ஜூன், 2021-ல் மத்திய ரிசர்வ் வங்கி மைக்ரோ பைனான்ஸ் ஒழுங்குமுறை குறித்த ஆவண அறிவிக்கையை வெளியிட்டது. அதாவது குறுங்கடன் திட்டத்துக்கான அறிவிக்கையை வெளியிட்டது.
இதன் வெளிப்படையான கோரல் என்னவெனில் ஏழைகளையும் உள்ளடக்கியது, கடன் வழங்குபவர்களிடம் போட்டியை ஏற்படுத்துவதன் மூலம் வட்டி விகிதத்தை குறைப்பது உள்ளிட்டவை ஆகும். ஆனால் இதன் தாக்கம் ஏழைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். காரணம் என்னவெனில் குறுங்கடன் வழங்குவதில் வசூலிக்க வேண்டிய வட்டிக்கு நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பை நீக்கி ஆர்பிஐக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது பணம் கடன் அளிக்கும் வங்கியல்லாத தனியார் நிதி நிறுவனங்கள், அல்லது மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் வட்டியை நிர்ணயித்துக் கொள்ளலாம். அரசு நிர்ணயிக்கும் உச்ச வரம்பு வட்டி விகிதத்தில் இல்லை. அதாவது நிர்வாக மேலாண்மைக் குழு ஒன்று அமைத்து வட்டியை நிர்ணயிப்பார்களாம். அப்போது போட்டி காரணமாக வட்டி குறையுமாம்.
அதாவது வட்டி விகிதத்தை இந்த நிறுவனங்களே முடிவு செய்யும். அப்படிச் செய்தால் நிறுவனங்களுக்கு இடையே உள்ள போட்டி காரணமாக வட்டி குறையும் என்பதே அறிவிக்கையின் பரிந்துரையாகும். பொதுவாக இப்படிப்பட்ட குறுங்கடன்களில் பயனடைவது கிராமப்புற ஏழைகளே குறிப்பாக கிராமப்புற ஏழைப் பெண்களே, மகளிர் சுய உதவிக்குழுக்கள் இத்தகைய கடன்கள் மூலம் தான் வாழ்வாதாரத்தைப் பேணி வருகின்றனர். இப்போது வட்டி உச்சவரம்பை நீக்கி விட்டால் இவர்களுக்கு பெரிய பிரச்சனைகள் ஏற்படும்.
இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புற ஏழைகள், பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் அளிக்கும் முறையையே ஒழித்து விடும் தனியார் வட்டி நிறுவனங்களுக்கு ஆதரவான வரைவு அறிவிக்கையாகும் இது என்று இந்தத் துறை சார்ந்த நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். பொதுத்துறை வங்கிகளிடமிருந்து குறைந்த வட்டியில் கடன் பெறும் சிஸ்டத்திற்கு மாற்றாக இதைக் கொண்டு வர முயற்சிக்கின்றனர். ஆர்பிஐ அறிவிக்கையில் அடிப்படை வட்டி விகிதம் 7.98% ஆக ஜூன் 2021-ல் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் சிறு நிதி நிறுவனங்கள் மற்றும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் இணையதளங்களின்படி பார்த்தால் உண்மையான வட்டி விகிதம் 22% முதல் 26% வரை என்கின்றனர் இந்தத் துறை சார்ந்தவர்கள்.
மைக்ரோபைனான்ஸ் கடனுக்கான வட்டி வேறு பல காரணங்களினாலும் பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு சங்கங்களின் வட்டி விகிதத்தை விட அதிகமாகும். எப்படி எனில். வங்கியல்லாத நிதி நிறுவனம், அல்லத் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து ஒருவர் ரூ.30,000 கடன் வாங்குகிறார் என்றால் 24 மாதங்களில் கடனை சமமான தவணைத்தொகை மூலம் திருப்பிச் செலுத்த வேண்டும். மாதம் ரூ.1,640 தவணையாக செலுத்த வேண்டும். இதில் கடன் தொகையில் ரூ.1,250 கழியும் மீதி ரூ.390 வட்டியாகும். முதல் மாதத்தில் சாதாரண வட்டி விகிதம் ஆண்டுக்கு 15.6%. ஆனால் முதல் ஆண்டு முடியும் போது வட்டி விகிதம் 31% ஆக இருக்கும். காரணம் மாதாமாதம் குறையும் முதல் என்பது ரூ.1,250 தான். ஆனால் கடன் தொகைக் குறையக் குறைய வட்டி குறையாது வட்டி அதேதான் இருக்கும்.
இதோடு புராசசிங் கட்டணம் 1% வசூலிக்கப்படும். அசல் கடன் தொகையிலிருந்து காப்பீடு தொகையும் கழிக்கப்படும். ஏனெனில் கடன் வாங்குபவர் திருப்பிச் செலுத்தவிலை என்றாலோ அல்லது இறந்து விடுகிறார் என்றாலோ கடன் வழங்குநர்கள் காப்பீடு கிளைம் செய்வதற்காக.
கிராமப்புற குறுங்கடன் திட்டத்தை தனியார்மயமாக்குவதன் மூலம் ஏழைகள் தனியார் நிதி நிறுவனங்களைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். கோவிட் 19 இன்னும் முடிந்தபாடில்லை எனும் போது வாழ்வாதார சிக்கல்கள் தீரவில்லை என்ற தருணத்தில் இந்த புதிய அறிவிக்கை வட்டி விகித உச்ச வரம்பை அகற்றுவது ஆபத்தை விளைவிக்கும் என்று நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். ஆர்பிஐ-யின் இந்த திட்டத்துக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குரல் எழுப்பி கிராமப்புற பெண்களுக்கான கடனுக்கான வட்டி ஆண்டுக்கு 12%க்கும் மேல் இருக்கக் கூடாது என்று கூறியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.