மின்விநியோகம் தனியார் மயமாக்கப்படும் என்ற அறிவிப்பால் மின்கட்டணம் அதிகரிக்கலாம்

மின்விநியோகம் தனியார் மயமாக்கப்படும் என்ற அறிவிப்பால் மின்கட்டணம் அதிகரிக்கலாம்

கோப்புப்படம்

மின்விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் அபத்தமானது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

 • Share this:
  மின்விநியோகம் தனியார் மயமாக்கப்படும் என்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பால் மின்கட்டனம் அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

   

  நாடாளுமன்றத்தில் பொதுபட்ஜெட்டை அறிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனியாருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனக் கூறினார்.

  இந்தியாவில் உள்ள அனைத்துவிதமான மக்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் விநியோகிக்கும் நோக்கில், புதிய மின்சாரத் திருத்தச் சட்டத்தின்படி, தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக கூறிய நிர்மலா சீதாராமன், எந்த விநியோக நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை பெறலாம் என வாடிக்கையாளர்களே முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்தார்.

  இந்நிலையில், மின்விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் அபத்தமானது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மின்சாரத்தை விநியோகிக்க தனியார் நிறுவனங்களுக்கென்று தனியாக கம்பி வழித்தடங்கள் இல்லை என்பதால் அவர்கள் பொதுத்துறை நிறுவனத்தையே நம்பியிருக்கும் சூழல் உள்ளது.

  அப்படி இருக்கும் நிலையில், பொதுத்துறை நிறுவனமே 24 மணி நேரமும் மின்விநியோகத்தை வழங்க முடியும் என்ற உத்தரவாதத்தை அரசால் கொடுக்க முடியும் என தெரிவிக்கின்றனர்.

  மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் தனியார் மூலம் மின்சாரம் விநியோகிக்கப்படும் நிலையில் அது தோல்வியடைந்து விட்டதாகவும், மின்நுகர்வோருக்கு பலனளிக்காது என்றும் தெரிவிக்கின்றனர்.

  நாட்டின் மொத்த மின்தேவையில் 50 சதவீதம் கூட நிறைவேற்ற முடியாத நிலையில் மின்வாரியம் இருப்பதற்கு காரணமே தனியாரிடம் அதிகவிலை கொடுத்து மின்சாரம் வாங்கி கடனில் தள்ளப்பட்டதுதான் எனத் தெரிவிக்கின்றனர்.

  2002ம் ஆண்டு வரை லாபத்தில் இயங்கி வந்த தமிழ்நாடு மின்சார வாரியம், அதன்பின் மின் உற்பத்தி தனியார் அனுமதிக்கப்பட்ட பின்னரே கடனில் தள்ளப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

  மின்விநியோகத்தில் தனியார் அனுமதிக்கப்பட்டால், மின்கட்டணம் அதிகரிக்கும் என்றும், அதனால் நுகர்வோர் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கின்றனர்.

  மின்விநியோகத்தை தனியார்மயமாக்கும் இத்திட்டத்தால், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தடைபடும் என்றும் அரசுக்கு வரும் வருமானத்தில் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கின்றனர். எனவே மின் விநியோகத்தை தனியாரிடம் வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

   
  Published by:Vijay R
  First published: