137 நாட்களுக்குப் பிறகு மார்ச் 22ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. கடந்த 9 நாட்களில் 8 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 9 நாட்களில் பெட்ரோல் விலை 5.29 ரூபாயும், டீசல் விலை 5.33 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்ட நிலையில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவுகிறது.
இந்நிலையில், மாநிலங்களவையில் நிதி மசோதா மீதான விவாதத்தின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ரஷ்யா-உக்ரைன் போர் நீண்ட நாட்களாக நடந்தாலும், இப்போதுதான் இந்தியாவில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்த்தப்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
இது முற்றிலும் உண்மையல்ல. கச்சா எண்ணெய் வினியோகத்தில் தடங்கல், போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை 2 வாரங்களாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. அதனால், கடந்த 8 நாட்களாக இங்கு விலை உயர்ந்து வருகிறது. சர்வதேச விலைக்கு ஏற்ப நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார்.
மேலும், பெட்ரோலிய பொருட்களை குறைந்த விலையில் விற்பதற்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள எண்ணெய் பத்திரங்கள் வினியோகிக்கப்பட்டன. அப்படி கொடுத்த பத்திரங்களுக்கு பொதுமக்கள் இப்போதும் பணம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.
Must Read : வெறும் ரூ. 500 இருந்தால் போதும்.. வீட்டில் உள்ள ஆண் குழந்தைகளுக்கு சேமிப்பை தொடங்கலாம்!
அத்துடன், 2026ஆம் ஆண்டு வரை எண்ணெய் பத்திரங்களை மீட்பது நீடிக்கும் என்பதால், இன்னும் 5 ஆண்டுகளுக்கு மக்கள் பணம் செலுத்த வேண்டி இருக்கும். வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்திலும் எண்ணெய் பத்திரங்கள் வெளியிடப்பட்டதாக கூறுகிறார்கள். அப்போது, வெறும் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்புள்ள பத்திரங்கள்தான் வெளியிடப்பட்டன. இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது என்றார்.
Read More : சுத்தம் இல்லாத கழிவறை.. கண்டுகொள்ளாத அதிகாரிகள்... 4 மணி நேரம் தவித்த ரயில் பயணி அபாயச் சங்கிலியை இழுத்ததால் பரபரப்பு
இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் உயர்ந்து 106.69 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 76 காசுகள் உயர்த்தப்பட்டு 96.76 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.