பொதுத்துறை வங்கிகளில் 6 மாதங்களில் 96 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் பொதுத்துறை வங்கிகளில் 5,743 முறைகேடு புகார்கள் பதிவாகியுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதன் மூலம் 95 ஆயிரத்து 760 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதில் அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கியில் 2,939 முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அதன் மொத்த தொகை 25,416 கோடி ரூபாய் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கு அடுத்த படியாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் 10,821 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளது.
பரோடா வங்கி 8,273 கோடி ரூபாய் முறைகேட்டுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. அலகாபாத் வங்கியில் 6,508 கோடி ரூபாய்க்கும் பாங்க் ஆப் இந்தியாவில் 5,412 கோடி ரூபாயும் முறைகேடு நடந்துள்ளது.
யூகோ வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய மூன்றும் தலா 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்ததாக ரிசர்வ் வங்கியில் தெரிவித்துள்ளன. ஓரியன்டல் வர்த்தக வங்கியில் 3,908 கோடி ரூபாயும், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் 3,777 கோடி ரூபாயும் மோசடி பதிவாகியுள்ளது.
வங்கிகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அதன்படி கடந்த இரு ஆண்டுகளில் செயல்படாத நிறுவனங்களின் 3 லட்சத்து 38 ஆயிரம் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.