ஏழை மக்களுக்கு உதவ ₹1.7 லட்சம் கோடி ஒதுக்கீடு..! - நிர்மலா சீதாராமன்

அடுத்த 3 மாதங்களுக்கு அரிசி அல்லது கோதுமை என 5 கிலோ வாங்கும்போது கூடுதலாக 5 கிலோ வழங்கப்படும்.

ஏழை மக்களுக்கு உதவ ₹1.7 லட்சம் கோடி ஒதுக்கீடு..! - நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
  • Share this:
கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய ஏழை மக்களுக்கு உதவ சுமார் 1.7 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

பிரதம மந்திரியின் ஏழை மக்கள் நல வாழ்வு திட்டத்தின் மூலம் 1.7 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய காலகட்டத்தில் ஏழை மக்கள் உணவு, பணம் இன்றி தவிக்கக்கூடாது. இதற்காக சிறப்புப் பொருளாதார திட்டம் பிரதமரின் ஆலோசனையின் பேரில் உருவாக்கப்பட்டது. பிரதமரின் ஏழை நலவாழ்வு திட்டத்தின் கீழ் தற்போது மாதம் 5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.


அடுத்த 3 மாதங்களுக்கு அரிசி அல்லது கோதுமை என 5 கிலோ வாங்கும்போது கூடுதலாக 5 கிலோ வழங்கப்படும். இதேபோல், மாநிலங்களுக்கு ஏற்ப பருப்பு வகைகளும் அடுத்த மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும். உழைக்கும் மக்களுக்கு நேரடியாகப் பணப்பரிமாற்றமும் செய்யப்படும்.

பிரதம மந்திரியின் விவசாயிகள் நலத்திட்டத்தின் கீழ் 8.69 கோடி விவசாயிகளுக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் 2000 ரூபாய் வழங்கப்படும். அடுத்த 3 மாதங்களுக்கு ஏழை, வயதான, விதவை மக்களுக்கு இரண்டு தவணைகளில் 1,000 ரூபாய் வழங்கப்படும்.

ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் மக்களுக்கு ஊதியம் நாள் ஒன்றுக்கு 182 ரூபாயிலிருந்து 202 ரூபாய் ஆக உயர்த்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்