததால், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் டி.வி., வாஷிங் மிஷின்கள் மற்றும் ஃபிரிட்ஜ் உள்ளிட்ட நுகர்வோர் எலெக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் இன்புட் காஸ்ட்ஸ் (input costs) பாதிக்கப்பட்டன.

எனவே வரும் ஜூன் முதல் 3-5 சதவீதம் விலை உயர்வை காண்போம் என CEAMA தலைவர் எரிக் பிரகன்சா தெரிவித்துள்ளார். இது தவிர, ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவது உணவுத் தொழிலின் உள்ளீட்டு செலவுகளிலும் எதிரொலிக்கிறது. டோமினோஸ், பார்கள் மற்றும் கஃபேக்கள் போன்ற விரைவான சேவை உணவகங்கள் 15% வரை விலை உயர்வை காண்கின்றன.

சில்லறை பணவீக்கமானது ஏப்ரல் 2022-ல் 8 ஆண்டுகளில் இல்லாத அளவு 7.79 சதவீதமாக உயர்ந்தது. இது ஏப்ரல் 2021-ல் 4.23 சதவீதமாகவும், மார்ச் 2022-ல் 6.97 சதவீதமாகவும் இருந்தது. உணவு துறையில் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 8.38 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது முந்தைய மாதத்தில் 7.68 சதவீதமாகவும், முந்தைய ஆண்டு 1.96 சதவீதமாகவும் இருந்தது.

போர் மற்றும் வர்த்தகத் தடைகள் காரணமாக ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் பதற்றம் எவ்வளவு சீக்கிரம் குறைகிறதோ, அவ்வளவு சீக்கிரம் அது உலகப் பொருளாதார வளர்ச்சி மற்றும் விலை ஸ்திரத்தன்மைக்கு சிறந்ததாக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். ஏப்ரல் மாதம் பதிவாகி உள்ள பணவீக்கம் இந்த ஆண்டின் உச்சமாக இருக்கும். இந்த ஆண்டில் பணவீக்கம் 6 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்க முடியாது என்றும் கூறி இருக்கிறார்கள்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: AC, Business, Hiked price, Soap