2% சரிவைச் சந்தித்தது இந்திய பங்குச்சந்தை: ரூ.2.63 லட்சம் கோடி இழப்பு!

news18
Updated: October 11, 2018, 10:02 PM IST
2% சரிவைச் சந்தித்தது இந்திய பங்குச்சந்தை: ரூ.2.63 லட்சம் கோடி இழப்பு!
மும்பையிலுள்ள பங்குச் சந்தை அலுவலகம்
news18
Updated: October 11, 2018, 10:02 PM IST
உலக அளவில் பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சுணக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 759 புள்ளிகள் சரிவடைந்தது. இதனால், முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ. 2.63 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவையே சந்தித்து வருகின்றன.

உலக பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையும் என்றும், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி குறையும் எனவும் சர்வதேச நாணய நிதியம் மதிப்பீடு செய்திருந்தது. இதனால் அமெரிக்க பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்தன. இது ஆசிய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்த நிலையில், இந்திய பங்குச்சந்தைகளும் சரிவைச் சந்தித்தன.

மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தின்போது 1,000 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்தது.

வர்த்தகத்தின் முடிவில் 759 புள்ளிகள் குறைந்து, 34,001 என்ற நிலையில் வர்த்தகம் நிறைவடைந்தது. சென்செக்ஸை மதிப்பிட உதவும் 30 பங்குகளில் ஓ.என்.ஜி.சி., யெஸ் வங்கி, இந்துஸ்தான் யூனிலிவர் ஆகிய பங்குகளை தவிர மற்ற அனைத்தும் சரிவைச் சந்தித்தன.

மொத்தத்தில் 1,736 பங்குகள் விலை சரிந்த நிலையில், 824 பங்குகள் விலை சற்றே ஏற்றம் கண்டன. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி, 225 புள்ளிகள் சரிவடைந்து 10,235 புள்ளிகள் என்ற நிலையில் வர்த்தகம் நிறைவடைந்தது. பொதுத்துறை பங்குகள் விலை சுமார் 5 விழுக்காடு வரை இன்று சரிவை சந்தித்தன.

மொத்தத்தில், இன்று மட்டும் இந்திய பங்குச்சந்தைகள் 2 விழுக்காட்டுக்கும் அதிகமாக சரிவடைந்தன. இதன் காரணமாக முதலீட்டாளர்களுக்கு ரூ.2.63 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இதனிடையே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 74 ரூபாய் 35 காசுகள் என வரலாறு காணாத வகையில் சரிவடைந்தது.
First published: October 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...