ஃபியூச்சர் குழுமம் கடும் நிதி சிக்கலில் இருந்தது. மேலும் பியூச்சர் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனமானது, இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானுடன் சில்லறை விற்பனை தொடர்பாக கடுமையான சட்டப் போராட்டத்தில் சிக்கியுள்ளது. இதனால், அந்நிறுவனம் கடைகளுக்கான வாடகை பணம் செலுத்த தவறியது. இப்படி, அந்நிறுவனம், கடன் கொடுத்தவர்கள் மற்றும் நில உரிமையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவையில் உள்ள தொகை மட்டும் 6,000 கோடி ரூபாயை தாண்டியது.
இதன்காரணமாக பல இடங்களில் சில்லறை விற்பனை நிலையங்களை மூடும் நிலைக்கு சென்றது. இந்நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பிக்பஜார் போன்ற பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தின் கடைகளை கையகப்படுத்த தொடங்கியுள்ளது. இதன்காரணமாக அந்த நிறுவனத்தின் ஊழியர்கள், கடன் கொடுத்தவர்கள், நில உரிமையாளர்கள் என பலர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
பியூச்சர் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனத்தில் 30,000 ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றலாம் என ரிலையன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கான பணி பாதுகாப்பை உறுதி செய்ததால் குழப்பத்தில் இருந்த ஊழியர்கள் இந்த தித்திப்பான செய்தியால் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நிறுவனத்தை நம்பி கடன் கொடுத்தவர்களும் சப்ளையர்களும் நிலுவைத் தொகை திரும்ப கிடைக்கும் என்பதால் தொழில் செய்வதில் சிக்கல் இருக்காது என்ற நம்பிக்கையில் உள்ளனர். இதுகுறித்து பேசிய நில உரிமையாளர் பங்கஜ் பன்சால், “ ஊழியர்கள் சம்பளம் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டனர். அவர்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே கிடைத்தது. இதனால் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்தனர். இப்போது ரிலையன்ஸ் வந்துள்ளது. இது ஒரு பெரிய வலுவான நிறுவனம் எனவே ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் கிடைக்கும்” என்றார்.இதுவரை பியூச்சர் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனத்தின் நிலுவைத் தொகையை செலுத்துவதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் 1,500 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.