விலைவாசியை கட்டுப்படுத்தும் நோக்கில், ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தை அதிகரித்துக் கொண்ட இருக்கிறது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம், அதன் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாட்டின் பண வீக்கம், விலை வாசி உயர்வு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் நிதிக் கொள்கை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் விளக்கம் அளித்தார்.
அதன்படி, குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.35 சதவீதம் உயர்த்தப்படுதவாக அறிவித்தார். இதனால் கடனுக்கான வட்டி வகிதம் 5.9 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.
ஒரே ஆண்டில் 5வது முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வீடு, வாகன லோன் வாங்கினால் மாத வட்டி விகிதம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரெப்போ விகிதம் :
ரெப்போ விகிதம் என்பது ஒரு நாட்டின் மத்திய வங்கி, மற்ற வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் வட்டி விகிதம் ஆகும். இந்தியாவில் உள்ள மத்திய வங்கி, அதாவது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்த ரெப்போ விகிதத்தைப் பயன்படுத்துகிறது.
எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் 5% வட்டி என்று சொன்னால் ஒரு வங்கி 10000 ரூபாய் கடன் வாங்கும். அதுவே 15% வட்டி என்று சொன்னால் 4000 ரூபாய் போதும் என்று சொல்லி விடும். அப்போது வணிக வங்கிகளிடன் பணம் குறைவாக இருக்கும். எனவே மக்களுக்கு அதிக வட்டியில் கடன் கொடுக்க வேண்டி இருக்கும். இதனால் பணப்புழக்கம் என்பது குறையும். பணவீக்கம் கட்டுப்படும்.
அதிக வட்டியால் மக்கள் வங்கிகளில் கடன் வாங்குவது குறையும். புதிய கடன்களுக்கு வட்டி அதிகரிக்கும். மாதத்தின் கடன் வட்டி பங்கை அதிகரிக்காமல், கடன் செலுத்தும் காலத்தை அதிகரிக்கும். ஆனால் ஏற்கனவே மக்கள் வங்கியில் வாங்கிய கடன்களின் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது.
இதையும் படிங்க : ஷேர் மார்க்கெட் புதுப் பங்கு வெளியீட்டு சந்தை இப்படி தான் இயங்குகிறதா?
பணவீக்கம் என்றால் என்ன?
மக்கள் அதிகமாக பணம் கையில் வைத்திருக்கும்போது ஒரு பொருள் என்ன விலையாக இருந்தாலும் வாங்க முன்வருவர். அதிக பணம் சந்தையில் புழங்கினால் பணத்தின் மதிப்பு என்பது குறைந்துவிடும். இதுவே பணவீக்கம் எனப்படும்.
சட்டப்படி நாட்டின் பணவீக்கம் என்பது 2-6 % இருக்கலாம். அதற்கு மேலே போனால் நாடு கொஞ்சம் கொஞ்சமாக நிதி நெருக்கடிக்குள் போகிறது என்று பொருள். இந்தியாவின் முக்கிய சில்லறை பணவீக்க விகிதம் அக்டோபர் மாதத்தில் 7.41 சதவீதம் என்ற உச்சத்தில் இருந்துள்ளது. மூன்று மாதங்களில் குறைந்தபட்சமாக 6.77 சதவீதமாக சரிந்தாலும் நமது நாட்டின் 6% என்ற பாதிக்கப்பட்ட இலக்கைத் தாண்டியே இருந்து வருகிறது.
மேலும் இந்த குழுவின் அறிக்கையில் இந்தியாவின் இரண்டாவது காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 13.5 சதவீதத்திலிருந்து பாதியாகக் குறைந்து 6.3 சதவீதமாக இருந்ததையும், வேலையின்மை விகிதம் அக்டோபரில் 7.77 சதவீதமாகவும், செப்டம்பரில் 6.43 சதவீதமாகவும் இருந்ததையும் சுட்டிக்காட்டியது. உற்பத்தி குறைவு மற்றும் வேலையின்மைக்கு பணவீக்கத்தின் பெரும் பங்கு வகித்தது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் நாட்டில் GDP வளர்ச்சி என்பதும் சரிந்து வருகிறது. அதேபோல் FY23க்கான GDP வளர்ச்சி கணிப்பும் 7 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதமாக குறைந்துள்ளது. அதை சரிசெய்யவே ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைனில் ஆதாரின் எந்தெந்த விபரங்களை மாற்ற முடியும்? என்னென்ன தேவைப்படும் ?
ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம், ஆகஸ்ட் 2018க்குப் பிறகு இப்போது தான் மிக உயர்ந்த மட்டத்திற்கு மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த நிதியாண்டில் மத்திய வங்கியின் ஐந்தாவது வட்டி விகித உயர்வு இதுவாகும். இதற்கு முன், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மே மாதத்தில் 40 bps ஆகவும், ஜூன் , ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 50 bps ஆகவும் உயர்த்தியது .
இப்போது மாற்றப்பட்டுள்ள ரெப்போ விகிதத்தின் படி அடுத்த 12 மாதங்களில் பணவீக்கம் 4 சதவீதத்திற்கு குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் ஆய்வுகள் நுகர்வோரின் நம்பிக்கை மேலும் மேம்பட்டுள்ளதாகக் காட்டுகின்றன. விவசாயம், உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனங்கள் இதனால் நன்மை அடையும் என்றும் கொள்கைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் நிலையான வைப்பு வசதி (SDF) விகிதம் 6.00 சதவீதமாகவும் , விளிம்பு நிலை வசதி (MSF) விகிதம் மற்றும் வங்கி விகிதம் 6.50 ஆகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Repo rate, Reserve Bank of India