நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் இன்றியமையாத ஆவணங்களில் ஒன்றாக ஆதார் மாறியுள்ளது. அரசு வழங்கும் எந்தவொரு உதவித் தொகையை நீங்கள் பெற வேண்டும் என்றாலும், அரசின் சமூக நலத் திட்டங்களில் நீங்கள் பலன் அடைய வேண்டும் என்றாலும் ஆதார் அவசியமானது.
இன்னும் சொல்லப் போனால், வங்கியில் கணக்கு தொடங்க, பான் அட்டை பெற, சிம் கார்டு வாங்குவதற்கு என எண்ணற்ற சேவைகளுக்கு ஆதார் எண் தேவைப்படுகிறது. முறையான முகவரியும், நீங்கள் இந்தியர் என்பதற்கு ஆதாரமாக குடும்ப அட்டை போன்ற ஆவணங்களும் இருந்தால் உங்களுக்கு ஆதார் கிடைத்து விடும்.
ஆனால், எந்தவித அடையாளமும் இல்லாமல் பாலியல் தொழிலாளியாக வாழ்க்கை நடத்துபவர்கள் ஆதார் பெற முடியாத சூழல் நிலவி வந்தது. பாலியல் தொழிலாளிகளின் மறு வாழ்வு நடவடிக்கைக்காக அரசு வழங்கும் எந்தவொரு திட்டங்களிலும் அவர்கள் இதன் காரணமாக பலன் பெற முடியாத நிலை ஏற்பட்டது.
இத்தகைய சூழலில், வசிப்பிடச் சான்று அல்லது அடையாள அட்டை எதுவுமின்றி, பாலியல் தொழிலாளர்கள் ஆதார் அட்டை கோரி விண்ணப்பம் செய்யலாம் என்று யுஐடிஏஐ அமைப்பு தெரிவித்துள்ளது. மாநிலங்களில் உள்ள சுகாதாரத் துறையின் கெசட் வரம்பில் உள்ள அதிகாரி சான்றளித்தால் போதுமானது என்று நிபந்தனைகள் தளர்வு செய்யப்பட்டுள்ளது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியத்தின் அதிகாரி சான்றளிக்கும் பட்சத்திலும் பாலியல் தொழிலாளிகள் ஆதார் அட்டை பெற்றுக் கொள்ளலாம்.
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்த தகவல்களை யுஐடிஏஐ தெரிவித்தது. பாலியல் தொழிலாளிகளிடம், சுகாதாரத் துறையினரின் சான்றிதழ் இருந்தால் வேறெந்த ஆவணமும் கேட்கப்பட மாட்டாது என்று உச்ச நீதிமன்றத்தில் யுஐடிஏஐ விளக்கம் அளித்தது.
Also Read : 60% தள்ளுபடி விலையில் Amazon Prime சந்தா: எப்படி பெறுவது?
முன்னதாக, இந்த வழக்கு குறித்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆதார் அட்டை இல்லை என்ற காரணத்தால் பாலியல் தொழிலாளிகளுக்கு உணவுப் பாதுகாப்பு கிடைப்பதில்லை என்று உச்ச நீதிமன்றம் தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தது. மேலும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவர்களது கஷ்டம் இன்னும் அதிகமாகிவிட்டது என்று நீதிமன்றம் கூறியிருந்தது.
யுஐடிஏஐ என்பது கடந்த 2016ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் இயங்கும் நிலையான அமைப்பு ஆகும். இந்தியாவில் ஆதார் அட்டை வழங்கவும், அதில் திருத்தங்களை மேற்கொள்ளவும் இந்த அமைப்புக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.
Also Read : Aadhaar பயன்படுத்தி உங்கள் ஐடி ரிட்டர்னை இ-வெரிஃபிகேஷன் செய்வது எப்படி?
ஆதார் அட்டையில் ஒருவரது பெயர், பிறந்த தேதி, இ-மெயில் முகவரி, மொபைல் எண் போன்ற விவரங்கள் இடம்பெறுகிறது. இதில் உள்ள 12 இலக்க எண் என்பது இந்திய குடிமகனின் அடையாளமாக இருக்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.