தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனமானது, பியூச்சர் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனத்தின் (Future Retail Limited) 200 கடைகளை கையகப்படுத்தி வேலையிழந்த ஊழியர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது.
கிஷோர் பியானி தலைமையிலான பியூச்சர் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனமானது, இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானுடன் சில்லறை விற்பனை தொடர்பாக கடுமையான சட்டப்போராட்டத்தில் சிக்கியுள்ளது. இதனால், அந்நிறுவனம் கடைகளுக்கான வாடகை பணம் செலுத்த தவறியது. இப்படி, அந்நிறுவனம், கடன் கொடுத்தவர்கள் மற்றும் நில உரிமையாளர்களுக்கு கொடுக்கு வேண்டிய நிலுவையில் உள்ள தொகை மட்டும் 6,000 கோடி ரூபாயை தாண்டியது.
இந்நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பிக்பஜார் போன்ற பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தின் கடைகளை கையகப்படுத்த தொடங்கியுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 2020ல் பியூச்சர் குழுமத்தின் சில்லறை மற்றும் தளவாட வணிகத்தை ரூ. 24,713 கோடிக்கு எடுத்துக் கொள்ள ஒப்புக்கொண்டது. எனினும், இந்த ஒப்பந்தம் இறுதி பெறுவதற்கு முன்பே, பியூச்சர் நிறுவனத்தின் பங்குதாரரான அமேசான் சில ஒப்பந்தங்களை மீறியதை மேற்கோள் காட்டி நீதிமன்றத்திற்குச் சென்றது. இதனால், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பியூச்சர் நிறுவனம் மேற்கொண்ட ஒப்பந்தத்தை நிறைவு செய்ய முடியாமல் போனது.
இதையும் படிங்க.. பர்சனல் லோன் வாங்கும் போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!
இதனிடையே, நஷ்டத்தில் ஆழ்ந்துள்ள பியூச்சர் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனத்தால், கடைகளுக்கான வாடகையை செலுத்த முடியாமல் போனது. இதனால், பல கட்டிட உரிமையாளர்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தை அணுகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பியூச்சர் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனமானது பிரபல பிக் பஜார் உட்பட 1,700க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது. இதில், ஒரு சில சில்லறை விற்பனை நிலையங்களுக்கான வாடகை பணத்தை செலுத்தாமல் உள்ளது. இதனால், அந்நிறுவனம் பல சில்லறை விற்பனை நிலையங்களை மூடும் நிலைக்கு சென்ற நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் கடைகளுக்கான வாடகையை செலுத்தி அந்நிறுவனத்தின் கீழ் அந்த கடைகளை இயக்க துவங்கியது.
இதைத்தொடர்ந்து, தற்போது அந்த கடைகளுக்கு மறுபெயரிடவும் தொடங்கியுள்ளது, மேலும் அங்கு வேலைசெய்யும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியம் கொடுக்கவும் முன்வந்துள்ளது. கூடுதலாக, இந்த கடைகளுக்கான பெரும்பாலான சரக்குகள் ரிலையன்ஸ் ஜியோ மார்ட்டால் வழங்கப்பட்டு வருகின்றன. ஏனெனில், பியூச்சர் ரீடெய்ல் லிமிடெட் பணமில்லாமல் தவித்து வருவதால், சப்ளையர்களுக்கான நிலுவைத் தொகையையும் அந்நிறுவனத்தால் செலுத்த முடியவில்லை. இதைத்தொடர்ந்து, ரிலையன்ஸ் நிறுவனம் பிக் பஜார் உட்பட பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தின் கடைகளின் பெயரை, தனது சொந்த பெயருக்கு மாற்ற உள்ளது.
அமெரிக்க இ-காமர்ஸ் நிறுவனமானது ஃபியூச்சர் குரூப் யூனிட்டில் 200 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்த போது, நிறுவனங்கள் கையெழுத்திட்ட 2019 ஒப்பந்தத்தின் விதிமுறைகளை ஃபியூச்சர் நிறுவனம் மீறியது என்று அமேசான் வாதிட்டது. அமேசானின் நிலைப்பாடு சிங்கப்பூர் நடுவரால் ஆதரிக்கப்பட்டுள்ளது.
அமேசான் நிறுவனம், பியூச்சர் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் நிறுவனம் எதிர்காலத்தில் போட இருந்த ஒப்பந்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் முதல் டெல்லி உயர்நீதிமன்றம் வரை,வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும்,கம்பெனி சட்ட தீர்ப்பாயம் முதல் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் மற்றும் சிங்கப்பூர் நடுவர் குழு வரை, ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தால், சிக்கலில் உள்ள ஃபியூச்சர் குழுவை மீட்டெடுக்கும் திட்டத்தை முடக்க அமேசான் தனது அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.
இதுவரை பியூச்சர் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனத்தின் நிலுவைத் தொகையை செலுத்துவதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் 1,500 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.