ரிலையன்ஸ் ரீடைல் லிமிடெட் நிறுவனம் அமெரிக்காவின் புகழ்பெற்ற கேப் இன்க் (Gap Inc) பேஷன் பிராண்டுடன் நீண்ட கால ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது. இதன் மூலம் கேப் இன்க் நிறுவன பொருட்களை இந்திய சந்தைக்குள் ரிலையன்ஸ் நிறுவனம் களம் இறக்குகிறது. தனித்துவமான பிராண்ட் ஷோரூம்கள், பல்வகை பிராண்டுகள் கிடைக்கும் ஷோரூம்கள் மற்றும் வலைத்தளங்கள் மூலமாக கேப் இன்கின் பொருட்கள் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1969-ம் ஆண்டு அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் தொடங்கப்பட்ட கேப் இன்க் நிறுவனம் பாரம்பரியமாக டெனிம் வகை உடைகளை உலகம் முழுக்க வணிகம் செய்து வருகிறது. வெறும் ஆடைகளை விற்பதோடு மட்டுமில்லாமல் தனிமனிதர்கள், பல தலைமுறைகள் மற்றும் பல்வேறு கலாச்சாரங்களுக்கு இடையே உள்ள வெளியை அமெரிக்க பாணியின் மூலம் இட்டு நிரப்ப கேப் இன்க் நிறுவனம் முயல்கிறது. ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் கேப் இன்கின் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இளமையான, ஊக்கமளிக்கக்கூடிய ஆடைகளை இந்திய வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு வர உள்ளது.
ரிலையன்ஸ் ரீடைலின் ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் பிரிவின் தலைமை செயல் அதிகாரி அகிலேஷ் பிரசாத் “ரிலையன்ஸ் ரீடைலில் நாங்கள் எப்போதுமே வாடிக்கையாளர்களுக்குப் புதுமையான, சிறந்தவற்றையே கொடுத்துள்ளோம். தற்போது எங்களுடைய ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் பிரிவுக்கு ஒரு பெயர்போன அமெரிக்க பிராண்டான கேப் இன்கையும் இணைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். ரிலையன்ஸும் கேப் இன்கும் இணைந்து வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த ஆடைகள் மற்றும் பேஷன் பொருட்களைக் கொண்டு வருவோம் என நம்புகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
கேப் இன்க் நிறுவனத்தின், உரிமம் மற்றும் மொத்த விற்பனைக்கான சர்வதேச நிர்வாக இயக்குநர் அட்ரியன் ஜெர்னார்ட், “ரிலையன்ஸை போன்ற பிராந்தியம் சார்ந்த முன்னணி நிறுவனங்களுடன் இணைவதன் மூலம் உலகம் முழுக்க உள்ள வாடிக்கையாளர்களுக்கு எங்களுடைய பொருட்களைக் கொண்டுசேர்க்கமுடியும்.” எனத் தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் ரீடைல் லிமிடெட்
ரிலையன்ஸ் ரிடைல் லிமிடெட் நிறுவனம் ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் லிமிடட் நிறுவனத்தின் கிளை நிறுவனமாகும். ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் லிமிடெட் கடந்த வருடம் 199,704 கோடி ரூபாய் கொள்முதல் செய்துள்ளது. மேலும் 7,055 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் லாபம் ஈட்டக்கூடிய ரீட்டெயில் நிறுவனங்களில் ஒன்று. டெலாய்ட் சர்வதேச ரிடைல் நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் வளர்ந்து வரும் நிறுவனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. உலக அளவிலான சிறந்த ரீடைல் நிறுவனங்களில் 56வது இடத்தை ரிலையன்ஸ் பிடித்துள்ளது. மேலும் முதல் 100 இடங்களில் இடம்பெற்ற ஒரே இந்திய நிறுவனம் ரிலையன்ஸ் மட்டுமே.
கேப் இன்க்
கேப் இன்க் நிறுவனம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் உடல் அழகை பேணும் பொருட்களை விற்கும் ஒரு முன்னணி லைஃப்ஸ்டைல் பிராண்ட். இது ஓல்ட் நேவி (Old Navy), கேப் (Gap), பனானா ரிபப்ளிக் (Banana Republic) மற்றும் அத்லெட்டா பிராண்ட் (Athleta brand) உள்ளிட்ட பெயர்களில் விற்பனை செய்கிறது. இந்த நிறுவனம் ஷாப்பிங் அனுபவத்தை மேம்படுத்த ஆன்லைன் மற்றும் கடைகளிலும் விற்பனை செய்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Business, Reliance, Reliance Foundation, Reliance Retail