சென்செக்ஸ் ஒரே நாளில் 282 புள்ளிகள் உயர்வு- வரலாறு காணாத உயர்வு

news18
Updated: July 12, 2018, 9:14 PM IST
சென்செக்ஸ் ஒரே நாளில் 282 புள்ளிகள் உயர்வு-  வரலாறு காணாத உயர்வு
கோப்புப் படம்.
news18
Updated: July 12, 2018, 9:14 PM IST
இந்திய பங்குச் சந்தைகள் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளன. மும்பை பங்குச்சந்தை 282 புள்ளிகள் அதிகரித்து 36,548 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை 75 புள்ளிகள் அதிகரித்து 11,023 புள்ளிகளிலும் நிறைவடைந்தன.

கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தைகள் உயர்வை சந்தித்து வரும் நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் ஒரே நாளில் 282 புள்ளிகள் அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பிறகு தேசிய பங்குச்சந்தை மீண்டும் 11,000 புள்ளிகளை கடந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை கடந்த ஜனவரி மாதம் 29-ம் தேதி 36,443 புள்ளிகளை கடந்து வர்த்தகமானதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது 36,548 புள்ளிகளை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.

இந்திய தொழில் நிறுவன பங்குகள் அதிகரித்துள்ளதே இதற்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது. குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் விலை 4.42 விழுக்காடு அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது.  இதன்மூலம் 100 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனம் மீண்டும் இடம்பிடித்துள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவில் இருந்து தற்போது மீண்டு வரும் நிலையில், சந்தையில் உள்நாட்டு நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்துள்ளன.சர்வதேச சந்தையில் இந்தியாவுக்கு சாதகமான சூழல் நிலவுவதும் இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்ததற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது

கடந்த 5 நாட்களில் மட்டும் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 973 புள்ளிகள் அதிகரித்துள்ளது. ஈரானில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்ததை அடுத்து, கச்சா எண்ணெயின் விலை 25 விழுக்காடு சரிவடைந்துள்ளது. 80 டாலருக்கு விற்பனையான ஒரு பேரல் கச்சா எண்ணெய், தற்போது 74 டாலராக குறைந்துள்ளது. இது இந்திய சந்தைக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போரும் இந்திய சந்தைகளின் உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. அனைத்தையும் விட முக்கியமாக இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வர உள்ளதால், தொழில்துறைக்கு சாதகமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பும் இந்திய நிறுவனங்களின் முதலீட்டை அதிகரித்துள்ளது.
First published: July 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...