தமிழக பட்ஜெட்டில் சில அம்சங்கள் வரவேற்கத்தக்கவை: ராமதாஸ்

அத்திக்கடவு - அவினாசித் திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது உள்ளிட்ட ஒரு சில திட்டங்கள் வரவேற்கத்தக்கவை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட்டில் சில அம்சங்கள் வரவேற்கத்தக்கவை: ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்
  • News18
  • Last Updated: February 8, 2019, 8:06 PM IST
  • Share this:
தமிழக பட்ஜெட்டில் நிலையான மண்டலங்கள், பாசனத்திட்டம் வரவேற்கத்தக்கவை; மற்றவை ஏமாற்றம் தான் என்று பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் குறித்து ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது: தமிழக பட்ஜெட்டில் அத்திக்கடவு - அவினாசித் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது உள்ளிட்ட ஒரு சில திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில் மீதமுள்ள அறிவிப்புகள் மக்களின் எதிர்ப்பார்ப்புக்கு மாறாகவும், ஏமாற்றம் அளிப்பவையாகவும் அமைந்திருக்கின்றன.

தமிழக அரசுக்கான நிதிநிலை அறிக்கையில் உழவர்களின் நலன் காப்பதற்கான திட்டங்கள் அதிக அளவில் அறிவிக்கப்படும் என்பது தான் அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டின் அளவான ரூ.8916 கோடியிலிருந்து ரூ.10,559 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பதைத் தவிர உழவர்கள் நலனுக்காக வேறு எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. பயிர்க்கடன் தள்ளுபடி, மூலதன மானியத் திட்டம், கொள்முதல் விலை உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளை எதிர்பார்த்த உழவர்களுக்கு அரசின் அறிவிப்புகள் ஏமாற்றமாகவே உள்ளன.


அதேநேரத்தில், 55 ஆண்டுகளாக உழவர்களால் வலியுறுத்தப்பட்டு வரும் கனவுத்திட்டமான அத்திக்கடவு - அவினாசி திட்டத்தைச் செயல்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதன்மூலம் அத்திட்டம் அடுத்த இரு ஆண்டுகளில் செயல்வடிவம் பெறக்கூடும். தமிழ்நாட்டில் உழவுத் தொழிலை மேம்படுத்த இன்னும் 40-க்கும் மேற்பட்ட பாசனத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியுள்ள நிலையில், அதற்கான பாசனப் பெருந்திட்டத்தை வகுத்துச் செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையில், அதைச் சமாளிப்பதற்காகவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்காகவும் சிறப்பாக எந்தத் திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. பொறியியல் பட்டதாரிகளுக்குத் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சியளிக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இது பொறியியல் மாணவர்களின் வேலைக்குச் செல்லும் திறனை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் இந்தப் பயிற்சிகளால் எந்தப் பயனுமில்லை.

பெருங்குடி, கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க ரூ.5,259 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும் போது இது மின்னுற்பத்திக்கு உதவும் திட்டம் போன்று தோன்றினாலும், குப்பைகள் எரிக்கப்படும் போது சுற்றுச்சூழலுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்படும். அதேபோல், சென்னையில் 2 லட்சம் வாகனங்களை நிறுத்தும் வகையில் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் திட்டம் அந்தப் பகுதிகளில் நெரிசலை அதிகரிக்கவே வழிவகுக்கும். மாறாக, நெரிசல் அதிகமுள்ள பகுதிகளைத் தனியார் வாகனங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பதே பயனளிக்கும்.தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அதிமுகத் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல் இரு ஆண்டுகளில் 1000 மதுக்கடைகளை மூடப்பட்டன. அடுத்த இரு ஆண்டுகளில் மேலும் 1000 மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். அதுகுறித்த அறிவிப்புகளை வெளியிடாமல், கடந்த காலங்களில் மூடப்பட்ட மதுக்கடைகளின் எண்ணிக்கையை மட்டும் அரசு வெளியிட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. இந்தப் புள்ளிவிவரங்களால் மக்களுக்குப் பயனில்லை.

தமிழக அரசின் கடன்சுமை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்வதும் கவலையளிக்கிறது. தமிழகத்தின் 2018-19 ஆம் ஆண்டுக்கான சொந்த வரி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதைவிட ரூ.1438 கோடி சரிந்து ரூ.1,10,178 கோடியாகக் குறைந்துள்ளது. அதேநேரத்தில் நிதிப்பற்றாக்குறை ரூ.44,176 கோடியாகவும், அரசின் நேரடிக் கடன் சுமை ரூ.3,97,495 கோடியாகவும் அதிகரித்துள்ளன. தமிழக அரசின் நேரடிக் கடனுக்கான வட்டி மட்டும் ரூ.33,226 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழகப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதற்கான அறிகுறிகளாக இவை தென்படவில்லை.

மொத்தத்தில் தமிழக நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க சில அம்சங்கள் இடம்பெற்றிருப்பது உண்மை. அதேநேரத்தில், அதன் பெரும்பாலான அம்சங்கள் ஏமாற்றம் அளிப்பவையாகவே உள்ளன என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க: மீன்பிடித் தடைக்கால உதவித்தொகைக்காக ரூ170.13 கோடி ஒதுக்கீடு
First published: February 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading