சிறிய மற்றும் நடுத்தர அளவில் செயல்படும் 30,000 க்கும் மேற்பட்ட பிராண்டுகளின் FMCG எனப்படும் வீட்டு தயாரிப்புகள் நாட்டின் பெரும்பான்மையான மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாகவும், அதே நேரத்தில் 20 சதவீதம் பேர் மட்டுமே பெரிய நிறுவனங்களால் விற்கப்படும் பொருட்களைப் பயன்படுத்துவதாகவும் கணக்கெடுப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானோர் ஆன்லைன் மூலமாகவும், சூப்பர் மார்க்கெட் மற்றும் மால்களிலும் விற்பனை செய்யப்படும் பிரபல பிராண்டுகளை மட்டுமே விரும்பு வாங்குவது போலவும், பிராண்டுகள் மீது மக்களுக்கு அதிக மோகம் இருப்பது போலவும் கட்டமைக்கப்பட்டு வந்த மாயைகளுக்கு அனைத்து இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை பதிலடி கொடுத்துள்ளது. ஆம், CAIT எனப்படும் இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலமாக இந்திய மக்களில் 80 சதவீதம் பேர் சிறு மற்றும் நடுத்தர பிராண்டுகளை அதிகம் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
30,000க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர பிராண்டுகளின் FMCG வேகமாக வாங்கப்படும் நுகர்வோர் பொருட்களான வீட்டுக்கு தேவையான சமையல், கிளீனிங் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், ஷாம்பூ, சோப்பு உள்ளிட்ட செல்ஃப் கேர் புரோடக்ட்ஸ் ஆகியவை இந்தியாவின் 80 சதவீத மக்கள்தொகையின் தேவைகளை பூர்த்தி செய்வதாக வர்த்தகர்களின் அமைப்பான CAIT இன் கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உணவு தானியங்கள், எண்ணெய், மளிகை பொருட்கள், தனிப்பட்ட அழகுசாதனப் பொருட்கள், உள்ளாடைகள், ஆயத்த ஆடைகள், அழகு மற்றும் உடல் பராமரிப்பு, பாதணிகள், பொம்மைகள், கல்வி விளையாட்டுகள் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பொருட்களின் பயன்பாட்டின் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
அனைத்து இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு(CAIT) தனது அறிக்கையில், "குறிப்பாக எஃப்எம்சிஜி துறை, நுகர்வோர் பொருட்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் போன்றவற்றில் சுமார் 3,000 பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் நாட்டின் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன என்பது ஒரு கட்டுக்கதை. உண்மையில், பிராந்திய அளவிலான 30,000 க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர பிராண்டுகள் இந்திய மக்களின் தேவையை பூர்த்தி செய்வதில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்குகின்றன" தெரிவித்துள்ளது.
Read More : பேமென்ட்ஸ் ஆப் மூலம் பணம் செலுத்தும் முன் இதை உறுதி செய்து கொள்ளுங்கள்.. SBI அறிவுறுத்தல்
சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களின் தயாரிப்புகள் தளர்வான அளவில் விற்கப்படுவதன் மூலம் பெரும்பான்மையினரின் தேவை பூர்த்தி செய்யப்படுவதாக கணக்கெடுப்பு கூறுகிறது. விரிவான ஊடகங்கள் மற்றும் வெளிப்புற விளம்பரங்கள் மற்றும் பிரபலங்களின் விளம்பரங்கள் காரணமாக பெரிய பிராண்டுகள் உயர் மற்றும் உயர் நடுத்தர வர்க்க மக்களை கவர்வதாக கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது.
மறுபுறம், சிறு உற்பத்தியாளர்களின் பிராண்டுகள் வாடிக்கையாளர்கள் மற்றும் கடைக்காரர்களுக்கு இடையேயான தொடர்பு மூலமாகவும், நடுத்தர, குறைந்த நடுத்தர வருவாய் பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள் மத்தியில் வாய் வார்த்தை மூலமாகவும் பிரபலமடைந்து விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்துள்ளது. அதாவது குறிப்பிட்ட தயாரிப்பை பயன்படுத்திய நபர், தனது அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் அதன் தரம் மற்றும் விலையைப் பற்றி பேச்சுவாக்கில் பகிர்ந்து கொள்ளும் சங்கதிகள் கூட சிறிய பிராண்டுகளின் விற்பனைக்கு அடித்தளமாக அமைவது தெரியவந்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.