ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புகளான மொபைல் டவர் உள்ளிட்டவற்றை விஷமிகள் வன்முறைக்கு இலக்காக்கி சேதம் செய்த விவகாரத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வன்முறைச் செயல்களினால் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் உயிருக்கு ஆபத்து விளைந்துள்ளது. முக்கியமான தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டுள்ளன. இதன் துணை நிறுவனங்களின் சேவை மையங்கள் ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களில் பெரிய அளவில் இடையூறுக்கு ஆளாகின” என்று கூறியுள்ளது.
இதனையடுத்து வன்முறையில் ஈடுபட்டோருக்கு தக்க தண்டனை வழங்கவும் இனி வன்முறையில் ஈடுபடாதவாறு அச்சுறுத்தும் நடவடிக்கை மேற்கொள்ள அரசு தலையீடு அவசியம் என்றும் கோரி பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ.
விவசாயச்சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 1,500 மொபைல் டவர்களைச் சேதப்படுத்தியதாக செய்திகள் எழுந்தன. நவம்பரில் சில குழுக்கள் ரிலையன்ஸ் பிரெஷ் ஸ்டோர்களை பஞ்சாபில் மூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனையடுத்து இத்தகைய வன்முறை, சூறையாடலில் ஈடுபடுவோர்களுக்கு ‘உதவி’ வருகிறது என்றும் இவர்கள் ‘தூண்டிவிடப்படுகின்றனர்’ என்ரும் ரிலையன்ஸ் குற்றம்சாட்டியிருந்தது.
இத்தகைய சக்திகள் ரிலையன்ஸுக்கு எதிராக அவதூறு, களங்கப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று ரிலையன்ஸ் குற்றம்சாட்டியது.
“இத்தகைய அவதூறுப் பிரச்சாரங்களின் பொய்மைகள் கீழ் வரும் மறுக்க முடியாத உண்மைகளை தெளிவு படுத்துகிறது. இதனை உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லவிருக்கிறோம். இந்த உண்மைகள், ரிலையன்ஸுக்கும் விவசாயச் சட்டங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை நிறுவுகிறது, இந்தச் சட்டங்களினால் ரிலையன்ஸ் பயனடையாது.
இப்படி அவதூறாகத் தொடர்பு படுத்துவதன் மூலம் எங்கள் வர்த்தகங்களை அழிப்பதும் எங்கள் மதிப்பை சேதம் செய்வதுமே குறிக்கோள்” என்று ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று ஒப்பந்த வேளாண்மையில் ஈடுபட திட்டமும் இல்லை, எந்த ஒரு விவசாய நிலத்தையும் வாங்குவதில்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் விவசாயச் சட்டங்கள் குறித்து திட்டவட்டமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Court Case, Reliance Jio, Violence