ரிலையன்ஸுக்கு எதிராக அவதூறுப் பிரச்சாரங்கள்: மத்திய, மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்
ரிலையன்ஸுக்கு எதிராக அவதூறுப் பிரச்சாரங்கள்: மத்திய, மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்
ரிலையன்ஸ்
கார்ப்பரேட் வேளாண்மையில் நாட்டமுள்ள, இந்திய வேளாண்மையைக் கைப்பற்ற துடிக்கும் பன்னாட்டு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் ரிலையன்ஸ் மீது உண்மையே அல்லாத பொய்ப்பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டு மக்களின் கவனத்தைத் திசைத்திருப்புகின்றனர்
ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்புச் சேவை நிறுவனத்துக்கு எதிராக சிலர் அவதூறுப் பிரச்சாரங்களை மேற்கொண்டு நிறுவனத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகின்றனர், இவர்கள் யார் என்று அடையாளம் கண்டு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரிட் மனுத் தாக்கல் செய்துள்ளது.
மேலும் இந்த விஷமிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள நீதிமன்றம் வழிகாட்ட வேண்டும் என்றும் ரிட் மனுவில் குறிப்பிட்டுள்ளது.
“ரிலையன்ஸ் ஜியோ மற்றும் எங்கள் மூல நிறுவமனான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கும் எதிரான விரோதிகளும், ஏதோ ஒரு தற்பயன்களுக்காக அலையும் சில சுயநலமிகளும் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விவசாய சட்டங்களினால் பயனடையப்போவது எங்கள் நிறுவனமே என்ற அவதூறுப் பிரச்சாரத்தையும் பொய்ப்பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகிறது. ரிலியன்ஸ் தேசியவாத நோக்கங்களை கொண்டதாக உள்ளது. சீன உபகரணங்களைப் பயன்படுத்தாத ஒரே தொலைத் தொடர்பு நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோதான். ஏர்டெல், வோடபோன் சீன சாதனங்களையே பெருமளவு பயன்படுத்துகின்றன.
பிரதமரின் தற்சார்பு இந்தியா கனவுத்திட்டத்தின் திசையை நோக்கி பயணிக்கும் விதமாக ஜியோ நிறுவனம் உள்நாட்டு ஐந்தாம் தலைமுறை 5ஜி தொழில்நுட்பத்தை கட்டமைத்துள்ளது. இது அயல்நாட்டுச் சக்திகளுக்கு பொறுக்கவில்லை. அந்த அன்னிய நலன்களுக்கு ஆதரவாகச் செயல்படும் அரசியல் கட்சிகள் தேசியவாதத்தை விலைகொடுத்து சுயநலமிகளாக எங்களுக்கு எதிராக அவதூறுப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகின்றனர்.
ஜியோ ஏற்கெனவே இதுதொ டர்பாக தொலைத்தொடர்புத் துறை மற்றும் ட்ராயிடம் வோடபோன், ஏர்டெல்லுக்கு எதிராக புகார் அளித்துள்ளது. இந்நிறுவனங்கள் பெரும்பகுதி பன்னாட்டு நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது, இவர்கள்தான் எங்களுடன் சந்தைப் போட்டியில் நேரடியாக இறங்க முடியாமல் மறைமுகமாக சிலபல அவதூறு விளையாட்டுகளை ஆடி வருகின்றனர்.
இவர்கள் 2016-ம் ஆண்டு ஜியோ தன் சேவையை அறிமுகம் செய்த போது நெட்வொர்க்கில் இண்டர்-கனெக்ட் தர மாட்டோம் என்று மறுத்து எங்கள் மீதான காழ்ப்பை வெளிப்படுத்தினர். ட்ராய், தொலைத்தொடர்புத் துறை ஏர்டெல்-வோடபோன் - ஐடியாவுக்கு ரூ.3,000 கோடி அபராதம் விதித்தது. ஆனால் அதனை வசூலிக்க முனைப்புக் காட்டாததன் காரணம் விளங்கவில்லை. இதனால்தான் இன்று சட்டத்தை அவர்கள் கையில் எடுத்துக் கொண்டுள்ளனர். ரிலையன்ஸ் ரீடெய்ல் மட்டுமே சிறு வியாபாரிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. அமேசான், வால்மார்ட் போன்ற பன்னாட்டு பெரிய நிறுவனங்களுக்கு எதிராக ரிலையன்ஸ்தான் சிறு வணிகர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.
இந்த பன்னாட்டு நிறுவனங்கள் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் கற்பிக்க ஆர்வமாக உள்ளன. இதனால் தங்கள் பணபலத்தைப் பயன்படுத்தி இந்திய சிறு வணிகர்கள், சில்லரை வர்த்தகர்களை அழித்து தங்கள் ஆதிக்கத்தை இந்தியச் சந்தைகளில் நிறுவ முயல்கின்றனர். கிழக்கிந்திய கம்பெனி கையாண்ட அதே பிரித்தாளும் சூழ்ச்சியை இந்த பன்னாட்டு நிறுவனங்கள் கடைப்பிடிக்கின்றன. கார்ப்பரேட் வேளாண்மையில் நாட்டமுள்ள, இந்திய வேளாண்மையைக் கைப்பற்ற துடிக்கும் பன்னாட்டு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் ரிலையன்ஸ் மீது உண்மையே அல்லாத பொய்ப்பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டு மக்களின் கவனத்தைத் திசைத்திருப்புகின்றனர்.” இவ்வாறு ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.