குழந்தைகள் பிறந்தவுடன் தான் எதிர்காலம் குறித்த அச்சம் பலருக்கும் ஏற்படும். அதுவரை ஜாலியாக சுற்றித்திரிந்தவர்கள் எதில் முதலீடு செய்யலாம்? உயர்கல்விக்கு உதவுமா? என பல கேள்விகளுடன் சில முதலீட்டுத் திட்டங்களை ஆரம்பிக்கும் நிலை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும் பெண் குழந்தைகள் பிறந்துவிட்டால், சொல்லவே தேவையில்லை. கல்யாணம் மற்றும் உயர்கல்வி அனைத்தையும் கருத்தில் கொண்டு பல முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய ஆரம்பிப்போம். பெண் குழந்தைகளுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நிதி பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவை என்னென்ன? எப்படி பாதுகாப்பான திட்டமாக அமையக்கூடும் என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.
பெண் குழந்தைகளுக்கான நிதி பாதுகாப்புத் திட்டங்களின் லிஸ்ட்…
சுகன்யா சம்ரிதி யோஜனா ( SSY) : பெண் குழந்தைகளின் உயர்கல்வித் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் மத்திய அரசின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் சிறு சேமிப்புத்திட்டங்களில் ஒன்று தான் சுகன்யா சம்ரித்தி யோஜனா. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தில், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான சேமிப்புக்கணக்கைத் திறக்கலாம். குறைந்தப்பட்ச தொகையாக ரூ. 250 முதல் ரூ.1.5 லட்சம் வரையிலான வைப்பு நிதியை செலுத்த முடியும். இத்திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகள் அல்லது குழந்தைகள் 18 வயதை எட்டியவுடன் இப்பணத்தை நீங்கள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இதற்கு 7.6 சதவீத வட்டி விகிதம் கிடைப்பதால் நிச்சயம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான பாதுகாப்பு திட்டமாக அமைகிறது.
பாலிகா சம்ரிதி யோஜனா (Balika samriddhi yojana): ந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களில் உள்ள பெண் குழந்தைகளுக்கானத் திட்டமாகும். இத்திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள பெண் குழந்தைகள் இந்திய அரசால் வரையறுக்கப்பட்ட வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மற்றும் கடந்த 1997 ஆகஸ்ட் 15 அல்லது அதற்குப்பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும். இத்திட்டத்தை அந்தெந்த மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பெண்களைப் பள்ளிப்படிப்பில் ஈடுபடுத்துவது, குழந்தை திருமணத்தை தடுத்து திருமண வயதை நிர்ணயிப்பது போன்றவையே இந்த திட்டத்தின் குறிக்கோளாகும்.
இத்திட்டத்தின் மூலம் பெண் குழந்தைப் பிறந்த பிறகு 500 ரூபாயும், அதன் பிறகு 10 ஆம் வகுப்பு கல்வியினைப் படிக்கும் வரையில் ஆண்டுக்கு 300 முதல் 1000 ரூபாய் வரையிலான நிதியினை இத்திட்டம் வழங்குகிறது. இதோடு 18 வயதிற்குப் பிறகு திருமண அல்லது கல்வி உதவித்தொகையினையும் இத்திட்டத்தின் மூலம் பெற முடியும் வசதிகள் உள்ளது.
சிபிஎஸ்இ உதான் திட்டம் (CBSE udaan scheme): மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் மேற்பார்வையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளின் உயர்கல்வியைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ உதான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இயற்பியல், வேதியியல், கணிதம் பிரிவில் பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்த பெண் மாணவர்கள் இதன் மூலம் பலன்பெற முடியும்.
தகுதிகள்: இத்திட்டத்தின் மூலம் பயன்பெறவுள்ள பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 6 லட்சத்திற்குக் குறைவாக இருக்க வேண்டும். இதோடு ஸ்காலர்ஷிப்பிற்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பில் குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண்கள் மற்றும் CGPA ஐப் பின்பற்றும் வாரியங்களுக்கு அறிவியல் மற்றும் கணிதத்தில் 80 சதவீத மதிப்பெண்கள், குறைந்தபட்ச CGPA 8 மற்றும் 9 GPA ஆகியவை உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.
எனவே ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்கள் சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.cbse.nic.in அல்லது www.cbseacademic.nic.in என்ற இணையதளத்தின் படி UDAAN விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
இதில் தேர்வாகும் நபர்களுக்கு , வாரயிறுதியில் மெய்நிகர் வகுப்புகள் மூலம் இலவச ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் படிப்புகளையும், 11 மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது நாட்டின் பல்வேறு முதன்மையான பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான தேர்வுகளுக்குத் தயாராகும் படிப்பையும் வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது.
இடைநிலைக் கல்வியில் சிறுமிகளுக்கான தேசிய ஊக்கத்திட்டம் (National scheme of incentive to girls for secondary Education):
இந்தியாவில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த சிறுமிகளுக்கான உதவித்தொகையை பெறுவதற்கானத் திட்டமாக உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால், பெண் குழந்தைள் 8 வகுப்பில் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். பின்னர் இந்த குழந்தைகளின் பெயரில் ரூபாய் 3 ஆயிரம் நிலையான வைப்புத்தொகையாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த பணத்தை இவர்கள் 18 வயதை அடைந்தவுடன் வட்டியுடன் சேர்ந்து திரும்பப் பெறுவதற்கான உரிமை உள்ளது.
தகுதி:
8 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சிப் பெற்ற அனைத்து எஸ்சி, எஸ்டி பெண் குழந்தைகள் மற்றும் பிற சமூக குழுக்களைச் சேர்ந்த மாணவிகளும் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதே சமயம் சிபிஎஸ், என்விஎஸ் மற்றும் கேவிஎஸ் போன்ற மத்திய அரசு திட்டங்களுக்குப் பதிவு செய்தவர்கள் மற்றும் திருமணமானப் பெண்கள் இந்த திட்டத்திற்குத் தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Govt Scheme