இந்தியாவில் மூத்த குடிமக்கள் பெரும்பாலும் தங்கள் ஓய்வுக்குப் பிறகு பிக்ஸ்டு டெபாசிட் போன்றவற்றை அதிகம் நம்பி உள்ளனர். நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட பெரும்பாலான குடிமக்கள் ஆபத்தான முதலீடுகளான பங்குச் சந்தைகள் அல்லது மியூஷுவல் பண்ட்ஸ் ஆகியவற்றை விரும்புவதில்லை. பெரும்பாலும் நல்ல வருமானத்தைத் தரக்கூடிய ஆபத்து இல்லாத சேமிப்பு திட்டங்களை விரும்புகின்றனர். அந்த வகையில் வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் மற்றவற்றை விட, அதிக பலனை தருகிறது.
இதற்காக அறிமுகம் செய்த திட்டம் தான் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம். இதை எஸ்சிஎஸ்எஸ் என்று கூறுவார்கள். இது வயதான மக்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு சேமிப்புத் திட்டமாகும். இது 60 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களுக்கானது, அதாவது இந்தத் திட்டத்தைத் திறக்கும் தேதியில் சந்தாதாரர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். இதன் மூலம், சந்தாதாரர்கள் அஞ்சல் அலுவலகம் அல்லது வங்கியில் இருந்து உத்தரவாதமான வருமானத்தைப் பெறலாம்.
இத்திட்டத்தின் அம்சங்கள் :
ஒரு தனிநபர் குறைந்தபட்ச வைப்புத்தொகையாக ரூ. 1,000 உடன் இந்த கணக்கைத் திறக்கலாம், அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரை சேமிக்கலாம். கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை ரூ.1,000-த்தின் மடங்குகளாக இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் வட்டி விகிதம் 7.4 சதவிகிதமாக வழங்கப்படுகிறது. இது மிக அதிகமான ஒன்றாகும். இதன் வட்டியானது காலாண்டு அடிப்படையில் மற்றும் டெபாசிட் தேதியிலிருந்து மார்ச் 31, ஜூன் 30, செப்டம்பர் 30 மற்றும் டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் வழங்கப்படும்.
also read : மே மாத பொது விடுமுறை மற்றும் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்!
எஸ்சிஎஸ்எஸ் கணக்கில் ஏதேனும் அதிகப்படியான டெபாசிட் செய்யப்பட்டால், அதிகப்படியான தொகை டெபாசிட்டருக்கு உடனடியாகத் திருப்பித் தரப்படும். இந்த திட்டத்தின் கீழ் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகளாகும். ஆனால் இதற்கு மேல் மூன்று ஆண்டுகளும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப நீட்டித்து கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீடு, வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு 80C-இன் பலன்களில் தகுதி பெறுகிறது. இருப்பினும், ஒரு நிதியாண்டில் எஸ்சிஎஸ்எஸ் கணக்குகளின் மொத்த வட்டியானது 50,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் அந்த வட்டிக்கு வரி வசூலிக்கப்படும்.
also read : புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் Life Insurance எடுக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
எஸ்சிஎஸ்எஸ் கணக்கு ஒரு வருடத்திற்கு முன் மூடப்பட்டால், எந்த வட்டியும் செலுத்தப்படாது மற்றும் கணக்கில் செலுத்தப்பட்ட ஏதேனும் வட்டி தொகையும் மீட்டெடுக்கப்படும். மேலும் எஸ்சிஎஸ்எஸ் கணக்கு வைத்திருப்பவர் ஒருவேளை இறந்து போய்விட்டால், இறந்த தேதியிலிருந்து, எஸ்சிஎஸ்எஸ் கணக்கு பொது சேமிப்புக் கணக்கின் விகிதத்தில் இருந்து வட்டி வழங்கப்படுகிறது.
தகுதி நிலைகள் :
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டக் கணக்கை 60 வயதுக்கும் மேற்பட்ட இந்திய குடிமக்கள் தொடங்கலாம். ஓய்வு பெற்ற சிவில் பணியாளர்கள் 55 வயதுக்கு மேல் தொடங்கலாம். மற்றும் 60 வயதுக்கு உட்பட்டவர்கள், ஓய்வூதிய பலன்கள் கிடைத்த ஒரு மாதத்திற்குள் முதலீடு செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு இந்த திட்டத்தை தொடங்கலாம். ஓய்வு பெற்ற பாதுகாப்புப் பணியாளர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 60 வயதுக்குக் குறைவானவர்கள் எஸ்சிஎஸ்எஸ் கணக்கைத் திறக்க தகுதியானவர்கள். ஓய்வூதிய பலன்கள் கிடைத்த ஒரு மாதத்திற்குள் முதலீடு செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு இந்த திட்டத்தை தொடங்க முடியும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.