2020-ஆம் ஆண்டு துவங்கிய கோவிட் பெருந்தொற்று 2 வருடங்கள் ஆகியும் இன்னும் ஓயாத நிலையில் நாட்டின் பொருளாதாரம், தனி நபர்களின் குடும்ப பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் பல கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. பலர் பாதிப்பிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கின்றனர். இன்னும் பலர் வீட்டிலிருந்தே வேலை செய்ய நிறுவனங்கள் வழங்கிய வாய்ப்பால் வேலை இழப்பிலிருந்து தப்பித்தனர். எனினும் பல ஊதிய குறைப்பு மற்றும் வேலை இழப்பு உள்ளிட்ட பல இன்னல்களை எதிர்கொண்டு வேறு வேறு பாதைகளில் பயணித்து வாழ்க்கையை ஒட்டி வருகின்றனர்.
அதே போல வேலையை தக்க வைத்து கொண்ட பலருக்கும் கடந்த 2 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இதனிடையே சமீபத்தில் இந்தியாவில் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு இந்த ஆண்டு ஊதிய உயர்வு வழங்குமா என்பது பற்றிய ஆய்வு ஒன்று சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த சர்வேயின் முடிவில் நாட்டில் இன்க்ரிமென்ட் எனப்படும் சம்பள உயர்வுகள் இந்த ஆண்டு (2022) கோவிட் தொற்றுக்கு முந்தைய நிலைகளை எட்டும் என்று தெரிய வந்துள்ளது.
இந்த சர்வேயில் பொருளாதாரம் மற்றும் நுகர்வோர் நம்பிக்கை குறித்து வணிக நிறுவனங்கள் உற்சாகத்துடன் இருப்பதால் இந்தியாவில் வேலை செய்யும் ஊழியர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போலவே நடப்பாண்டு ஊதிய உயர்வை பெற அதிக வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள் : எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் அந்த 2 அறிவிப்புகள்.. முழு விவரம்!
2021-ஆம் ஆண்டில் 8.4 சதவீதம் என்று இருந்த சராசரி ஊதிய உயர்வு நடப்பாண்டில் அதாவது 2022-ஆம் ஆண்டில் 9.4 சதவீதமாக இருக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டில், கோவிட்-க்கு முன்பு இந்தியாவில் சராசரி ஊதிய உயர்வு 9.25 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு வணிக சுழற்சியில் COVID-19 பெருந்தொற்று மிக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று நாட்டின் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் நம்புவதாக korn Ferry India annual rewards survey வெளிப்படுத்தி இருக்கிறது.
இதனிடையே தொற்றால் பாதிக்கப்பட்ட 2020-21 நிதியாண்டிற்கு பிறகு, நடப்பு நிதியாண்டிற்கான ஆரோக்கியமான நிதி மற்றும் செயல்பாட்டு செயல்திறனை நிறுவனங்கள் தொடர்ச்சியாக பதிவு செய்து வருகின்றன. தொழில் வல்லுநர்களின் கூற்றுப்படி, ஊதிய உயர்வுக்கான வரவு செலவுத் திட்டம் பெரும்பாலும் வணிக செயல்திறன், தொழில்துறை அளவீடுகள் மற்றும் தரப்படுத்தல் உள்ளிட்ட போக்குகளை பொறுத்தது. அதே போல வழக்கமான ஊதிய உயர்வை நடப்பாண்டு அளிக்க நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதற்கு மற்றொரு காரணம், திறமையான ஊழியர்களை தக்க வைக்க நிறுவனங்களுக்கு இடையே நடந்து வரும் போட்டியாகும்.
இதையும் படியுங்கள் : State Bank வாடிக்கையாளர்கள் நோட் பண்ணிக்கோங்க.. அடுத்த மாதம் முதல் வர போகிறது அதிரடி மாற்றம்!
ஏனென்றால் பல உலகநாடுகளை போலவே இந்தியாவையும் Resignation wave எனப்படும் ராஜினாமா அலை தாக்கி இருக்கிறது. தொற்று மற்றும் அடுத்தடுத்த லாக்டவுன்கள் காரணமாக ஊழியர்கள் சிறந்த வேலை-வாழ்க்கை சமநிலை, அதிக ஊதியம், எங்கிருந்தும் வேலை செய்வதற்கான நெகிழ்வுத்தன்மை உள்ளிட்ட பல நோக்கத்திற்காக பல துறைகளில் இருந்து வேலையை விட்டு வெளியேறி வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி சுமார் 40% ஊழியர்கள் வேலை தேடுவதில் தீவிரமாக இருப்பதாக கணக்கெடுப்பு கூறுகிறது.
நடப்பாண்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் சராசரியாக 10.5 சதவிகிதம் சம்பள உயர்வை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லைஃப் சயின்ஸ் துறை 9.5 சதவிகிதம் மற்றும் சேவைகள், ஆட்டோ மற்றும் ரசாயனங்கள் துறை 9 சதவிகிதம் அளிக்க கூடும். சர்வே எடுக்கப்பட்ட சுமார் 786 நிறுவனங்களில் 60% மாதாந்திர Wi-Fi மற்றும் பயன்பாட்டு பில்களை ஈடுகட்ட அலவன்ஸ்களை வழங்குகின்றன மற்றும் 46% நிறுவனங்கள் அலவெல்னஸ் பெனிஃபிட்களை வழங்குகின்றன. மேலும் சர்வேக்குட்படுத்தப்பட்ட நிறுவனங்களில் 10% மட்டுமே டிராவல் அலவெல்னஸை குறைக்க அல்லது ரத்து செய்ய திட்டமிட்டுள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.