ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டு பயன்படுத்துவதில் உள்ள நன்மைகள் என்ன? தீமைகள் என்ன?

ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டு பயன்படுத்துவதில் உள்ள நன்மைகள் என்ன? தீமைகள் என்ன?

கோப்புப் படம்

உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டு இருந்தால், எந்தெந்த பணப்பரிவர்த்தனைக்கு அதிக ரிவார்ட் பாயிண்டுகள் கிடைக்கிறது என்பதில் கவனம் செலுத்துங்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மாத மாதம் வரும் பில்லிங் தொகை மிகப்பெரிய தலைவலியாக இருக்கும். இதனால் சீக்கிரமாக கிரெடிட் கார்டுக்கு விடை கொடுக்க நினைப்பார்கள். பட்ஜெட்டை முறையாக பராமரிக்கும் சிலர் கூடுதலாக மற்றொரு கார்டு பயன்படுத்தலாம் என்று நினைப்பார்கள். அப்படி பயன்படுத்துவதால் நன்மைகள் இருக்கும் அதேசமயத்தில் சில தீமைகளும் இருக்கின்றன. ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டு பயன்படுத்துவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை முதலில் பார்க்கலாம்.

கிரெடிட் கார்டை சரியாக தேர்தெடுக்க வேண்டும் : 

மாதம் பட்ஜெட்டை முறையாக பராமரிக்கும் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்ட் இருந்தால் சரியாக இருக்கும் என நினைப்பார்கள். அப்படி நினைப்பவர்கள், முதலில் அதிக சலுகைகள் கிடைக்கும் கிரெடிட் கார்டை தேர்தெடுக்க வேண்டும். மாறாக குறைவான சலுகைகளை கொடுத்துவிட்டு நம்மிடம் அதிக வட்டி வசூலிக்கும் கார்டுகளை தேர்தெடுப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு முதலில் நீங்கள் வாங்க திட்டமிட்டிருக்கும் கிரெடிட் கார்டின் விதிமுறைகளை முழுமையாக படிக்க வேண்டும். 

மேலோட்டமாக படித்துவிட்டு பின்னர் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது, ரிவார்ட் பாயிண்டுகள் இல்லை என புலம்புவதில் எந்த பிரயோஜனுமும் இல்லை. குறிப்பாக, நீங்கள் அதிக பயணம் மேற்கொள்பவராக இருந்து, டிராவல் கிரெடிட் கார்டை தேர்தெடுத்தால் விமான டிக்கெட் ஆஃபர், இலவச ஹோட்டல் வவுச்சர்கள், உணவுக்கு பில் செலுத்தும்போது கிடைக்கும் சலுகைகளை கொடுக்கும் கிரெடிட் கார்டை தேர்தெடுக்கலாம். மேலும், வண்டி எரிபொருள் நிரப்புவதற்கு சலுகைகள், ஷாப்பிங் மேற்கொள்ளும்போது வழங்கப்படும் கூடுதல் ரிவார்ட் பாயிண்ட்களை கருத்தில் கொண்டு கார்டுகளை தேர்தெடுக்கலாம்.

கிரெடிட் கார்டு லிமிட்டை உயர்த்த பயன்படும்:

ஒருவரின் கிரெடிட் லிமிட்டை ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டை பயன்படுத்துவதன் மூலம் உயர்த்திக்கொள்ளலாம். கிரெடிட் கார்டு மூலம் ஒருவர் வாங்கும் கடன் CUR ரேட்டிங் மூலம் கணக்கிடப்படும். CUR ரேட்டிங்களில் 30 விழுக்காட்டை கடந்தால், கிரெடிட் கார்டில் வழங்கப்பட்டிருக்கும் மொத்த கிரெடிட் லிமிட்டை குறைத்துவிடுவார்கள். அதற்கு குறைவான விழுக்காடு கடன் பெறுபவர்களுக்கு கிரெடிட் லிமிட்டை அதிகரிப்பார்கள். 

உதாரணமாக, ஒரு லட்சம் ரூபாய் கிரெடிட் கார்டு லிமிட் வைத்திருப்பவர் 40 ஆயிரம் செலவழித்தால் அவரின் CUR ரேட்டிங் 40% ஆகும். இதனால் அவரின் கிரெடிட் லிமிட் குறைக்கப்படும். இந்நிலையில், அவர் மற்றொரு கிரெடிட் கார்டு வைத்திருந்தால் CUR ரேட்டிங் 30 விழுக்காட்டை கடந்திருக்காது. இதன்மூலம், கிரெடிட் கார்டு நிறுவனங்கள் உங்களின் கிரெடிட் லிமிட்டை அதிகரித்து கொடுப்பார்கள்.

வட்டி இல்லாத காலத்தை பயன்படுத்துங்கள்:

கிரெடிட் கார்டில் வட்டி இல்லாத காலம் என்பது, நாம் பரிவர்த்தனை மேற்கொண்ட பணத்தை அனுமதிக்கப்பட்ட காலத்துக்குள் திரும்ப செலுத்துவதாகும். ஒவ்வொரு கிரெடிட் கார்ட் repayment காலம் 18 முதல் 55 நாட்கள் வரை வழங்கப்படுகிறது. இந்த காலத்துக்குள் தங்கள் பரிவர்த்தனைகள் முடித்து பணத்தை திரும்ப செலுத்தி விட வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு வட்டி இல்லாத காலம் அதிகம் கிடைக்கும். இதன்மூலம் தங்களுக்கு தேவையான பொருட்களை வட்டி இல்லாமல் வாங்கிக்கொள்ள முடியும்.

ரிவார்ட் பாயிண்டுகளை வெல்லுங்கள்:

உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டு இருந்தால், எந்தெந்த பணப்பரிவர்த்தனைக்கு அதிக ரிவார்ட் பாயிண்டுகள் கிடைக்கிறது என்பதில் கவனம் செலுத்துங்கள். அப்போது, மற்ற கிரெடிட் கார்டுகளுக்கு பணம் செலுத்துவது ஆகியவற்றால் உங்களுக்கு கூடுதல் வெகுமதி புள்ளிகளை பெற்றுத் தரும். குறிப்பாக, ஒரு கார்டில் இருந்து மற்றொரு கார்டுக்கு பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது கூடுதலான ரிவார்ட் பாயிண்டுகள் கிடைக்கும்.

அவசர காலத்துக்கு பயன்படும்:

நீங்கள் ஒரே ஒரு கிரெடிட் கார்டு மட்டும் பயன்படுத்தி வந்தால், அந்த கார்டு தொலைந்தாலோ அல்லது திருடு போய்விட்டாலோ நெருக்கடியான சூழல் ஏற்படும். புதிய கார்டுக்கு அப்பளை செய்தால் கூட உங்கள் கைகளுக்கு வந்துசேர ஏறத்தாழ ஒருவாரம் ஆகும். அத்தகைய நெருக்கடியான நிலையில், உங்களிடம் மற்றொரு கிரெடிட் கார்டு இருந்தால் கடினமான சூழலை எளிதாக சமாளிக்க முடியும். மேலும், மருத்துவச் செலவு உள்ளிட்ட எதிர்பாரத விபத்து காலங்களில் பில் கொடுப்பதற்கு இரண்டு கிரெடிட் கார்டுகள் இருந்தால் உங்களுக்கு உதவியாக இருக்கும். இதனால், யாரிடமும் சென்று பணத்துக்காக நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.

இரண்டு கிரெடிட் கார்டு பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் : 

பணம் செலுத்துவதில் குழப்பம்

ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு பல பில்லிங் தேதிகள் இருக்கும். அதனை முழுவதாக ஞாபகம் வைத்திருப்பது என்பது சவாலான விஷயமாகும். எந்தெந்த தேதியில் எந்த கார்டுக்கான பில்லைக் கட்ட வேண்டும் எனபதில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், உரிய காலத்தில் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால், நீங்கள் கூடுதல் வட்டி செலுத்த நேரிடும். கிரெடிட் கார்ட் கடன் லிமிட் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. சேமித்து வைத்திருந்த பணம் கடன் செலுத்துவதில் கரைந்துவிடும் அபாயமும் உள்ளது.

Also read... உங்கள் பட்ஜெட்டை பக்காவாக வைத்துக்கொள்ள சூப்பரான ஃபைனான்சியல் டிப்ஸ்..

அளவுக்கு மீறி செலவு செய்தல்:

பல கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள், தங்களின் வருமானத்துக்கு அதிகமாக செலவு செய்ய நேரிடும். ஏனென்றால், விழாக்காலங்களில் உடைவாங்குவது முதல் அனைத்துக்கும் பல்வேறு ஆஃபர்களையும், ரிவார்ட் பாயிண்டுகளையும் அள்ளி வழங்குவார்கள். அப்போது, கூடுதல் சலுகைகள் கிடைப்பதாக நினைத்து, தங்களின் வருமானத்துக்கு அதிகமாக செலவு செய்துவிடுவீர்கள். பிறகு மாதக் கடைசியில் கட்டணங்களை செலுத்துவதற்கு பணம் இல்லாமல் மேலும் கடன் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்படுவீர்கள். வரம்புக்கு மீறி செலவு செய்யும்போது தேவையானவற்றை வாங்குவதற்கு பணம் இல்லாத நிலையும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்

கிரெடிட் கார்டு ஸ்கோர் குறையும்:

புதிய கிரெடிட் கார்டுக்கு நீங்கள் விண்ணப்பிக்கும்போது, கிரெடிட் கார்டு வழங்குபவர்களிடம் ஏற்கனவே நிலுவையில் இருக்கும் கடன் தொகைக்கான விவரங்களை எடுப்பார்கள். அப்போது, புதிய கார்டுக்கு ஏன் விண்ணப்பிக்கிறீர்கள்? ஏற்கனவே இவ்வளவு கடன் இருக்கிறதே அதை எப்படி அடைப்பீர்கள்? போன்ற கேள்விகள் மூலம் உங்களை தீர விசாரிப்பார்கள். உங்களின் வருமானம் எவ்வளவு, அதற்கான பட்ஜெட் என்ன? மாதம் எவ்வளவு செலவழிக்கிறீர்கள்? என்பது போன்ற தகவல்களை முழுமையாக அறிந்த பின்னரே உங்களுக்கு புதிய கடன் அட்டையை வழங்கலாமா? வேண்டாமா என யோசிப்பார்கள். இதனால், உங்களின் கிரெடிட் ஸ்கோர் தானாகவே குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. இருப்பினும் முறையாக பணத்தை திருப்பிச் செலுத்தி வந்தால் உங்களின் CUR ரேட்டிங் அதிகரிக்கும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: