ஹோம் /நியூஸ் /வணிகம் /

RIL AGM 2021 : கடந்த ஓராண்டில் 75000 பேருக்கு வேலைவாய்ப்பு - முகேஷ் அம்பானி பெருமிதம்

RIL AGM 2021 : கடந்த ஓராண்டில் 75000 பேருக்கு வேலைவாய்ப்பு - முகேஷ் அம்பானி பெருமிதம்

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

பெருந்தொற்று நேரத்திலும் ரிலையன்ஸ் குழுமம் எதிர்பார்ப்பைவிட மிகச் சிறப்பாக செயல்படுவதாக குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ரிலையன்ஸ் குழுமத்தின் 44வது ஆண்டு பொதுக்கூட்டம் 2வது ஆண்டாக காணொளி மூலம் நடைபெற்றது. இதில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பங்கேற்று முதலீட்டாளர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், மனிதகுலம் சந்திக்காத பெரிய பேரிடரை கொரோனா காலத்தில் மக்கள் சந்தித்து வருகின்றனர் என்றார். மேலும் கொரோனா பெருந்தொற்று நேரத்தில் ரிலையன்ஸ் ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றியதாக தெரிவித்தார். பெருந்தொற்று நேரத்திலும் வியாபாரத்தைத் தாண்டி மனிதாபிமான உதவிகளை ரிலையன்ஸ் குழுமம் அளித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்றால் ரிலையன்ஸ் குழுமத்தின் ஒரு பணியாளர் குடும்பம் பாதிக்கப்பட்டாலும் அது ஒட்டுமொத்த ரிலையன்ஸ் குழுமத்துக்கும் வருத்தம் என்று தெரிவித்தார். பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு முகேஷ் அம்பானி இரங்கல் தெரிவித்தார். பின்னர் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நடப்பாண்டில் இருந்தே நவி மும்பையில் உள்ள ஜியோ மையத்தில் புதிய வகுப்புகள் தொடங்கப்படும் என்று நீட்டா அம்பானி தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு மற்றும் கணிப்பொறி அறிவியல் படிப்புகளுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பாக கல்வி ஊக்கத் தொகை அளிக்கப்படும் என்றார். 2020ம் ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் மும்பை இன்டியன்ஸ் அணி கோப்பை வென்றதற்கு நீட்டா அம்பானி வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீட்டா அம்பானி சிறப்புரை ஆற்றினார். அதில் வேக்சின் சுரக்ஷா திட்டத்தில் இந்தியாவில் மிகப்பெரிய கார்பரேட் தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டதாகவும், இதன்மூலம் 20 லட்சம் பேருக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது என்றார். ரிலையன்ஸ் அறக்கட்டளை கடந்த 11 ஆண்டுகளாக துயர் நேரிடும் போது மக்களுக்கு தோளோடு தோள் நின்றதாக தெரிவித்தார். இந்தாண்டு ரிலையன்ஸ் அறக்கட்டளையின் முதல் முன்னுரிமை கொரோனா பேரிடர் நிவாரணத்துக்கு அளிக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய முகேஷ் அம்பானி, ஜியோ நிறுவனம் மொத்தமாக 42 கோடியே 50 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ரிலையன்ஸ் குழுமத்தில் கடந்தாண்டில் மட்டும் 75 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்றார். பசுமை ஆற்றல் துறையில் பெரிய அளவில் முதலீடு செய்ய உள்ளதாகவும் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியான செப்டம்பர் 10ம் தேதி மலிவு விலை 4ஜி "ஜியோ போன் நெக்ஸ்ட்" அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் பொதுக்கூட்டத்தில் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையும் பங்கேற்று பேசினார். அப்போது ரிலையன்ஸ் ஜியோவின் டிஜிட்டல் முயற்சிக்கு சுந்தர்பிச்சை, பாராட்டு தெரிவித்தார். மேலும் ஜியோ cloud வசதியை பெறும் வகையில் ஜியோ 5ஜி யுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் சுந்தர்பிச்சை கூறினார். அடுத்த தொழில்நுட்ப அலையில் ஜியோவுடன் இணைந்து பங்கெடுப்பதில் மகிழ்ச்சி என்றும் சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Reliance, Reliance AGM 2021