பிளாஸ்டிக் அகற்றும் விதிமுறைகளை பின்பற்றாததால் பிஸ்லெரி, பெப்ஸி, கோக், பதஞ்சலி நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமானது (CPCB) பெப்ஸி, கோக் மற்றும் பிஸ்லெரி ஆகிய நிறுவனங்களுக்கு கழிவுகள் மேலாண்மை விதியான நீட்டிக்கப்பட்ட தயாரிப்பாளர் பொறுப்பினை (EPR) சரிவர கடைப்பிடிக்காததால் அபராதம் விதித்துள்ளதுடன் விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பியுளது.
இதன் மூலம் கோகோ கோலா நிறுவனத்திற்கு அதிகபட்சமாக 50.66 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிஸ்லெரி நிறுவனத்திற்கு ரூ.10.75 கோடியும், பெப்ஸிகோ நிறுவனத்திற்கு 8.7 கோடி ரூபாயும் அபராதம் விதித்துள்ளது மாசு கட்டுப்பாட்டு வாரியம். மேலும் EPR விதிகளை கடைப்பிடிக்காதது தொடர்பாக கடந்த பிப்ரவரி 3ம் தேதி இந்நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 15 நாட்கள் இந்நிறுவனங்கள் விளக்கம் அளிக்க அவகாசம் தரப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் கழிவு
ஈபிஆர் என்பது ஒரு கொள்கை அணுகுமுறை ஆகும். அதன்படி ஒரு நிறுவனம் தான் உற்பத்தி செய்யும் பொருட்கள் அதன் பயன்பாட்டுக்கு பின்னதாக சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்வது, கழிவு மேலாண்மையை திறம்பட செய்வதை உறுதி செய்வது அந்நிறுவனத்தின் பொறுப்பாகும். இது பெரும்பாலும் பிளாஸ்டிக் கழிவுகளை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்களை சார்ந்ததாக உள்ளது.
மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிகபட்சமாக கோகோ கோலா நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது. கோக் நிறுவனத்திற்கு ஒரு வருட பிளாஸ்டிக் கழிவு உற்பத்தி இலக்காக ஒரு லட்சம் டன் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்நிறுவனம் ஆகஸ்ட் 2019 - செப்டம்பர் 2020 காலகட்டத்தில் 23,442 டன் கழிவுகளை மட்டுமே மறுசுழற்சி செய்துள்ளது தெரியவந்தது.

பதஞ்சலி
பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள், 2018-ன் படி பிளாஸ்டிக் கழிவுகளை தயாரிப்பவர் என்ற முறையில் பதஞ்சலி நிறுவனம் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் பதிவு செய்யாததால் அந்நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அந்நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.