பொது சேமநல நிதி உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களின் மீதான வட்டி விகிதங்களை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
பொதுவாகவே சிறுசேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதங்கள் தொடர்பான அறிவிப்பு ஒவ்வொரு காலாண்டிலும் வெளியாகும். இந்தவகையில், நடப்பு நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டுக்கான சிறுசேமிப்பு திட்டங்களின் மீதான வட்டி விகிதம் 0.4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வங்கி முதலீடுகளின் மீதான வட்டி விகிதங்கள் அதிகரித்ததன் எதிரொலியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 2018-19-ம் நிதியாண்டின் 3-வது காலாண்டுக்கான (அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை) சிறுசேமிப்பு திட்டங்களின் மீதான வட்டி விகிதங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.
5 ஆண்டுக்கான வைப்புத் தொகை, ரெக்கரிங் டெபாசிட், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் ஆகியவற்றுக்கான வட்டி விகிதங்கள் முறையே 7.8, 7.3 மற்றும் 8.7 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சேமிப்புக் கணக்கிலுள்ள வைப்புத் தொகை மீதான வட்டி விகிதம் 4 சதவீதமாகவே நீடிக்கும். மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் மீதான வட்டி விகிதம் 3 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பொது சேம நல நிதி மற்றும் தேசிய சேமிப்பு பத்திரம் மீதான வட்டி விகிதம் 7.6 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிமாக உயர்கிறது. கிசான் விகாஸ் பத்திரம் மீதான வட்டி விகிதம் 7.6 சதவிகிதமாக இருக்கும். கிசான் விகாஸ் பத்திரத்தில் முதலீடு செய்யப்படும் பணம் இனி 118 மாதங்களுக்கு பதிலாக 112 மாதங்களில் இரட்டிப்பாகும். பெண் குழந்தைகளின் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட `சுகன்யா சம்ரிதி’ சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம் 8.1 சதவிகிதத்திலிருந்து 8.5 சதவீதமாக உயர்கிறது. இதேபோல், 1-3 ஆண்டுகள் வரையிலான வைப்புத் தொகை மீதான வட்டி விகிதம் 0.3 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Interest rate hike, NSC, PPF