Home /News /business /

டெஸ்லா ஆலைக்கு சிவப்பு கம்பள வரவேற்பு.. தமிழகம் உட்பட 5 மாநிலங்கள் போட்டா போட்டி..

டெஸ்லா ஆலைக்கு சிவப்பு கம்பள வரவேற்பு.. தமிழகம் உட்பட 5 மாநிலங்கள் போட்டா போட்டி..

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இங்கு தொழிற்சாலை அமைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்யும் என டிஆர்பி.ராஜா தெரிவித்துள்ளார்.

  எலெக்ட்ரிக் கார் தயாரிப்புக்கு மிகவும் பிரபலமானது எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட அந்நிறுவனம், டெஸ்லா கார்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு நெடுங்காலமாக முயற்சித்து வருகிறது.

  இந்தியாவில் விதிக்கப்படும் வரிகள் அதிகமாக இருப்பதால், இறக்குமதி வரியை குறைக்கும்படி மத்திய அரசிடம் பலமுறை டெஸ்லா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. எனினும், டெஸ்லா நிறுவனத்தின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இதனால், எலான் மஸ்க் கடும் அதிருப்தி அடைந்தார். எனினும், முயற்சியை கைவிடாத எலான் மஸ்க், தொடர்ந்து, இந்திய சந்தையில் கால் பதிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

  இதனிடையே, வரிக்குறைப்பு விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கை தங்களது மாநிலத்தில் உற்பத்தி ஆலையை அமைக்க வேண்டும் என ஐந்து மாநில அரசுகள் போட்டி போட்டு டெஸ்லாவுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளன.

  இதுதொடர்பாக சமீபத்தில் ட்விட்டர் பயனர் ஒருவர், எலான் மஸ்கிடம், "இந்தியாவில் டெஸ்லா எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த ஏதேனும் தகவல் உள்ளதா? என்று கேள்வி எழுப்பி பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், "இந்திய அரசுடன் இன்னும் நிறைய சவால்களை எதிர்கொள்கிறோம்" என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

  இதையடுத்து, எலான் மஸ்கிற்கு ஆதரவு தெரிவித்து இதே ட்வீட்டில் 5 மாநிலங்களின் அமைச்சர்களும் பதிவிட்டிருந்தனர். இதில், தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ், டெஸ்லா தொழிற்சாலையை தெலங்கானா மாநிலத்தில் அமைக்க முழு ஒத்துழைப்பு தரத் தயாராக உள்ளோம். இந்தியாவில், தொழிற்துறைக்கும், புதிய தொழிற்சாலைகள் அமைக்கவும் சிறந்த இடம் தெலங்கானா மாநிலம்" என்று பதிவிட்டார்.

  மேலும் படிக்க: ரயிலில் இருந்து ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை: அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு பதிலடி

  அவரைத் தொடர்ந்து மகாராஷ்டிர அரசின் நீர்வளத்துறை அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் தனது பதிவில், "மகாராஷ்டிரா இந்தியாவின் மிகவும் முற்போக்கான மாநிலங்களில் ஒன்றாகும். டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் நிலைநிறுத்தப்படுவதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் மகாராஷ்டிராவில் இருந்து கிடைக்கும். மகாராஷ்டிராவில் டெஸ்லா உற்பத்தி ஆலையை நிறுவ எங்களின் அழைப்பை விடுக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

  தொடர்ந்து, மேற்குவங்க அமைச்சர் குலாம் ரப்பானி தனது பதிவில், "மேற்கு வங்கம் வாருங்கள். இங்கு சிறந்த உட்கட்டமைப்புடன் தொலைநோக்குப் பார்வைகொண்ட எங்கள் தலைவி மம்தா உள்ளார். வங்காளம் என்றால் வணிகம்" என்று தெரிவித்துள்ளார்.

  தொடர்ந்து, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து, "எங்களின் 'பஞ்சாப் மாடல்' லூதியானாவை மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரித் துறையின் மையமாக உருவாக்கும் நோக்கம் கொண்டது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக எலான் மஸ்க்கிற்கு பஞ்சாப் அரசு சார்பில் அழைப்பு விடுக்கிறேன்" என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  இந்த நான்கு மாநிலங்களுக்கு மத்தியில், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தமிழகத்தில் தொழிற்சாலையை தொடங்க முன்வரவேண்டும் என மன்னார்குடி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ டிஆர்பி ராஜா அழைப்பு விடுத்துள்ளார். "இந்தியாவின் டெட்ராய்ட் ஆன தமிழகத்திற்கு உங்களை வரவேற்கிறோம் மிஸ்டர் மஸ்க். தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இங்கு தொழிற்சாலை அமைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்யும். எங்களது திறமையான இளைஞர்கள் நீங்கள் வேலையில் கவனம் செலுத்தும்போது அனைத்து சவால்களையும் சமாளிக்க உங்களுக்கு உதவுவார்கள். நாம் ஒன்றாகச் சேர்ந்து ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவோம்" என்று டிஆர்பி ராஜா டெஸ்லா நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

  இதையும் படிங்க: மிகவும் சலிப்பான வேலையை கொடுத்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த நபர்! இழப்பீடு வழங்க உத்தரவு
  Published by:Esakki Raja
  First published:

  Tags: Tamil Nadu

  அடுத்த செய்தி