கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், வரலாறு காணாத உச்சமாக டீசல் ரூ.100 கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல பெட்ரோல் விலையும் 110 ரூபாயை கடந்து விற்பனையாகிறது.
எரிபொருட்களின் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகின்றது. இந்நிலையில், ஏப்ரல் 6ஆம் தேதி (புதன் கிழமை) பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, சென்னையில் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 34வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து, புதுச்சேரியில் மகளிர் காங்கிரஸ் சார்பில் விறகு அடுப்பில் பஜ்ஜி போடும் நூதனப் போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசு சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. அண்மையில், சமையல் சிலிண்டருக்கு 50 ரூபாய் உயர்த்தப்பட்டதால், தற்போது 1000 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.
Must Read : கடனை ஏற்கும்படி இந்தியாவிடம் இலங்கை கேட்பது நியாயமில்லை - அண்ணாமலை
இதற்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரி அண்ணா சிலை அருகில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை போட்டு, அடுப்பு மூட்டி வாணலில் பஜ்ஜி போட்டனர். மேலும், மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.