Home /News /business /

வீட்டு கடன், வாகன கடனுக்கான வட்டி உயரும்.. ரெப்போ ரேட் உயர்வால் சாமானியர்களுக்கான பாதிப்பு என்ன?

வீட்டு கடன், வாகன கடனுக்கான வட்டி உயரும்.. ரெப்போ ரேட் உயர்வால் சாமானியர்களுக்கான பாதிப்பு என்ன?

ரெப்போ வட்டி

ரெப்போ வட்டி

repo rate: தற்போது ரெப்போ வட்டி உயர்த்தப்பட்டுள்ளதால், வங்கிகள், வீட்டுக்கடன், வாகன கடன் போன்றவற்றுக்கான வட்டியை அதிகரிக்கும். இது வாடிக்கையாளர்களை நேரடியாக பாதிக்கும். 

    ரெப்போ ரேட் விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியதை அடுத்து வீட்டு கடன், வாகன கடன் ஆகியற்றுக்கான மாதாந்திர தவணை தொகை (EMI) உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திஸ்கந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது, பணவீக்கத்தை குறைக்கவும், பண புழக்கத்தை கட்டுப்படுத்தவும் ரெப்போ ரேட்விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.40 சதவீதமாகவும், ரொக்க கையிருப்பு விகிதத்தை (CRR) 50 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்து 4.50 சதவீதமாகவும் உயர்த்துவதாக அறிவித்தார்.

    கடந்த மே 2ம் தேதி முதல் இன்று காலை வரை நடைபெற்ற பணவியல் கொள்கைக் குழுவின்  திட்டமிடாத கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.  கடைசியாக கடந்த 2020ம் ஆண்டு  மே மாதம் ரெப்போ ரேட் விகிதம் குறைக்கப்பட்டது.  இரண்டு ஆண்டுகள் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

    ரெப்போ ரேட் என்றால் என்ன?

    சாமானிய மக்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்கு வங்கிகளில் கடன் பெறுகின்றனர். இவர்களுக்கு கடன் தரும் வங்கிகள், தங்களிடம் பணம் பற்றாக்குறையாக உள்ள சூழலில் ரிசர்வ் வங்கியிடம் பணத்தை கடன் பெறும். இவ்வாறு கடன் பெறும் தொகைக்கு விதிக்கப்படும் வட்டிதான் ரெப்போ வட்டி (Repo rate). பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியிடம் உள்ள முக்கிய கருவியாக ரெப்போ ரேட் பார்க்கப்படுகிறது.

    பாதிப்புகள் என்னென்ன?

    வங்கிகளுக்கான ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளதால் கூடுதல் வட்டியை கட்ட, வங்கிகள் அந்த வட்டி சுமையை தங்கள் வாடிக்கையாளர்கள் தலையில் சுமத்தும், அதாவது, ரெப்போ வட்டி உயர்ந்தால் வாடிக்கையாளர்களுக்கான வட்டியை வங்கிகள் உயர்த்தும், ரெப்போ வட்டி குறைந்தால் வாடிக்கையாளர்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்கும்.

    தற்போது ரெப்போ வட்டி உயர்த்தப்பட்டுள்ளதால், வங்கிகள், வீட்டுக்கடன், வாகன கடன் போன்றவற்றுக்கான வட்டியை அதிகரிக்கும். இது வாடிக்கையாளர்களை நேரடியாக பாதிக்கும்.

    ரெப்போ வட்டி விகிதம் குறித்து BASIC ஹோம் லோன் இணை நிறுவனர் & CEO, அதுல் மோங்கா கூறுகையில், ரெப்போ வட்டி விகித உயர்வு என்பது பணவீக்கம் மற்றும் பொருளாதாரத்தில் தற்போதைய பாதிப்பை எதிர்த்துப் போராட ரிசர்வ் வங்கி எடுத்துள்ள கணக்கிடப்பட்ட நடவடிக்கையாகும். ரெப்போ விகிதத்தின் அதிகரிப்பு என்பது மக்கள் வீட்டுக் கடன் வாங்கினால், சற்று அதிக வட்டி விகிதத்தை செலுத்த வேண்டியிருக்கும்.

    இருப்பினும், இந்த நடவடிக்கை தற்போது வீட்டுக் கடன் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது, ஏனெனில் தேவை மற்றும் வழங்கல் மற்றும் வாங்குவோர் போன்ற பல காரணிகள் வட்டியை தீர்மானிப்பதில்  முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், ரெப்போ ரேட் உயர்வு தொடர்ந்து உயர்வாக இருந்தால், அது பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று தெரிவித்தார்.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Repo rate, Reserve Bank of India

    அடுத்த செய்தி